காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 5 - இராஜ்குமார்

காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 5
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குரோதமுணர்ந்து துடித்த இறகு...
சாதி வெறுக்கும் இதயம் தேடி
காற்றை கிழித்து பாதை செதுக்க ..
மஞ்சள் தெளித்த மாலைப்பொழுதில்
ஒற்றை பூ ஏந்திய அவனும்
காதலை ஏற்று மகிழ்ந்த அவளும்
உணர்வில் வாழும் உயிராய் .
சாதி மறந்த மனமாய் ..
மனிதத்தின் புது சுடராய் ...
இறகின் விழியில் விடியலை விதைக்க ..
வார நகர்வில் வர்ணனை தூவி
புனிதம் புதைந்து
காமமே வழிய ...
விதிகள் மடிந்து
தேகம் புணர்ந்தது...
கருப்பை கனக்க கருவும் வளர்ந்தது ..
அவனின் வீடும் ... அவளின் வீடும்..
சாம்பலில்லா சாதியை
வெட்ட வெளியிலும்
வெறியோடு இழுக்க .
காதல் இறந்து
அன்பும் அடங்கி
அதிகாரம் உச்சத்தில் உறுமியது
அவனிடமும் ....அவளிடமும் ..
குழந்தை பிறந்தது ...
சுயநலத்தை இறுக அணைத்து...
அவன் பிரியும் முன்னே
அவளும் பிரிய ...
கைக்குழந்தையை
காப்பக கணக்கில் வீசி
மகிழ்ந்தான் ...அவளின் அப்பன் ...
அவன் - மயக்கத்தில்
மற்றொரு மங்கையோடு ..
அவள் - ஆடம்பர
ஆசையில் அடுத்த ஆணோடு ..
காப்பகத்தில் ...
கண்ணீர் வற்றிய
குழந்தையின் கதறலில்..
உள்ளங்கையோடு உரசிய
இறகின் இதயம் பிளந்தது ...
தனியே உதிர்ந்த
தான் அனாதையெனில் ...
தனித்தே வீசப்பட்ட இக்குழந்தை ...??
அகராதியில்
'அனாதை" அர்த்த தேடலில்
தேடலே அர்த்தமற்றுப் போனது ...
தானே குளித்து ..தானே துவைத்து ..
தானே கழுவி ...அழுது ..அயர்ந்து ..
புரிதல் புரிந்தப் பொழுதோடு
குழந்தை வளர்ந்தது
குழந்தைமனம் தொலைத்து...
வறுமை தடுக்கா
வசதிகள் வளர
விருப்ப போர்வைக்குள்
நாகரீகம் நலிய
சுயநல சமூகமே சுற்றிலும் துரத்த
அன்பை தேடியே வளர்ந்தான் வாலிபனாய்.
நம்பிக்கையின் நகலாய்...
தியாகமே தொழிலாய்
விழிப்புணர்வை விதைத்த
இவனின் இமையை
இறகு மெல்ல வருடி
புதுக்கவிதை எழுதிய நாழிகையில்...
இவன் பாதத்தை தொட்டது ....
பச்சை நிற தாவணி தேவதையின் நிழல் ...
அவள் அழைக்கும் முன்னே ...
தரிசனம் தந்தவளுக்கு
அண்ணனாக வாழத் துடித்தான்
அனாதையின் அர்த்தம் அறிந்தவளோ ..??
அவளும் அனாதையாய் வளர்ந்தவளோ ..??
நீளும் நிஜத்தில்
ஆதரவின் அறம் நுழைத்து
அண்ணன் தங்கை வாழ ...
மின்னலும் மிரண்ட தடயம் வாசலில் ...
உயிரின் தாகம்
அன்பென அறிந்து
பாசம் பார்த்த பரவசத்தில்
பறவையானது இறகு ...
- இராஜ்குமார்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காற்றில் மிதக்கும் இறகின் முன் பகுதிகளை எழுதிய நண்பர் ஜின்னா மற்றும் சரவணா அவர்களுக்கும் ....
தேடல் ஐந்தை எழுத வாய்ப்பளித்த நண்பர் குமரேசன் மற்றும் தோழி வித்யாவிற்கும் ...தொடர்ந்து தேடலை படிக்கும் தோழமை அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...