வாழ்வில் நிறைவே நிலைக்கட்டும்

உலகின் போக்கினை நினைக்கின்றேன்
குற்றங்களை கண்டு குனிகின்றேன் !
வன்முறை நிகழ்வதால் வருந்துகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
ஒற்றுமை மறைந்ததை நினைக்கின்றேன்
வேற்றுமை விரிந்ததால் குனிகின்றேன் !
சாதிவெறி வளர்வதால் வருந்துகின்றேன்
நிலைதனை நினைத்ததால் அழுகின்றேன் !
அரசியல் அழுக்கானதை நினைக்கின்றேன்
சுயநலமே நிலைப்பதால் குனிகின்றேன் !
பொதுநலம் அழிந்ததால் வருந்துகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
மதங்களால் சச்சரவை நினைக்கின்றேன்
மனிதநேயம் மடிந்ததால் தலை குனிகின்றேன் !
கள்ளம் வெள்ளமானதால் வருந்திகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
கருணை கல்லானதை நினைக்கின்றேன்
நேர்மை இல்லாததால் தலை குனிகின்றேன் !
நீதியும் மறைந்ததால் வருந்துகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
எதிர்காலம் இருளானதை நினைக்கின்றேன்
ஏக்கங்கள் வழியவே தலை குனிகின்றேன் !
எங்களின் நிலைகண்டு வருந்துகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
காலமும் மாறிடுமென நினைக்கின்றேன்
முன்னோரை வணங்கிட குனிகின்றேன் !
வருங்காலம் நினைத்து வருந்துகின்றேன்
நிலைதனை நினைப்பதால் அழுகின்றேன் !
குனிந்த தலையும் நிமிர்ந்திடட்டும்
குறைகள் அனைத்தும் நீங்கிடட்டும்
வளரும் பிறைகளும் நிலவாகட்டும்
வாழ்வில் நிறைவே நிலைக்கட்டும் !
பழனி குமார்