பாவத்தின் மணல் விரித்த பாலைவனம்

இருவரும்
சேர்ந்து செல்வதாய்த் தான்
இந்த யாத்திரைக்கென்னை
அழைத்து வந்தாய் !
ஆனால் -
கருகிய மரக் கூட்டம்
படர்ந்த
காணாக் கருங்காட்டில்
கொடுமேகம் சூழ்ந்து
பெய்த தூரலில்
சிறு துளி விஷம் சேர்த்து
எனைப் பருக வைத்து
அனாதையாய் விட்டுச் சென்றாய் !

உன்னிதயம் பற்றித்
தொடர்ந்த
என் சிறு விரல் தவிர்த்து
நிறைய ஆயுதங்களை
உன் கொஞ்ச சொற்களில்
மறைத்து -
என்னை கூறு போட்டாய் !

ரகசிய உளவறியும்
ஒற்றனின் பாசாங்குடன்
என் சம்மதத்தைப் பெற்றே
உனது நேசம் நோக்கிப்
பாய்ந்த
எனது ஏவுகணைகளின்
கண்களெங்கும்
நீயுனது
துருப் பிடித்த ஆணியை
அடித்தாய் !

பசியோடு காத்திருந்தவனின்
கொதி உலை
சோற்றுப் பானையினை
எட்டியுதைத்த
உனது
கருணையின் கரிசனங்களால்-

என் நம்பிக்கையைக்
கொன்றொழித்த
சாம்பல் குவித்து
சாமம் முழுக்க
கண் விழித்த
விழியெரி சூட்டில்
பாவத்தின் மணல் விரித்த
பாலைவனமொன்றில்
காத்திருக்கிறாய் -
அப்போதும்
உன் பாவ விமோசனப்
பலி பீடத்தில்
என்னைக் கிடத்தியிருக்கிறேன்
உயர்த்து
உன் கொடுவாளை
சற்றும் யோசிக்காதே
ஏனெனில்
காதலைக் கொள்வதை
விட
காதலனைக் கொல்வது
மேல் .

எழுதியவர் : பாலா (14-Dec-14, 7:30 pm)
பார்வை : 153

மேலே