காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 9 - மீமணிகண்டன்
ஆகாயப் பாதையிலே சிறகடிக் கையிலே
ஆதாயப் பார்வைமனம் சிதரடிக் கையிலே
ஆராய்ந்து வெற்றிகாணும் அழகு நோக்கிலே
ஆடித்தன் பாதைமாற்றி இறகு பிரிந்ததே
பாதிவழி கடக்கையிலே மேக வூரிலே
படுத்தேநல் ஓய்வெடுக்க மனது கேட்கவே
பாவமந்த இறகுமென்று பஞ்சும் எண்ணவே
பக்குவமாய் இடங்கொடுத்து உறங்கச் சொன்னதே.
உறக்கமில்லை சுட்டெரிக்கும் ஆதவ னாலே
உலர்ந்துகெட்ட உருவமற்ற காற்றத னாலே
உண்மையென்ன? இறகுகேட்க உருகி மேகமே
உறிஞ்சுதற்கு மரங்களில்லை என்று நொந்ததே.
தத்தியேரித் தன்வழியைத் தொடரத் தொடங்க
தாண்டிவந்த தூரமது தாகங் கொடுக்க
தயக்கமுடன் தொட்டவிடம் கல்மலை யொன்று
தாவியங்கு பார்த்ததெங்கே நீர்நிலை யென்று.
வெடிபிளந்த மலைவளங்கள் வெறுமை காட்டவே
வேகமற்று வழிப்பயணம் அசதி கூட்டவே
வேதனையை மறப்பதற்கு நிழலைத் தேடவே
வெட்டுண்ட மரவளத்தால் சரிந்து நின்றதே.
"ஊணுறக்கம் ஓய்வென்ற அடிப்படை தேய
உயரமான வாழ்க்கையென்று எதுவும் உள்ளதோ ?
உதிக்கவந்த சூரியனை ஒதுக்கி அமிழ்த்தி
ஒருகோடி விளக்கெரித்தல் சாதனை யாமோ ?
பூதமைந்தில் ஒன்றுவற்றிப் போகும் எனிலோ
பூமிவாழத் தகுதியற்றுப் போகும் என்பதை
புரிந்துகொள்ள மறுக்குமிந்த புத்தி வற்றிகள்
புலப்படுத்தத் துடிப்பதெதை புரிய வில்லையே ?
ஆறுமணல் மலைமரங்கள் அத்துனை வளமும்
ஆதாரம் நீர்க்கென்ற உண்மை மறந்து
ஆதாயம் ஈதெனவே அழிவை யழைத்து
ஆறறிவுக் காவலர்கள் போவதும் எங்கே ?"
மனமொழியை யாரறிவார் மறுப்ப தெப்படி
மடுப்பாரோ செவியென்றே மண்ணில் புரண்டழ
மறுபடியும் மலரவைக்கும் மார்க்கம் ஒன்றெழ
மைக்குடுவை தேடியதில் இறகுகு தித்ததே !
______________________
மீ.மணிகண்டன்
14-Dec-14
( "காற்றில் மிதக்கும் இறகு" பயணத்தில் யானும் ஒரு பக்கமாவதற்கு பங்குபெறுவதற்கு வாய்ப்பளித்த அன்பர் திரு. குமரேசன் அவர்களுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன் )