காற்றில் மிதக்கும் இறகு தேடல் -18

மன்பதைகளால் ஏவப்பட்ட
காற்றில் மிதக்கும் இறகே -உன்
தலை குனிந்து -இவ்
வையகத்தை உற்றுப் பார்த்து -அங்குள்ள
வெண்மை நிறக் கூட்டத்தைக் கண்டு -உன்
இறகுகளின் கூட்டம் என எண்ணி
அங்கே செல்கிறாயா காற்றில் மிதந்த படி ~

உன் கூர்மையான நுனி -நீ
இறகுகளின் வெண்மைக் கூட்டம்- என
தவறாக எண்ணிய உன் தேடல் -அங்கு
வெள்ளைப் புடவை அணிந்தது
வீற்றுஇருக்கும் அவளை தாக்கி
உதிரத்தை சிந்த விடப் போகுது -இனி
அவள் குங்குமம் இல்லாத குமுதம் ஆகிவிட்டாள் ~

அவளைக் கண்டவுடனே -அவள்
மடியில் வீழ்ந்து விட்டாயா -உனை
அவள் தன் கரங்களால் கைப்பற்றி -இரு
விரல்களைக் கோர்த்து -உனைச்
சுற்றிய வண்ணம் தன்னுடைய
துயரத்தை உனக்கு உரைக்கின்றாளா

தன் கணவனின் நினைவை
எய்ப்பில் வைத்துவிட்டாள்-தன்
பிள்ளைச் செல்வங்களை மனதில் சுமந்து கொண்டு -தனது
தள்ளாடும் வயதில் அவன் நினைவுகளோடு வாழுவதற்கு என்று

தன் மனதை சுற்றியே -ஒரு
காவற்காடு காற்றும்
நுழையா வண்ணம் மிக அடர்த்தியாக
கணவனை இழந்த பின்பு -தனக்காக
மாக்கள் அறம்பாடும் பாடலை
கேட்டும் கேட்காததும் போல இருப்பதற்கு என்று

குங்குமம் படிந்த நுதலும்
வெறுமை படிந்த நுதலாக மாறிவிட்டதே -மல்லிகையும்
மணம் இழந்து போய் விட்டதே என்று -தன்
மன வேதனைகளை உன்னிடம் உரைக்க

அவள் கைகளில் இருந்து நீ நழுவி -உன்னுடனே
அவளை காற்றிலே மிதந்தபடி அழைத்துச் செல்கிறாயா -அவள்
உன்னுடன் கண்ணீரை சுமந்தபடி செல்கின்றாள்

ஐம்பூதங்களையும் ஆளும்
சக்தி கொண்ட பெண்மையே
வளியை மட்டும் இவளால் -தன்
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லையே
இறகோடு இறகாய் -தன்
கவலைகளையும் ஏந்தி செல்கிறாளே

மஞ்சரி போல இவள் வாழ்வை
மண்ணுக்கு இல்லாமல்
விண்ணுக்கு கொண்டு செல்கிறதே
காற்றில் மிதந்த படி -இவள்
ஆசைகளை வானில் புதைக்க

வானவில்லின் வர்ணங்களான- இவள்
வாழ்வை கலங்கடித்த வெண்மையே
முழுமையாய் இவள் கனவுகளை
காற்றில் மிதக்கும் இறகாய்
வெண் மேகங்களுக்குள் அடைத்து விட்டாயே

தமிழ் மரபுக்கு பணிந்து
உலக நடையறிந்து ஒழுகுகிறாள்
ஏதிலாரால் ஊதப்பட்ட இறகாய் -உன்னுடனே
அவனை நாடி இவள் தேடல் ..
காற்றோடு காற்றாக..


(இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் என் மனம் ஆழ்ந்த நன்றிகள் )

எழுதியவர் : keerthana (24-Dec-14, 11:19 pm)
பார்வை : 254

மேலே