காற்றில் மிதக்கும் இறகு

காற்றில் மிதக்கும் இறகு. ...


(மு.குறிப்பு. ...தோழர் குமரேசன் அவர்கள் கவிதையின் தலைப்பு எனை ஈர்த்தது. ..அதன் விளைவே இக்கவி....நன்றி தோழரே. .ஜின்னா அவர்கள் பயன்படுத்திய படமே நானும் பயன்படுத்தியுள்ளேன்.நன்றி தோழரே)


மெல்லிய இறகொன்று
மெதுவாய் தொடுகிறது
என்னை....
சொல்லிய வார்த்தையில்
சோகம் புரியுது
எனக்குள்ளே....

------------------------------

காற்றோடு காதல் பேசி
என்
கண்ணீரை கவிதையாக்கிய
மெல்லினமே!

கைவிரல்களால் உனைத்தடவி
உணர்கிறேன்
காணாத சுகமொன்று
கண்டு மகிழ்கிறேன்.....

சுவாசிக்க தடுமாறிய
என்னிதயம்
சிலிர்க்குது புதிதாய்....


சந்தோஷம் என்னுள்ளே
சடுதியில் மலருது
சில நினைவோடு....



விட்டுப் போன ஒரு
' சொந்தம்'
விடைதேடிய ஒரு
' கேள்வி'

என்
விரலிடுக்கில்
வந்தமர்ந்ததாய்
உணர்கிறேன். ...

-------------------------------
மெல்லிய இறகொன்று
மெதுவாய் தொடுகிறது
என்னை.....


நான் கண்ணுறங்கும்
நேரம் வரை.....
'விழிமூடா' என்
தாயின் பாசம்
உன்
மெல்லிறகில் உணர்கிறேன். ...


மேகம் இரண்டு
தொட்டுக்கொண்டு
மழைபெய்த நள்ளிரவு
குளிர்காற்றாய்
உன் இதழ்களை
உணர்கிறேன். ...

------------------------------

மெல்லிய இறகொன்று
மெதுவாய் தொடுகிறது
என்னை....


இறகினைத் தொட்ட
மறு நொடியே இந்த
மென்மைக்கு சொந்தமான
பறவையை நினைக்குது
என்னுள்ளம்....


இறகிடமே கேட்கிறேன்.....
'உனைத் தொலைத்து விட்ட
பறவையின்
உயிர்வலி உனக்கு புரியுமா
என்று.'......


சில நிமிடங்களில் என்
சிந்தனை மாறிப்போனது...
சின்னப் பறவையே....!
நீ
தொலைத்து விட்டஇறகினை
தேடி அலைவாயோ....
இல்லை
மறந்துவிட்டு மறுவாழ்வு
வாழ்ந்திடுவாயோ...


அப்படியாயின்

இறகே.......

நீ!
விலாசம் தடுமாறிய
கடிதமானாயோ....!
விதியின் பிடியில்
வலிமை இழந்தாயோ....!
எங்கெங்கோ சுற்றி
எனைச் சேர்ந்தாயோ...!
இல்லை
அம்மாவை இழந்த என்னைப்போல
அனாதை ஆனாயோ......!

எழுதியவர் : நிஷா (24-Dec-14, 11:26 pm)
பார்வை : 363

மேலே