இது எனது உலகம் இல்லை
கட்டுப்பாடற்ற வனாந்திரத்தில்
சுற்றிக்கொண்டிருந்தபோது
படைப்பாற்றல்
கற்பக விருட்சமாய் இருந்தது
அது தந்த கவிதைகளில்
மனதை மயக்கும் வாசனை மிதந்தது
உங்களை என் வசப்படுத்தும்
வண்ணம் வசீகரித்திருந்தது
ஒற்றையடிப் பாதையில் பயணிக்காமலே
நீங்கள் அதன் வளைவு நெலிவுகளை
கண்டு ரசித்தீர்கள்
பறவைகளின் குரல் ஒலியை
உள்வாங்கிய வரிகள்
உங்களையும் பாடச் செய்தது
உங்களின் உள்ளத்திற்குள்
பரவச முட்டைகளை இட்டுச் சென்றது
அது மகிழ்வலைகளாய் வெடித்து
வானமெங்கும் சிறகடித்துப் பறந்தது
திடீரெனப் பாய்ந்து செல்லும் முயல்கள்
உங்கள் மனக் குகைக்குள்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
அவ்வப்போது நடமாடும் பாம்புகள்
உங்கள் இதயத்தைப் பற்றிக் கொள்ளும்
சில நேரங்களில்
உங்களை விழுங்கியும் விடும்
சூழ் நிலைகள்
உங்களைக் கட்டிப் போடுகையில்
உற்சாகத்துடன் தாலாட்டிட
ஆலமரம் விழுதுகளை
இறக்கி விட்டிருக்கும்
வீடு உங்களை விரட்டும்போது
செடிகொடிகள் தான்
வரவேற்று அரவணைத்துக் கொள்ளும்
தோல்விகள் உங்களை
வாட்டி வதைக்கும்போது
கவிதைகளில் பரவிக்கிடக்கும்
இயற்கையின் நிழல்
இதம் கொடுக்கும்
இன்றைய நாட்களில்
கவிதை தரும் காட்சிகளோ
கண்களில் மண்ணைத் தூவி விட்டன
வெறும் மணற்புயலும் வெக்கையுமே
என்னை ஆக்கிரமிக்கின்றன
அன்றைய கவிதைகள் போல்
எனது இன்றைய கவிதைகள்
அவ்வளவு சுகமானதாய் இல்லை
இன்று எழுத ஆரம்பித்தால்
குருதியைக் கொட்டுகிறது சிந்தனை
எழுதி முடிப்பதற்குள்
கடும் கோடையும் கானல் நீரும்
என்னைச் சுற்றிலும் நிறைகிறது
வாசிப்பதற்கும்
கடுமையானதாய் இருப்பதாய்
நீங்களும் ஆமோதிக்கிறீர்கள்
விடும் பெருமூச்சை
என் ஆற்றாமையுடன் இணைக்கிறீர்கள்
ஒரு மௌன இருளுக்குள்
புதைந்து போகிறீர்கள்
என்னைப் பார்க்கத் திறனின்றி
வெட்கப்படுகிறீர்கள்
ஒரு வீட்டு மனையை வாங்கி
வீடு கட்ட ஆரம்பித்திருக்கும் நீங்கள்
மனச்சுமை குறையவும்
சுகம் கொடுக்கவும்
நல்ல கவிதை வேண்டும் என்கிறீர்கள்.,
கம்பி வேலிகளும்
அளவு கற்களும் நிறைந்த
எனக்குக் கவிதைகள் தந்த
அந்த அழிக்கப்பட்ட வனத்தில்தான்
இப்போது
நீங்கள் ஒரு வீட்டைக்கட்டுகிறீர்கள்
என்பதை அறியாமல் !