ஊர் என்ன சொல்லும்

சாலையோரம்
தடுக்கி விழுந்தவன்
எழுந்ததும்பார்க்கிறான்
சுற்றும் முற்றும் -
நல்ல வேளை
யாரும் பார்க்கவில்லை !
கையின் சிராய்ப்புக்
காயம்கூட வலிக்கவில்லை !

ஊர் என்ன சொல்லும் ?
சாதாரண மனிதன்
சதா நேரமும் பயந்து கொண்டே
சாகாமல் சாகும் கேள்வி !

இந்த கேள்விக்கு பயந்துதான்
மாந்தரெல்லாம் தங்களது
பகுத்தறிவைக் கூட
பயன்படுத்துவதில்லை !

அடுத்த வீட்டுக்காரனின்
அக்கறையில் பொதிந்த
பரிகாசக் கேள்வியை
கற்பனையிலேயே பயக்கின்றான் !

தெருவில் நடக்கையிலே
அருகதையற்றவன் கூட
இகழ்ச்சியாய் நோக்குவதாய்
சுருண்டு போகின்றான் !

நம் வீட்டு பிள்ளைகளின்
நல்ல விருப்பங்களை கூட
அடுத்தவன் கேள்வி அடங்கினால்
மட்டுமே நிறைவேற்ற முயலுவோம் !

தீமைகளை ஒடுக்கவே
சமுதாய பயங்கள் -அன்று
அவசியமாயின ! இன்று
சீர்திருத்தங்களும் கூட
சமுதாயத்திற்கு பயந்து
முடக்கப்படுகின்றன !

தாயை அடித்தாலும் -இன்று
இரண்டு பட்ச விவாதங்கள் !
யார் தவறு யார்தான் சரிஎன்று
ஊரங்கு இரண்டு படும்!

பக்தியைக் கூட -இன்று
பயம்தான் தோற்றுவிக்கிறது !
என்றுமே கேட்டிடாத
ஊர்பேச்சின் பயத்தால்
நன்மையிங்கு ஊமையாகும் !
தின்மைகளோ ஆர்ப்பரிக்கும்!


தீங்கு விளைவிக்கா
தீர்க்கமான முடிவும்
நன்மையை நாடிடும்
நாணயம் கொண்டு
நாம் துணிந்தால் -அந்த
நல்ல செயல்களுக்கு
பயம் வேண்டாம் நமக்கு !

எப்பொருளிலும்
மெய்ப்பொருள்
காண் என்ற நமது
பொய்யாமொழிப்
புலவனின் குரலுக்கு
மட்டும் செவி கொடு !

எழுதியவர் : ஜி ராஜன் (27-Dec-14, 11:58 am)
Tanglish : oor yenna sollum
பார்வை : 105

மேலே