சித்தாள் பெண்ணொருத்தி

எ மாமன் கண் விழிச்சி
கண் என தேடயில
கசக்கிய கண்ணோடு கொல்லப்புறம்
வந்து நின்னான்.
கஞ்சி பானையெல்லாம் கழுவி நா கவுக்க
களவாணி பயபோல பின்னால வந்து
நின்னு கட்டி என அணைச்சான்

ஐய போமாமா ஆசய பாரு காலயிலே
வெலயாட்டா சினுங்கி தள்ளிநின்னேன்,
லேசா பிடிச்ச கையி இருக்கி என அணைக்க,
மீச முள் குத்த குத்த கன்னத்துல முத்தம் வச்சான்.

உறவெல்லாம் எதிர்த்து நிக்க காதலிச்சு
கட்டிகிட்டோம்,
ஆறு மாசத்திலயே நூறு வருச நெனப்பிருக்கு,
அவன் கட்டுன வெரும் மஞ்ச கயிறு
வைரம் மாதிரி ஜொலிக்கிது நெஞ்சுக்குள்ள.

குளிச்சு மாமன் வாரயில
கஞ்சி பானை முன்ன வச்சு
நேத்து வச்ச மீன் கொழம்பும் வெங்காயம் ரெண்டும் வச்சு
குத்தவச்சு நா அமர்ந்தேன்
மாமன் பக்கதுல.

கஞ்சி ருசிக்கயில என் கன்னம்
தடவயில,
வெங்காயம் கடிக்கயில என் உதட்ட
ரசிக்யில,
கண்ணாலே சேதி சொன்னான்,
என்னையும் குடிக்க சொன்னான்.

காசு பணம் இல்லாட்டிலும்
ராணி மாதிரி வச்சிருக்கான்,
உன் கூட கஞ்சி குடிக்கயிலும் தேனு
மாதிரி இனிக்குதய்யா,
மாளிகை வாசமெல்லாம்
இந்தக்குடிசையில வீசுதய்யா....

மாமன் வேலைக்கு போகயில,
கஞ்சி பிசுறு ரெண்டு அவன் மீசயில
கெடக்கயில எ சேல முந்தானையால தொடச்சு புட்டு,
அவன் தூரம் மறஞ்சு போயி
புள்ளியா போறவர கை ஆட்டி வெறிச்சு நின்னேன்.

ராசாவா வாழ்ந்த அவன்,
காசு பணம் இல்லாம தவிக்கயில
மனசு கேக்கலயே
நானும் ரொம்ப படிக்கலயே
சித்தாள் வேல ஒன்னு மூனு மயில்
தூரமுண்டாம் எழுத்த கூர அக்கா சொன்னாள்.

சொல்லாம எதையும் செஞ்சதில்ல,
இத சொல்ல தைரியமில்ல மாமங்கிட்ட
சொன்னா வருத்தபடும்
சுருக்குன்னு கோவப்படும்.

சின்ன துணி ஒன்ன தலையில சுரிட்டி வச்சு
பத்தடுக்கு மாடி போல செங்கல்ல தலையில வச்சு மேலேயும் கிழேவும்
பல நூறு முறை சுமந்து வந்தேன்
சிமெண்டயும் ஜல்லியும் கையால
கலவை செஞ்சேன்.

படுபாவி கொத்தநாரின் பார்வை
என் இடை படர
சேலய படர விட்டேன் இடுப்ப மறைக்கயில
இருந்த அவசரத்துல செங்கல் உடைக்கயில
கரனை கிறிடுச்சு செங்கல் வண்ணம் போல
செவ செவன்னு செவந்து போயி,
கை ரத்த மேனியாச்சு.

வலி தாங்காம துடியா துடிச்சு புட்டேன்
கண்ண மூடயில மாமன் வந்து நின்னானே,
மல்லிப்பூ வாங்கிவந்து கையில கொடுப்பானே,
நீயே வச்சுவிடு தப்பிக்க வழி இருக்கு
கட்டி அணைக்கயில மீச முறுக்க சொல்லி கையில மறக்காம முத்தம்
வப்பான் அப்ப தப்பிக்க வழியுமில்ல

ரத்த கரை மேனியிலே வெட்டுப்பட்டு
பார்த்துபுட்டா...
கண்ணு கலங்கி போயி பச்ச புள்ள
ஆயிடுவான்...
வெட்டுப்பட்ட வலி கூட தாங்கிடுமே
எ மனசு
அவன் மனசு வலி தாங்காது
எ உசுரு.

எழுதியவர் : வினோத் (29-Dec-14, 9:00 pm)
பார்வை : 115

மேலே