ஒரு பயணத்தின் கதை

இனிய காலைப் பொழுது மெல்ல மெல்லப் புலர்ந்தது.
உறக்கம் கலைந்தாலும் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான் சதீஷ். அதுவே ஒரு தனி சுகம்தான்.
அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல்
"சதீஷ் ! எனக்கு ஒரு உதவி செய்யணுமே..." என்றபடி உள்ளே நுழைந்தாள் அம்மா.

" என்னம்மா இன்னும் விடியக்கூட இல்லை. அதுக்குள்ளே எழுப்பறே" என்று சலித்தபடி எழுந்து உட்கார்ந்தான் சதீஷ்.

"அதுக்கில்லே..நம்ம சந்தரமுகி உன்னோட யுனிக்ஸ் புக் கேட்டா, நீ வந்திருக்கறது அவளுக்கு எப்படித் தெரியும்னு தெரியலை. காலைல அவ காலேஜ் கிளம்பறதுக்குள்ள கொண்டுபோய் கொடுத்துடு, என்ன இருந்தாலும் உன்னை கட்டிக்கப்போறவ இல்லையா.. " ஒரு பெரிய பொறுப்பை கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றுவிட்டாள் அம்மா.

"அம்மா நீயா எதையாவது சொல்லிக்கிட்டிருக்காதே..." அவன் சொன்னது அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை.

சந்தரமுகி அவனைவிட ஐந்து வயது சிறியவள். அவனுடைய மாமா பெண். சிறுவயதிலிருந்தே அவன் என்ன செய்தாலும் அதையே அவளும் செய்வாள். அவன் கம்ப்யூடர் படித்து வெளியூரில் வேலைக்குப் போனதும் அவளும் அதையே தேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அதனால் அவனது புத்தகங்கள் அவளுக்குத் தேவைப்பட்டன.

வேகமாக குளித்து உடை மாற்றிக் கிளம்பினான் சதீஷ். சஸ்பென்சாக இருக்கட்டும் என்று மாமாவுக்கு போன் பண்ணி சொல்லவில்லை. அம்மாவையும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டான்.

"பைக்ல போயேண்டா" என்ற தாயின் வார்த்தைகளை காற்றில் பறக்கவிட்டு நடந்தே பேருந்துநிலையம் அடைந்தான் சதீஷ்.

ஒருபுறம் நடத்துனர்கள் "பாண்டி..பாண்டி.." என்று கத்தியபடி இருக்க தயார்நிலையிலிருந்த பாண்டிச்சேரி பேருந்தில் ஏறி ஜன்னலோரத்தில் அமர்ந்தான்.

கடலூரிலிருந்து பாண்டிக்கு பேருந்தில் செல்வதே தனி சுகம்தான். பேருந்தில் ஒலிக்கும் இனிமையான பாடல்களை ரசித்தபடி ஜன்னலோரம் இயற்கை அழகுகளை கண்டு களித்தபடி பயணம் செய்வது சதீஷுக்கு பிடித்தமான ஒன்று. படிப்பு முடிந்தபின் ஒரு வருடம் தற்காலிக வேலையில் இருந்தபோது இவ்வாறு தான் பேருந்தில் பயணம் செய்தது நினைவில் வந்து இனித்தது.

ஒரு குலுக்கலில் பேருந்து புறப்படவும் அவனது நினைவுச் சங்கிலி அறுந்தது. பேருந்து நிரம்பிவிட்டது ஆனால் அவனது பக்கத்து இருக்கையில் யாரும் அமரவில்லை . 'இது ஆபத்தாச்சே கண்டக்டர் எழுப்பி விட்டுட்டா என்ன பண்றது? கடவுளே யாராவது ஆம்பளைங்களா ஏறணும்' என்று அவன் மனதில் பிராத்திக்கவும் இரண்டு பெண்மணிகள் முன்வாசல் வழியாக ஏறி வரவும் சரியாக இருந்தது. 'போச்சுடா நாம நெனைச்சது எப்போ நடந்திருக்கு இப்போ கண்டக்டர் இங்கேதான் வரப்போறார் ' நினைத்தபடி நடத்துனர் எழுந்துவந்து

"இந்தாப்பா தம்பி , நீ கொஞ்சம் அந்த சீட்டுல மாறி உக்கர்ந்துக்கோ.. " என்று ஏற்கனவே இரண்டுபேர் அமர்ந்திருந்த மூன்றுபேர் சீட்டின் ஓரத்தைக் காட்டினார்.

எப்போதுமே அவனுக்குப் பிடிக்காத சீட் அது. என்ன செய்வது? வேறு வழியில்லாமல் மாறி அமர்ந்தான். பயணத்தின் இனிமை பாதி குறைந்தது போல் இருந்தது. அது எப்படித்தான் ஜன்னலை மூடி வைத்துக்கொண்டு பயணம் செய்வார்களோ! அதுவும் ஜன்னலோரத்திலேயே அமர்ந்து கொண்டு.

சதீஷுக்கு வேர்த்துக் கொட்டியது..


"சார் ..கொஞ்சம் ஜன்னல் கதவைத் திறக்கறீங்களா. ,காத்தே வரலை" சொன்னவனை ஜன்னலோரத்து ஆசாமி ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஜன்னலை போனால் போகிறதென்று ஒரு விரக்கடை அளவுக்குத் திறந்தார். மெல்லிய அலையாகக் காற்று வந்தது.அதுவும் சிறிது நேரத்தில் நின்று போனது.

ஏன் என்று பார்த்தால் அந்த ஆசாமி ஜன்னலில் சாய்ந்தபடி தூங்க ஆரம்பித்திருந்தார்.

இப்போது பயணத்தின் இனிமை முக்கால் பங்கு குறைந்துவிட பேசாமல் அம்மா சொன்னபடி பைக்க எடுத்துட்டு வந்திருக்கலாமோ? என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

"டிக்கெட் ..டிக்கெட்.." என்று கண்டக்டரின் குரல் கேட்டு நிமிர்ந்து "அரியாங்குப்பம் ஒன்னு குடுங்க.." என்றான்.

கண்டக்டர் முறைத்தார் ."ஏம்பா..உங்களுக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா.. வழி டிக்கெட்டெல்லாம் ஏறாதிங்கன்னு? சரி சரி ,ஸ்டான்டிங்க்ல வாங்க.. பாண்டிச்சேரி டிக்கெட்டே நிக்கறாங்க.. எந்திரிங்க.. "

அரியான்குப்பத்திலிருந்து பாண்டிச்சேரி பேருந்து நிலையம் ஒரு கிலோமீட்டர் கூட இல்லை. அது வழி டிக்கெட்டாம்.

வேறு வழியில்லாமல் அவன் எழுந்துகொள்ள இதற்காகவே காத்திருந்த ஒருவர் அங்கே அமர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் மூச்சு முட்டியது.

கடலூர் எல்லை தாண்டியதும பாட்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. பயணத்தின் இனிமை முழுவதுமாகக் குறைந்து கொடுமையாக மாறியது. ஒரு மணிநேரம் பயணம் செய்து கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இறங்கியபோது செல்போன் சிணுங்கியது.

மாமாதான் பேசினார். "என்ன சதீஷ் எங்கே இருக்கீங்க..?
சொன்னான்.
"நானும் சந்த்ரமுகியும் இப்போதான் உங்க வீட்டுக்கு வந்தோம். நீங்க உடனே பஸ்ஸ புடிச்சு இங்க வாங்க" என்று அவர் கூற முக்கால் மயக்கத்தை அடைந்த சதீஷ் அந்தவழியாக வந்த கடலூர் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு வந்த கூட்டத்தைப் பார்த்ததும் முழுதும் மயங்கினான்.


நன்றி ;முகநூல்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (31-Dec-14, 4:25 pm)
பார்வை : 203

மேலே