விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை .... ஆனால்... கிருஷ்ணாவை... பின் தொடரத்தான் வேண்டும்....அவன் இன்று பாபநாசம் செல்கிறான்.... எதற்கு என்று தெரியவில்லை.... தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும்... தெரிந்தால்... கத்துவான்..... கத்தினால் கதை இல்லை.....
கிருஷ்ணா... ஓரளவு படித்து சமுதாயத்துக்கு தேவையான ஒரு வேளையில் இருக்கும் சமுதாயச் சிந்தனை உள்ள ஒரு குடிமகன்..... இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம்..... குடிமகன்.....
இந்த வார்த்தையில் கடைசி எழுத்தில் "ன்" இருக்கிறதே.....அது "ள்" ஆக இருக்குமோ என்று..!.....எனக்கு அவ்வப்போது சந்தேகம் வருவதுண்டு....... அவனும் அப்படித்தான் நடந்து கொள்வான்.... நன்றாக பேசிக் கொண்டிருப்பான்.. சட்டென.. கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு நடப்பான்.. கண்ணாடி பார்க்கும் போது அவன் தன்னை மறப்பதை நான் ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு..... வெகு நேரம்... தன்னை மறந்து கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருப்பான்..... பொட்டு வைத்துக் கொள்வான்... திடீர் என்று அழுவான்....அவனுக்கு சுட்டு போட்டாலும் சமைக்க வராது..... இந்த ஆறு மாத காலமாத்தான் அவன் சமைக்கவும் செய்கிறான்..... அவன் சமையல் செய்யும் போது கிட்டதட்ட ஒரு பெண்ணாகவே அவன் மாறிப் போவான்....எதையாவது படித்துக் கொண்டே இருக்கும் பழக்கமும் இந்த ஆறு மாதத்தில் தான்...அவனுக்கு வந்திருக்கிறது..... நண்பர்கள்.. உறவினர்கள் எல்லாரும் அவனை ஒரு மாதிரி பேசத் தொடங்கி விட்டார்கள்.... இப்போதெல்லாம் அடிக்கடி.... மனப் பிறழ்வானவன் மன நிலையில் தான் அவனின் தோற்றம் இருக்கிறது..இரவுகளில் தனியாக காட்டுக்குள் நடமாடுவது, அவனைப் பற்றிய பிம்பத்தை உள் வாங்கவே முடியாத தருணத்துக்கு நம்மைக் கொண்டு செல்கிறது...பேய் பிடித்திருக்கும் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது..... அவனின் அறையில் அவ்வவ்போது பெண்களின் உள்ளாடையை கொடியில் காண முடிகிறது....
முதலில் கொஞ்சம் குடித்துக் கொண்டிருந்தான்...... இந்த ஆறு மாத காலமாக குடிப்பதை நிறுத்தி விட்டான்.... அவன் கைகையெழுத்துகூட மாறி இருக்கிறது... அவன் உடலில் இருந்த ஆண்மைக்கான கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை காண முடிகிறது....வெறித்த விழியில்.... அறைக்குள் சில நேரங்களில் நடுந்து கொண்டே இருப்பான்... ஏதோ சிறைக்குள் தன்னை இருத்திக் கொண்டதைப் போல அவனின் யோசனை இருப்பதாக ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்துக் கிடக்கும் சூழலில்... கடந்து போகும் புரிதல்களில்... "ஒன்றும் இல்லை"- என்பது போல முகத்தை சட்டென திருப்பிக் கொள்வான்...
பார்க்கும் காட்சிகளில்.... பறவையோ.. வானமோ.. அது அதுவாகத் தெரிய வேண்டிய அவசியம் எல்லை என்பது போல அவனின் எதிர் வினைகள் இருக்கிறது... அவன் சிரிப்பது கூட இப்போதெல்லாம் கவர்ச்சியாகத் தெரிகிறது......
அவன் பயணிக்கத் தொடங்கி விட்டான்..... பயணம் அவனுக்கு பிடித்தமானதாக இருப்பதாகத்தான் தெரிகிறது...... பயணங்கள் போலே பறக்கும் பறவை கூட இல்லையோ என்று தோன்றும் சிட்டெறும்பு கவனம் ஒரு மீறுதலை, ஆறுதலை அவனுக்கு தந்தேதான் இருந்திருக்க வேண்டும்...... எந்தப் பறவை அழுகிறது என்று கேட்ட அவன் தான் இப்போதெல்லாம்..... பறவை அழுவதும் சிரிப்பதும் உணர முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறான்...... மனிதன் சமயங்களில் இறந்து கொண்டே இருக்கிறான்.. அதே சமயங்களில் பிறந்து கொண்டே இருக்கிறான்....
சொல்லாத வாக்கியமாய் அடிக் கோடிட்ட வாக்கியமாய் ஆழ்மனதில் ஒரு சிலுவை... சிறகை ஒடித்துக் கொண்டே இருக்கும் இவ்வாழ்வில்... எது தான் நிதர்சனம்... உயிர் கொண்டதெல்லாம் வாழ்கிறதா... வாழ்வதெல்லாம் உயிர் கொண்டிருக்கிறதா?.... கொள்ளுதல் யாருக்கும் உரிமைல்ல..! கொல்லுதலுமா...?
நான் விக்கிரமாதித்தன்...
நீலவேணி....... மாநிற தேவதை என்று சொல்லும், இலக்கியமும்.... இலக்கணம் மீறிய விழிகள்... இக்கணம் கூட நினைவில் அது உளிகள்....என் வயதுக்கே காதல் கொண்டு சேர்த்த உடல்காரி..... தீக்குள் விரல் வைத்தால்.... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா... நந்தலா... என்று பாரதி சொன்ன வரிகளில் அருவிக்குள் மீனாய் வாழ்பவள் போல..... அவளைக் கண்ட நொடியே தீப் பிடித்து எரிந்தது என் முதுமைக் காடுகள்....வெட்கம் தாண்டிய என் தனிமைகள் அவளின் கருவிழிக்குள் ஒரு மீனாய் சுழன்றது..... அவளின் அரும்பு மீசை கொண்ட மேல் உதடில்... முறுக்கேறும் என் சோம்பல்.....என் வறண்ட பாலைவனத்தில் கானலில் முளைத்த மரமாய்..... அவள் ஆடை.....
5 பெண் பிள்ளைகளாய் வந்திருந்தவர்களில் நான் நீலவேணியை மட்டுமே எனக்குள் குவித்துக் கொண்டிருந்தேன்......
என் மனைவி நடத்தும்... விடுதியில் தான் அந்த 5 பெரும் தங்கி இருந்தார்கள்.... விடுதி என்றால் விடுதி அல்ல.... வீட்டில் ஒரு பகுதியை பாபநாசம் அருவியை சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவது, சமைத்து தருவது.....

அதுவும் பெண் பிள்ளைகள் தைரியமாக வந்து தங்கலாம்..... இது வரை வந்த எந்த பின் பிள்ளைகள் மீதும் என் கண் இப்படி ஒரு பார்வையை உதிர்த்ததில்லை..... எனக்கு இந்த நீலவேணியைக் கண்டதுமே... உள்ளுக்குள் ஒரு வித உயிர் கசிதல் ஏற்பட்டதை என்னால் தடுக்கவே முடியவில்லை... நான் அவளை ரசித்தேன்...... அவள் என்னை தாத்தா... என்று அழைத்தாள்..... தாத்தா தான்..... ஆனால் என் பேத்திக்கு 5 வயது மட்டுமே உள்ள தாத்தா... எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் ..... நான்தான் முதல் நாள் அருவி சுற்றிக் காட்ட அழைத்துப் போனேன்...... ஐவரில் நீலவேணி என்னிடம் அதிகமாக பேசினாள்....... என் கைகளைத் தொட்டு தொட்டு பேசினாள்..... அவள் கொண்டு வந்திருந்த காகிதம் சுற்றிய மிட்டாய்களை எனக்கு கடித்துக் கொடுத்தாள்..... என் வாழ்நாளில் இப்படி ஒரு உணர்வை அன்று அவள் அருகில் இருந்த போது தான் உணர்ந்தேன்..... என்ன விதமான உணர்வு.. இது.... என்ன விதமான இன்பம் இது..... என்ன கருப்பராயா.. விளையாடறியா....!?... நான் ஏன் இப்படி சமநிலை தவறுகிறேன்.... பின் பித்தா...?
நான் அந்த இரண்டு நாளில் நிறைய மாறி இருந்தேன்........ என் முகமே ஒரு சாந்த நிலைக்கு வந்திருந்தது..... என் மனைவி கூட முகத்தை திருப்பிக் கொண்டு ஏதோ முனங்கினாள்... பாவம் கிழவிக்கு என்ன தெரியும்....... அவள் அப்படித்தான், நல்லவள்....
நான் இப்போதெல்லாம்... பிணம் எடுக்க செல்வதில்லை.... என் இளமை பருவத்தில் பாபநாசத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்கள் தவறி உள்ளே விழுந்து செத்து போனால் நான் தான் பிணம் எடுக்க செல்வேன்... ஒரு முறை, இரு முறை.. என்று பின் ஒரு நாளில் அதுவே என் தொழிலாக மாறி விட்டது....பிணம் எடுக்க நீருக்குள் மூழ்கும் ஒவ்வொரு முறையும் நான் இறந்தே விடுவேன்.. மூச்சை பிடித்துக் கொண்டு தேடுகையில் ஏதாவது பாறை சந்துக்குள் சிக்கி...... அலங்கோலமாய்.. ஆடை இன்றிக் கிடக்கும் போது இந்த மனித சமூகத்தின் மீது ஒரு வித பரிதாபம் ஏற்படும்... நிறைய உடல்கள்.. நிர்வாணமாகக் கிடக்கும்... நாள் பட்ட பிணங்கள்..மீன் கொத்தி சிதிலமடைந்து... உறுப்புகள் சிதைந்து கிடக்கும்... மேலே, கரையில் உறவுகளின் கூச்சல், நீர் தாண்டி சுடும்... என் வேட்டியை அவிழ்த்து பிணத்தை சுற்றிக் கொண்டு மேலே தூக்கி வருவேன்.... சதை பிய்ந்து தொங்கும் காட்சிகள் என்னை பல இரவுகளில் அலற வைத்திருக்கின்றன......என் மனைவி, நான் ஒவ்வொரு முறையும் பிணம் தேடிப் போகையில் நடுங்கிக் கொண்டிருப்பாள்... சில பிணங்கள் போக்கு காட்டும்.. என்னை அலைக்கழிக்கும்.... விளையாட்டுக் காட்டும்.. கோபம் காட்டும்...
என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பிணத்தை தூக்கி வர விடாமல் மற்ற சாத்தான்கள் அழிச்சாட்டியம் செய்யும்..... மன திடம் இல்லையென்றால்.. சாக வேண்டியது தான்.. ஆனால் நான் எதற்கும் அசைய மாட்டேன்.... அப்படி ஒரு சூழலில், ஒரு நாள் ஒருவன் உள்ளே விழுந்து விட்டான்.. நான் தேடினேன்.. கிடைக்கவில்லை.. அடுத்து ஒரு முறை, அடுத்து ஒருமுறை.. இப்படி அதற்கு பின் எனக்கு பிணம் கிடைக்கவேயில்லை....என் தொழில் சரியத் தொடங்கியது..... மற்றவர்களுக்கு பிணம் கிடைத்து விடுகிறது.. எனக்கு கிடைப்பதே இல்லை.. கருப்பராயன்.... போதும் என்று நினைத்து விட்டான் போல..... என் மனைவி பெரு நிம்மதி அடைந்தாள்.... ஆனால் எனக்கு தூக்கம் போனது....... நான் தூக்கிய பிணங்கள் இரவினில் என்னருகே வந்து படுக்கத் தொடங்கின....பிணங்களின் சில்லிட்ட தொடுதல்..... சுடு மணலுக்குள் பெரு விரல் பட்ட தகிப்பாய் எரியும்....காலம் கடக்க கடக்க பழகிப் போன பிணங்கள்... எனைச் சுற்றி படுத்தே கிடக்க தொடங்கின...... காலம் ஓட ஓட... பிணங்கள் என்னை மறக்கத் தொடங்கின....ஆனால் ஒரு முறை மறுபடியும் பிணம் எடுக்க முயற்சி செய்த போது மற்ற பிணங்கள் சேர்ந்து கொண்டு எனக்கு வழி விடாமல் செய்தன.... எனக்கு புரிந்தது...... பிணங்களின் புன்னகையில் மச்சமாகி கிடக்கிறது மிச்சங்கள்..... அவை காலத்துக்கும் தீரவே தீராத அச்சங்கள்....அச்சமில்லை உச்சம் என்பது மரணம் என்பதால் இனி போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்...
பெரும் மன உளைச்சல்....என்னை பாடாய் படுத்தியது....... அதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய்..... நான் வெளியேறி.... இப்போது மனதையும் தேற்றிக் கொண்டு சுற்றுலா வருபவர்களுக்கு வழிகாட்டியாக வேலை செய்து வருகிறேன்..... பாபநாசம் அருவி.... என்னைப் பார்த்துக் கொண்டே, பேசிக் கொண்டே.... எதையோ சொல்லிக் கொண்டே இருப்பதாக உள்ளுக்குள் ஒரு திரி எரிந்து கொண்டே இருப்பதை மட்டும் நான் அணைக்க முயற்சிப்பதே இல்லை...

அருவிகளில்.. விழுவது தண்ணீர் மட்டுமா.....?
ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் வேகமாக, படு வேகமாக போய்க் கொண்டிருந்தது....... போய்த்தான் ஆக வேண்டும்....... நீலவேணி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்...... விட்டால் செத்தே போவாள்.....அவள் சாக கூடாது....... இந்த வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுத்த பெண் அவள்...இந்த சின்ன வயதில் அவள் சாக கூடாது...... "கருப்பராயா என் உயிர் எடுத்துக் கொள்.... அவளைக் காப்பாற்று...."-வண்டி வேகமாய் போய்க் கொண்டிருந்தது....


இரவு......

இரவு ஒரு தீரா வானத்தை சுமந்து கொண்டே போர்வையாகிறது..... நிலவின் வெளுத்த முகத்தை..... உரிந்து கொண்டே ஒரு மாயம் செய்து கொண்டு இருப்பதாக உணரப் பட்ட மனதில்.. பெரும் போராட்டம்....... ஏதோ உந்திக் கொண்டே இருந்தது..... கதவை யாரோ தட்டுவது போல ஒரு காட்சிப் பிழை வியர்வையாகி கொட்டிக் கொண்டிருந்தது... அருகினில் என் மனைவி ஆழமாய் மூச்சு விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.....தூக்கம் என்பதே சிறு மரணம் தானே .....நான் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன்............. அருவிக்குள் நின்று யாரோ என்னை அழைப்பது போல ஒரு சத்தம்.....எனக்குள் ஏதேதோ..... தோற்றங்கள்.. நானே வேறு ஒரு ஆளாக மாறியது போல ஒரு பிரம்மை.... தலைக்குள் யாரோ பம்பரம் சுழற்றுவது போல... ஒரு சாட்டை.... பாம்பாய்.... வீம்பாய்.... என்னை சுழலச் செய்து கொண்டே இருந்தது.....யாரோ என் கால்களைப் பற்றி இழுப்பது போல.... என் வீடு எங்கேயோ ஒரு புதை மணல் தேசத்தில் புதைந்து கொண்டு இருப்பது போல... கல்லறை ரத்தம் என் வீடெங்கும்.. கருப்பு நிழலை வாட்டி வதக்கி காய வைத்துக் கொண்டு, என்னை வெளியே போ என்றது போல உணரப்பட்டேன்....

"விக்கிரமாதித்தா........... வா................... வா.....................விக்கிரமாதித்தா............................."

என் வீட்டுக்குள் பலத்த காற்று சுழலுவதை உணர்ந்தேன்...... எதுவும் தெரியாமல் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள்....... காற்றில் வித விதமான முகங்கள்...... பழக்கப் பட்ட முகங்கள்..... என்னை, "வெளியே போ வெளியே போ"- என்று சொல்லாமல் சொல்லி தள்ளாமல் தள்ளிக் கொண்டிருந்தன....நான் தட்டுத் தடுமாரி வெளியே வந்தேன்....... ஊரெல்லாம் கண்கள் மூடிக் கிடக்க.. நான் மட்டும்... திறந்த கண்களில் பூமியை சிமிட்டிக் கொண்டு நகர்ந்தேன்... என்னை முன்னேற விடாமல்... நான் இதுவரைத் தூக்கிய பிணங்கள்.. முன்னும் பின்னும் என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தன.... என் கால் பிடித்து கத்திக் கொண்டே தரையோடு தரையாக உருண்டு கிடந்த ஒரு பிணம்.... தன் தலையை மடார் மடார் என கீழ கிடந்த பாறையில் முட்டிக் கொண்டே எனைப் பார்த்து "போகாதே போகாதே" என்று கதறியது........

கருப்பராயன் சிலை.....காற்றில்..... அசைந்துகொண்டு இருப்பது போல எனக்கு கண்ணாமூச்சி காட்டியது.. இரவு.......

நான் கருப்பனை.....ஆழமாக பார்த்தேன்.....கருப்பனின் மீசையில் அத்தனை உக்கிரம்... காற்றுக்கு... கோடரி போல தெரிந்தது........ கண்ணுக்கெட்டும் தூரம் வரை..அருவியும் காற்றும்.... பின்னிசையில்..... சல சலவென ஒரு தேக நடுக்கம்... குளிரை விரைத்துக் கொண்டே வீரிட்டுக் கொண்டிருந்தது....

"சீக்கிரம் போ.." என்று கருப்பன் உத்தரவு தந்து போல உணர்ந்தேன்.....

அடித் தொண்டையில் இருந்து "விக்கிரமாதித்தா..... இந்த முறையாவது என்னைக் காப்பாற்று.... வா........ நான் தான்................."-
காதலில் இருந்த வேகம்.... தாகம்..... யாகம்....., எனக்கு புரிந்து விட்டது....... ....... "அயோ..... கருப்பா....... என்ன இது........ "

நான் ஓடிய வேகத்தில் அருவிக்குள் பாய்ந்தேன்.. இரவும் நிலவும்..சாட்சியாகி..... காற்றும் ஆகாயமும் பறந்து விரிந்து கிடக்க.... நான் நீந்தத் தொடங்கினேன்.....நீச்சல்.... கடக்க முடியாத நீராய்... பாயாய்...... வழுக்கிக் கொண்டே மீனாகிப் போனேன்......நான் நீந்தினேன் என்று சொல்வதை விட.... நீர் என்னில் நீந்தியது.... நீர் முழுக்க சூடு...

நான் நீந்திக் கொண்டே ஆழம் சென்று விட்டேன்..... அங்கே...... அங்கே...... நீரின் கிழிசல்களில்.... நீரின்... நெளிவுகளில்......வெண் நுரை தரித்த நேர் கோலம் உருவமாகி....தக தகவென மின்னிக் கொண்டு..... ஒரு மீனின் அசைவோடு..... புது நீரின்... இசைவோடு....விரிந்த தலையில்.... சிமிட்டாத கண்களுடன்.....நீலவேணி

நீலவேணி...

நீலவேணி எனைப் பார்த்தாள்..... எனக்கு மூச்சு முட்டியது......

"நீலவேணி......"-.

என் வார்த்தை நீருக்குள் குமிழியானது..... மூச்சுக்குள்.... நீர் போனது ....நெஞ்சடைத்து செத்தால் என்ன.... என்று தோன்றியது..... மூளைக்குள்..... பேய் பிடித்த நொடி ஒன்றை... கசக்கிக் குடித்த கசாயம் போல... நான் பித்தேறி.. தலை சிலுப்பினேன்....

என் எண்ணங்களைப் புரிந்து கொண்ட நீலவேணி... என் அருகே வந்து என் கண்களை துடைத்து விட்டாள்...... நீலம் பூத்த கண்களில் நீலம் பூத்த உடலில்..... ஒரு கடற்கன்னியாகவே தெரிந்தாள். என்னை அழைத்துக் கொண்டு முன்னே நீந்தி சென்றாள்... பின்னே நானும் மௌனமாக நீருக்கு வலிக்காமல்..... அசைவின்றி.... சென்றேன்.. கனத்த மௌனம்....நீலவேணி நீந்துவதை நிறுத்தினாள்.... கை காட்டினாள்....

நிசப்த காலத்துக்குள் விண் கற்கள் மோதுவதை நீருக்குள் கேட்டேன்.... மௌனம் அறைந்து கிழிய செய்யும் சத்தத்தில்... நான் மூச்சு திணறினேன்.....ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு, அவள் காட்டிய திசையில் இருந்த ஒரு பாறை இடுக்கில்.... ஒரு உடல் மாட்டிக் கொண்டிருந்தது..... எனக்கு வேகமாய் எல்லாம் புரிந்து விட்டது.. சட்டென நீலவேணியைக் கடந்து அந்த உடலை மெல்ல வெளியே இழுத்தேன்... உடலில் சூடு இருந்தது.... அசைவும் இருந்தது.. "இப்போது தான் விழுந்திருக்க வேண்டும்..." என்று யோசித்துக் கொண்டே வேகமாய் மேலே இழுத்து வந்தேன்... நீலவேணியும் என் பின்னால் நீந்திக் கொண்டே வந்தாள்... இரவு அருவியாகிக் கொட்டிக் கொண்டிருந்தது.........குளிர் கரை எங்கும்....... விரைத்துக் கிடந்தது.....நிலவின்... கண்களில்.... மேகமாய் கடந்து கொண்டிருந்தது.... அருவியின் நாளைய தொடர்ச்சி....

கரை ஏறிய மணித் துளிகளில் அந்த உடல் விழித்துக் கொண்டது...... நீருக்குள்ளிருந்து நீலவேணி.......தலையை மட்டும் கரைக்கு வெளியே நீட்டிக் கொண்டு விக்கிரமாதித்தனையும் அந்த உடலையும்...... பார்த்துக் கொண்டே இருந்தாள்... முகத்தில் பூத்திருந்த நீர், முத்துக்களோ என்று தோன்றும் முகத்தில் மூக்குத்தி மின்னிக் கொண்டிருந்தது....விக்கிரமாதித்தன் நீலவேணியையும் அவனையும் பார்த்துக் கொண்டே இருந்தார்......

அந்த உடல்.... அவன்..... அவன் தான்.... கிருஷ்ணா ....

கிருஷ்ணா, இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான்....... நீலவேணியை ஆசை தீர பார்த்தான் .....கை நீட்டி முகம் தொட்டான்.... தொட முடியாத கைகள் நீரை அள்ளின.... நீருக்குள் நிலவை ஏந்துவது போல நீலவேணியின் முகத்தை ஏந்தினான்.....வந்த முகம்.. நீராய் ஒழுகியது... அது காலத்தின், மரணத்தின் கண்ணீர்......

மூவரின் கண்களும் மாறி மாறி பார்த்தன... புரியாத தருணங்களை புரிய முயற்சித்தன......விக்கிரமாதித்தன்..... கண் கலங்கினார்..... மாறி மாறி பார்த்தார்.... அர்த்தத்தில் மௌனம் கூட கேள்வியானது.....

நீலவேணி......... கண்கள் மூடினாள்.......நிலவு இருண்டது போல....

"ஹாய்.... விக்கிரமாதித்தா..... நாங்க அருவி சுத்திப் பாக்க போறோம்.... வரியா......" என்று கத்திய நீலவேணியில் கண்கள் சிரித்தன......

தாத்தா என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று நேற்று இரவு தூங்கும் போது காதுக்குள் முணங்கி சென்றிருந்தார் விக்கிரமாதித்தன்.....

மீண்டும் சிரித்தாள்.... நீலவேணி.... அர்த்தமுள்ள சிரிப்பு...... அத்திப் பூ சிரிப்பு......கத்தும் குயிலோசையின்... கடைசி உயிர்ப்பு...

அத்தை மகள் போலே.... ஞாபகங்கள் தாலாட்டும்... அருவிச் சாரலின் தூறலோடு..... நீலவேணி நகர..

"நீ போயிட்டு வாம்மா.... இந்தக் கிழவி எனக்கு ஒரு வேலை குடுத்திருக்கா ".... என்று விக்கிரமாதித்தன் கூறினார்.....

அவர் கண்கள், அவள் கண்களையே பார்த்தது....... அந்த கண்களில் தான் எத்தனை ஒளி... அது கடவுளின் விழி போல உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது.....சொல்லொணா இன்பம் அது......கோடி யுகம் கடந்து மீண்டும் ஒரு யுகம் செய்யும் வித்தை அந்த நடையில் இருந்ததை அவர் உள்ளுக்குள் நிறைத்தார்.....

அருவிக்குள்...... குருவி சத்தம்..... கற்பனை சிறகு நீரானது...... பின் வேறானது......... அது வேரானது ....உள்ளங்கையில் அள்ளிக் கொஞ்சம் வானம் தெளித்தாள்... மிஞ்சிப் போன கொஞ்சல் கொண்ட நீர்த்துளிகளில்.... பூமி களித்தாள்....

தோழிகள் ஆங்காங்கே நின்று நீருக்குள் இடுப்பு வரை நின்று...... விளையாடிக் கொண்டிருக்க... தவம் ஒன்று கண்ட வரம் போல.... நீலவேணி.. சட்டென நீருக்குள் இழுக்கப் பட்டாள்.. எதிர் பாராத இந்த சறுக்கலை அவள் கால்கள் உணரும் முன்னே.. வழுக்கி பின்னால் நீர் விலக்கிய தலை, நீருக்குள் மூழ்கியது... நீர்க்குமிழிகள்.... தீ முட்டைகளை வெடிக்க.... துடிக்க துடிக்க.... மூச்சு திணறினாள்.. மூச்சே திணறியது....... பேச்சின்றி... வாய் பிளந்த நீர், நிறைய குடித்தது.... பெருங்குடிகாரன்... இந்த பேரருவி....

தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல்.... கத்தத் தொடங்க..... விஷயம் மேலே நின்றவர்களுக்கு எட்டியது.. ஆளாளுக்கு ஓடி வந்து என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டு உள்ளே குதித்து தேடத் தொடங்கினார்கள்...

நீண்ட தேடலுக்குப் பின்..... நீல நதிக் கரை போல....ஒரு பாறை இடுக்கில் மூச்சற்று.... கிடந்தாள் நீலவேணி.... பேச்சற்று துடித்தார்கள் தோழிகள்....

வெளியே இழுத்து வந்து முதலுதவி செய்ததும்...காணாமல் போன மூச்சு கபக்கென்று ஏங்கி வெளியே வந்தது....... ஆம்புலன்ஸ் வந்தது.... வண்டியில் ஏற்றப் பட்டாள். வண்டி பறந்தது........ போகும் வழியிலேயே இறந்தும் போனாள்.....


கடந்த காட்சிகளை அவர்கள் பார்த்தார்கள்.......திகைத்து வெறித்தார் விக்கிரமாதித்தன்.... அன்று ஆம்புலன்ஸ்சில் ஏற்றும் போது கண்ட காட்சியின் முன் தொடர்ச்சியை இன்று காணும் போது அவரின் உடல் மேலும் சில்லிட்டது.... மனதுக்குள் ஏதோ உந்தித் தள்ள.... மீண்டும் காட்சியை பின்னோக்கி நகர்த்தி நீலவேணி நீருக்குள் அமிழும் இடத்தில் இன்னும் ஆழமாக பார்த்தார் விக்கிரமதித்த்தன்... யாரோ நீலவேணியின் கால்களை நீருக்குள் இருந்து இழுத்ததை நன்றாக காண முடிந்தது.......புரிந்து போனது......புரிந்தே போனது......

"அட பாவிங்களா..... இது உங்க வேலையா....."?

ஆம்....

"பிணம் எடுத்து தந்தால் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் 2000 ரூபாய் பணத்துக்காக, இவர்களாகவே சுற்றுலாவுக்கு வந்து சற்று ஆழம் உள்ள இடத்தில் நீருக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் யாரையாவது நீருக்குள் பதுங்கி இருந்து..... காலைப் பிடித்து உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு போய் பாறை இடுக்கில் வைத்து விட்டு, பின் ஒரு 2 மணி நேரம் கழித்து..... பிணம் தேடுபவர்கள் போல தேடி கண்டு பிடித்துக் கொடுத்து ரூபாய் 2000 பெற்றுக் கொள்ளும் பிணம் தின்னும் கழுகுகளின் வேலை.....!!!!!!........."

பற்கள் கடித்தார் விக்கிரமாதித்தன்.. வாய் விட்டுக் கதறினார்.... ..... ...

"அன்னைக்கு நீ கூப்டியே..... நான் வந்துருக்கலாம் நீலவேணி......." என்று உள்ளுக்குள் முணங்கினார் விக்கிரமாதித்தன்.

அருகினில் கிருஷ்ணாவும்.. நீலவேணியும் கண் கலங்கி அவரைப் பார்த்தனர்....

சற்று நேரம் தலை குனித்து அமர்ந்திருத்த விக்கிரமாதித்தன்... ஏதோ நினைவு வந்தவராக... "ஆமா.... தம்பி நீ யாரு.......?". என்று கேட்டபடியே கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினார்............

நீலவேணியை உற்றுப் பார்த்தபடியே "நான் தான் நீலவேணி விக்கிரமாதித்தா....." என்று அமைதியாக கூறினான் கிருஷ்ணா......

சட்டென தலை தூக்கிப் பார்த்த விக்கிரமாதித்தன் இடது பக்கம் திரும்பி நீலவேணியைப் பார்த்தார்....

நீலவேணி அழுதபடியே நீருக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருந்தாள்.......நீரின் வட்ட வட்ட குமிழ்கள்... வாழ்வின்... தூரங்களை குறுக்கிக் கொண்டே, விரிவதாக இரவு புரிந்து கொண்டது....
அடுத்து ஏதும் பேசாமல் கிருஷ்ணாவும் எழுந்து, புரிதல்கள் ஒன்றுமில்லை..... தனித்து விடப்பட்ட உலகம்... விண் கற்களால்... வீழத்தான் போகிறது...... வீழ்வதே இங்கு வாழ்வது தான் என்ற மாய தத்துவமாய்..... நீண்ட ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான்.........

ஒன்றும் புரியாத விக்கிரமாதித்தன்..... வேகமாய் எழுந்து, இன்னும் வேகமாய் ஓடி கருப்பரயாயன் காலடியில் விழுந்தார்...... காற்றும் அமைதியும்.... இரவை புரட்டத் தொடங்கின...பேரமைதியின் குறியீடாக நிலவின் வெளிச்சம் பேய்களின் இருண்மைக்குள் பற்றிக் கொண்ட பெருந்தீ என....ஒரு வெள்ளைப் போர்வை... சிவப்பின் கீற்றாக.... விழுந்து கொண்டே இருந்தது....

கருப்பரயாயன் கையில் இருக்கும் அருவாள் கீழே விழுந்தது.........

மழை...... ரத்தமாய் கொட்டத் துவங்கும் இனி........என்பதாய்........ஒரு பெரும் மழை.... ஆரம்பித்தது.....

பச்சைப் பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்லை...

அதன் பிறகு அவர் பிணம் எடுக்கும் வேலையை தொடர்ந்து செய்தார்.. ஒவ்வொரு முறையும்..... நீலவேணி அவருக்கு பிணம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொண்டே இருந்தாள்.. பிணங்களின் தொந்தரவு அவருக்கு இல்லாமல் போனது... பிணம் தின்னும் கழுகுகளின் தொந்தரவும்....

நீலவேணி கடவுளாகிப் போனாள்.....அன்பின் ஏதாவது ஒரு புள்ளியில் கடவுளாகிப் போகிறது... காதலைப் போல எதுவும்....

வீட்டில் புகைப்படமாய் மாட்டிக் கும்பிடத் தொடங்கினார்......

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் வேகமாக படு வேகமாக போய்க் கொண்டிருந்தது....... போய்த்தான் ஆக வேண்டும்....... நீலவேணி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்...... விட்டால் செத்தே போவாள்.....அவள் சாக கூடாது....... இந்த வாழ்விற்கு ஒரு அர்த்தம் கொடுத்த பெண் அவள்...இந்த சின்ன வயதில் அவள் சாக கூடாது...... கருப்பராயா என் உயிர் எடுத்துக் கொள்.... அவளைக் காப்பாற்று....வண்டி வேகமாய் போய்க் கொண்டிருந்தது....

வேகத்தின் அடுத்த கட்டமாக ஆம்புலன்ஸ்.. எதிரே வந்த லாரியில் மோதி..... ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிருஷ்ணா.... வின் மூளை செயல் இழந்ததை அடுத்து.........

சட்டென முடிவு எடுத்தது.... மருத்துவ உலகம்... மூளை சாகாமல் இருந்த நீலவேணியின் மூளையை.... மூளை சாவு அடைந்த கிருஷ்ணாவுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு.... மூளை மாற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது...........

ஒரு உயிராவது வாழட்டுமே.....

எப்படியோ நீலவேணி....... பாபநாசத்தை கவனித்துக் கொண்டே இருக்கிறாள்......இந்தக் கதையை எழுத ஆரம்பித்த நான்..... காலம் மட்டும் அல்ல.....

தொடரும்.....

கவிஜி


*விக்கிரமாதித்தன்.. கிருஷ்ணவேணி.. பாபநாசம்.. என்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் முழுக்க முழுக்க கற்பனையாக எழுதப்பட்ட கதை இது...........

எழுதியவர் : கவிஜி (31-Dec-14, 5:27 pm)
பார்வை : 326

மேலே