கடலோரக் கவிதைகள் ----------அஹமது அலி
வானம் கடல் குடிக்குதோ
கடல் வானை முத்தமிடுதோ
தூரத்து அடிவான அழகோ அழகு
அம்மம்மா அதை என்ன சொல்ல?
பேரலையாய் எழும்பி
பேரெழிலாய் ஓடி வந்து
கரையில் உடைந்து போனாலும்
திரையே நீ பேரழகு தான்.!
காதலியின் பெயரை
கை விரல்களால் கீறி
மணலில் எழுதி வைத்து
மனதுக்குள் ரசிக்கையில்....
எழுத்துப் பிழையா
எழுதியதே பிழையா
என்பதைக் கூட சொல்லாமல்
அழித்துச் செல்லும் அலை.!
அங்குமிங்கும் ஓடி ஓடி
அழகு காட்டி ஆசை கூட்டி
பிடிக்க முயல்கையில்
வலையில் ஒளியும் நண்டு.!
கடல் பார்த்து ஏங்கி நிற்கும்
களம் பாய காத்திருக்கும்
அலையில் மிதக்காத சோகத்தில்
மணலில் வாடும் உடைந்த தோணி.!
பச்சைமீன் வாசமது
எச்சில் ஊற வீசுமிங்கே
அத்தர் செண்டு நறுமணமும்
அமுங்கிப் போகும் இம்மணத்தில்.!
தங்கத் துகள் மண்ணெல்லாம்
அங்கம் தனில் ஒட்டிக் கொள்ளும்
உப்புக் காற்று மேனி படர்ந்து
சப்புக் கொட்டி சலசலக்கும்.!
கடற்கரை சோறு உண்பது
நிலா சோற்றையும் மிஞ்சி விடும்
கடற்கரையில் நிலாச்சோறு உண்டால்...
நீங்கா நினைவாய் தங்கி விடும்.!
வீடு திரும்ப நினைக்கும் போது
கடல் அழகு நம்மை மயக்கும்
விட்டுப் பிரிய மனமில்லால்
விடை கொடுக்கும் விலகாத எழில்.!