மார்கழித் தமிழ்பாடு-- தரவுகொச்சகக் கலிப்பா
நீரிறங்கி நெருப்பெழுப்பும் நெஞ்சுகுளிர் மார்கழியில்
சீருறங்கு கழனிப்புல் சிலிர்த்தனவாய்த் தலையாட்டும்
ஊருறக்கம் கலைப்பனபோல் ஓங்குகோ புரப்புறாக்கள்
பேரிறக்கை படபடக்கும் புலர்காலை அழைப்பதுகேள்!
தூரகன்ற கால்வாயில் தொடர்னீரில் நீராடு!
பார்விளங்க எழுகதிரின் படரொளிபோல் போராடு!
மாருறங்கு குழந்தை,ஏர் மறவனது நடைதேரு!
போருறங்கி அமைதி,கண் புலர்ந்திடவே தமிழ்பாடு!
எல்லோர்க்கும் இனிய மார்கழியில் புதிய புத்தாண்டின்
புலர்காலைப் பேரானந்த வணக்கங்களுடன்
எசேக்கியல்...
பொழிப்புரை:
நீரிறங்கி நெருப்பெழுப்பும்=பனி,நீரானது கீழிறங்கிச்
சூரியனாகிய நெருப்பினை மேல்வரும்படி எழுப்பும்;
நெஞ்சுகுளிர் மார்கழியில்=எடுத்துவிடுகின்ற மூச்சினால் பனியின் சில்லிப்பு நெஞ்சுக்குள் சென்று குளிர்விக்கும்;
மார்கழியில்= அப்படிப்பட்ட மார்கழியில்
சீருறங்கு கழனிப்புல்= செல்வம்கொழிப்பதாக விளங்கும் நன்,செய் நிலத்து நெற்பயிர்கள்
சிலிர்த்தனவாய்த் தலையாட்டும்= தம்முள்ளே பனியில் சிலிர்த்துக்கொண்டனவாகத் தலைமீஹு கொண்டுள்ள நெற்கதிர்களை ஆட்டுகின்றனவாக நிற்கும்.
ஊர்,உறக்கம் கலைப்பனபோல் = உறங்கிக்கொண்டிருக்கும் ஊரிலுள்ளோரைத் தங்களது தூக்கத்திலிருந்து எழுப்புவதுபோல
ஓங்கு,கோபுரப்புறாக்கள்= ஓங்கு நெடிதாக நிற்கும் பள்ளிவாசல், கோபுரத்து மாடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலவகைப் புறாக்களும்
பேரிறக்கை படபடக்கும்= தங்களுடைய அழ்கில் சிறந்த இறக்கைகளைப் படபட என்று அடிப்பனவாக;
புலர்காலை அழைப்பதுகேள் = மெதுவாக விடிந்துகொண்டிருக்கும் இளங்காலைப் பொழுதானது அழைப்பதனைக் கேட்பாயாக!
தூரகன்ற கால்வாயில்= மாசுகள் அகற்றப்பட்டு நீரோடும் தண்ணீர்ப் பாதைகளில்
தொடர்,நீரில் நீராடு = தன் வழியில் தொடர்ந்தபடி ஓடிக்கொண்டிருக்கும் நன்னீரில் மூழ்கிக் குளிப்பாயாக!
பார்விளங்க எழுகதிரின் = இந்த உலகம் விளக்கமும் தெளிவும் பெறும்படியாக சுடரொளி கூட்டி எழுகின்ற ஞாயிற்றின்
படரொளிபோல் போராடு= பரந்துபடுகின்ற வெளிச்சத்தினைப் போல, மனைருட்டினை மாசுகளைக் களையும்படிக்குப் போராட்டம் நடத்து;
மார்,உறங்கு குழந்தை,ஏர் = தனது மார்பினிலே குழந்தையினைப் போட்டு நடப்பவர்கள் போல் உழவுக்கான கலப்பையினைத் தோள்மீது தாங்கி நடக்கின்ற
மறவனது நடைதேரு =கலங்காத உரமுடைய கருணை தங்கும் நெஞ்சினன் ஆன உழவனது பெருமைதுலங்கும் நடையினைப் பார்த்து மகிழு! அதைப் பயிற்சி செய்!
போருறங்கி = அழிவுக்கான ஆரவாரங்கொண்ட போர்ச் சத்தங்களும் ஆயத்தங்களும் அடங்கிப்போய்
அமைதிகண் புலர்ந்திடவே= அமைதியானது கண்விழித்து நன்மைகள் வெளிப்பட்டுப் பரவிடும்விதமாக
தமிழ்பாடு= அழகிய இனிய விழிப்பூட்டும் களிப்பூட்டும் ஊக்கமூட்டும் பாவை முதலான தமிழ்ப்பாட்டுக்களைப் பாடுவாயாக!
== !! ==
இதற்கு உரை நயம் எழுத விரும்புவோர் முயற்சிக்கலாம்--
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
