இவ்வளவேனும் காதல் செய் - பாகம் 2 - யாழ்மொழி
தமிழச்சி குந்தவை வாழ்ந்த
தனக்குறைவிலா தஞ்சையில்
வாலிபம் குறையாது வரவேற்கும்
வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமின்றி
தொழிலதிபர் தனசேகரனும் அதன்
மற்றோர் அடையாளமே...
பழமையும் வளமையும் நிறைந்த
பாரம்பரிய இல்லத்தின்
தலைவியான அருள்நிதியம்மாள்
மங்கள கோலத்தில் பூசை செய்துகொண்டிருக்க
பணியாள் ஒருத்திவந்து
படபடப்புடன் கூறினாள்
"சின்னம்மாவின் கைகள் அசைகிறது
வைத்தியர் உங்களை வரச் சொன்னார்"
அமைதி என்பதிழந்து அழுதழுதே
ஆண்டொன்றினை கடத்திய தாயுள்ளம்
அதைகேட்டு ஆனந்த கூத்தாடியது...
அடுத்த நொடி
அந்த பிரம்மாண்ட அறைக்கு வந்தனர்
தனசேகரன் அருள்நிதியம்மாள் தம்பதியர்.
அழகென்றால் அவள்தான் எனலாம்
மாரன் மயங்கும் மதிசுந்தரி
தியங்கிய நிலையில் இருக்க
அவளை சோதித்த வைத்தியர்
மறுமொழி கூறினார்
" எல்லாம் குணம் என்றாலும்
நினைவுகள் மட்டும் நூறு சதவீதம் இல்லை..."
கேட்டதும் கதறினாள் தாயானவள்
ஈசனே ஈதென்ன சோதனை...?
அன்னையின் அன்பினை மறந்திடுவாளா..?
நெஞ்சில் தாங்கிய தந்தையின்
நினைவிழப்பாளா..? இது நியாயமா?
நிதர்சனா...... நிதர்சனா......
என் கண்ணே உனக்கா இந்த நிலை.?
அந்த விபத்து மட்டும் நடக்காதிருந்தால்....
தாழம்பூ மணமே தாய்மையளித்த தலைமகளே
விழிதிறந்து ஒருமுறை எனை பாரம்மா
அம்மா என்றழைத்து அடிவயிற்றை
அமிர்தத்தால் மீண்டும் நனைத்து
எனை அணைத்துக் கொள்ள மாட்டாயா...?
சத்தமிட்டுக் கதறியவர்
மகளின் தலைமாட்டில்
மண்டியிட்டு அமர்ந்தபடி
அழுது கொண்டிருந்த நேரம்..
நிதர்சனாவின் கருவிழிகள்
இங்கும் அங்குமாய் அலைமோதி
இமைப்போர்வை விலக்கிப் பார்க்க
துடித்துக்கொண்டிருந்தது...
எந்த நொடிக்காக காத்திருந்தாரோ
அந்த நொடி நெருங்குவதெண்ணி
நெஞ்சம் கணமாகி நின்றத் தாய்
மனதிற்குள் கேட்டுக்கொண்டார்
"நினைவிருக்க வேண்டும்
மகளே நிதர்சனா
நீ எனக்கு முழுமையாக வேண்டுமடி தங்கமே...
அந்நொடி...
மெல்லத் தன் விழிதிறந்து
சூழ்ந்திருக்கும் அனைவரையும்
சோர்வுடன் பார்த்தவள்
யாரையோ தேடினாள்....
(தொடரும்)