உலகில் நான்கண்ட தெய்வம்
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எனதருமை நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு அற்புத நிகழ்வை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது இடம் மற்றும் திருமண கச்சேரிகளில் பிரபல இசைகலைஞர்களுடன் பாடியும் தொகுத்தும் வழங்கியுள்ள நான் முதன்முதலாக கடந்த டிசம்பர் 2-ம் (02/12/2014) தேதி சென்னை, வடபழனி கமலா தியேட்டர்-ல் நடைபெற்ற “பெருமா கோவில் உண்டச் சோறு” இசைத்தட்டு வெளியீட்டுவிழாவில் விழாத் தொகுப்பாளராக கலந்துகொண்டேன். கடவுள் அருளிய பாக்கியம் எனக்கு கிடைத்ததுபோல் விழாவானது திரு. கல்யாணசுந்தரம் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் பிரபல இயக்குனர்கள் திரு. பேரரசு , திரு. ரவிச்சந்திரன் மற்றும் படத்தின் நட்சத்திரங்கள், ஒளிப்பதிவாளர்கள் , இசையமைப்பாளர், பாடலாசிரியர் கலந்துகொண்டார்கள். இதில் என்னை கவர்ந்த விடயம் மேலும் எனது பாக்கியமாக நினைத்தது திரு. கல்யாணசுந்தரம் அய்யா அவர்களை நேரில் வாழ்த்தி வரவேற்று ஆசிபெற்றது. மிகவும் எளிமை, இயல்புநிலை யதார்த்தம், திறந்த மனம், வெளிப்படையான குழந்தையுள்ளம் குரலென பேச்சு, வாழ்வின் அர்த்தம், போதுமென்ற நிலை, உழைப்பு இப்படி சொல்லிகொண்டே போகலாம். காந்தி, காமராஜர், புத்தர், ஏசு, முகம்மது நபி, இவர்களைப் பற்றி படித்தறிந்த நான், எனது வாழ்நாள் காலத்தில் அவர்கள் அனைவரையும் மொத்த உருவமாய் கண்ட ஒரு அற்புத மனிதர் அய்யா அவர்கள்.
என்னடா ரொம்ப சொல்லிக்கிட்டே போற, அவர் யாருன்னே எனக்கு தெரியல விஷயத்த சொல்லுடான்னு கேக்குறீங்களா..? சரிங்க இப்படி சொல்றேன் உங்களுக்கு “பக்”-குன்னு புரியும். திரு. ரஜினிகாந்த் அவர்கள் தந்தையாக தத்தெடுத்துக்கொண்ட மனிதர்தான் இவர். இது போதாதா..? இப்போ உங்களுக்கு தெரிஞ்சிக்கனும்னு ஆவல் வந்திருக்கும்னு நினைக்குறேன்..! அவரை வரவேற்க என்னால் இயன்ற விடயங்களை கேட்டும், கூகுள் பண்ணியும் தெரிந்த ஒரு சில உண்மைகள் இது . அனால் அவரையே நேரில் பார்க்கும்போது வாழ்வின் அர்த்தம் புரிந்த சந்தோசம் எனக்கு. அவரைப்பற்றி மேலும் நிறைய அறிய நீங்களும் கூகுளில் முயற்சியுங்கள் வாழும் தெய்வத்தை மனிதநேயத்தை பார்க்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
அந்த ஒரு நிகழ்வில் அவரை வரவேற்று அவர் பேச்சில் இருந்து எடுத்த விடயங்களை எனது அடுத்த பதிவில் கவிதையாக உங்கள் பார்வைக்கு தொகுத்துள்ளேன். என்காலத்தில் எழுத்துக்கள் மற்றும் வரிகள் அர்த்தமாகிறதென்றால் இதுபோன்ற நல்லுள்ளங்களுக்காக காலம்மொதுக்கி வாழ்த்துவதே..! நல்ல மனிதநேயம் உங்களையும் தூண்டிவிட்டால், உங்களுக்குள்ளும் இருந்தால் பொறுமையோடு வாசித்துப் பாருங்கள். பேச்சுக்கள் ஒவ்வொன்றும் உண்மை..! காணக் கிடைக்காது.
திரைப்படத்தை பற்றி எதுவுமே எனக்கு தெரியாது.. இந்த படத்தில் “பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப் படுத்தக்கூடாது” என்னும் கருத்தை வலியுறத்தி இருப்பதாக சொன்னார்கள். அதான் கலந்துகிட்டேன். நீங்கன்னு இல்ல பக்கத்து வீடு பாட்டிக் கூப்பிட்டாகூட நான் நல்ல விடயமேன்றால் யோசிக்க மாட்டேன் போய்வருவேன் என்றார். உதவிகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்று சாடும் அவர் மனிதகுலத்திற்கு ஒரு மகத்தான வரவு தானே.. சிந்திப்போம் நாமும்..!