சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015
![](https://eluthu.com/images/loading.gif)
சாதி ஒழி மதம் அழி சாதி
~~~~~~~~~~~~~~~~~~~~
சாதிக்குள் சங்கமிக்கும் அரசியலின்
தலைமை தகர்ந்து தரையோடு சிதறட்டும்
தீண்டாமைப் புகட்டும் மனிதனின்
இதயம் கிழிந்து வலியோடு அலறட்டும்
அனுமதி அளிக்காத கொள்கையின்
நுட்பம் பிளந்து அடையாளம் மறையட்டும்
தாக்குதல் பரப்பும் பயங்கரத்தில்
ஒற்றுமைப் பிறந்து சாதியுணர்வு சாகட்டும்
ஓரமாய் ஒதுக்கும் ஒதுக்கீட்டின்
விகிதம் சரிந்து சரித்திரம் மாறட்டும்
மனிதம் உணர்த்தா ஊடகத்தின்
முகத்திரை உரிந்து அலைவரிசை அழியட்டும்
கலப்புமணம் கலைக்கும் கலவரத்தின்
ஆயுதம் வீழ்ந்து அகிம்சையே பரவட்டும்
சமத்துவம் எதிர்க்கும் வீதிகளின்
வளமை வறண்டு வறுமையே நிலைக்கட்டும்
மதவெறியை விதைக்கும் வசனத்தின்
உச்சரிப்பு உடைந்து ஊமையாய் உலவட்டும்
பிரிவினையைப் புகுத்தும் புராணத்தின்
மூலங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகட்டும்
சாதியொழிப்பை மறுக்கும் மதத்தின்
மடமை மடிந்து மண்ணோடு புதையட்டும்
மதத்தை வளர்க்கும் கடவுளின்
கருவறைச் சிதைந்து கடலோடு மூழ்கட்டும்
- இராஜ்குமார்