கட உள்
கடவுளாகிப் போவது
வரமென்று யோசி...
அதே கடவுளாகி வாழ்வது
சாபமென்று பேசி....
தூசு தட்டிய திமிர்களில்
நிறைய பெண் கடவுள்கள்
மனிதர்களால்
கொல்லப்பட்டவர்கள்...
கற்க கசடற.... கசடும் கற்க...
தீவினை அகற்ற..... தீ வினை ஆற்று...
சொல்ல சொல்ல
இனிக்குமென்றால்
கேட்பது கசக்குமா....?
பூவிதழ் உதிரும் போது
சாத்தானின் சிறுநீர் சிவக்கும்...
கலகம் செருப்பு கொண்ட
நீர் பூத்த நள்ளிரவு....
உலகம் வளமாக, வேலி பயிர்
மேய்தல் நலம்...
காடு அழித்த சூட்சுமம்
மயிராய் உதிரும் வாழ்வியல்...
கட்டுமரம் காய் காய்த்த
பின்னிரவில் மீன்கள்
பாடுபொருள்...
சொல்லொனா இன்பம்,
மூத்தவளுடன்
துய்த்துக் கிடப்பது....
இளம் பிறை நிலவில்
களங்கம் துடைத்துக் கொண்டே
கிடக்கிறாள்
வறுமைக்கான பாட்டி....
கட்டாந்தரைக் கதவு
திறந்த பின் அறை இருக்கிறது
சுவர் இல்லை.....
தலைவிரி கோலமாய்
வந்திறங்கிய வேதாளம்
திரும்பிய நொடியில் கடவுளானது
கட்டடம் உடைத்த காட்சிகள்
பதிந்து கிடந்தன
கை அழுகிய கோயில் வாசல்
பிச்சைக்காரன் பசிக்குள்....
அதுவாகவே இருப்பதில்
அரூபக் கனவின் ஆற்றாமை
வெள்ளோட்டம்....
மூச்சு முட்டக் குடித்த பின்
கீழே கிடந்தான் அவன்....
அவள் யோசிக்கும் முன்னே
தீ பிடித்துக் கிடந்தாள்
மூங்கில் காட்டோடு....
உயிர் சொல்லும் உனது
ஒன்றுமில்லை
கட உள்
என்பதே.....
கவிஜி