முதல் காதலும் _கடைசி சந்திப்பும்
முழுமதியின் சுடரொளியில்
முதன்முதலாய் அருகிலுனைக்காண ..
முகம்பூத்து நின்றிருந்தேன் ...நான் ..!
தூரத்துப்புள்ளிகளாய் ... நீ வர
துடிதுடிப்புடன் மனம்
துள்ளலானது உன் பிம்பம்கண்டு ..
நீ வந்தாய் ..
இயல்பாய் இருந்தாய்
இதயத்தால் சிரித்தாய்
இடிவிழுந்த மொட்டைப்பனையாய்
இயல்பான உன்பார்வைக்கே
மொத்தமும் பற்றியெரிந்தது ..என்னுள்
'காகிதப்பூக்களை '
கரங்களில் ஏந்தியிருந்தாய் ...
துணைக்கு அழைத்து வந்திருப்பாய் போலும்?
இலேசான நடுக்கத்தில்
ஒவ்வொரு பூக்களையும்
பிய்த்துக்கொண்டிருந்தன
பிஞ்சையொத்த ..உன் விரல்கள் !
சட்டென என்னிடம் நீட்டினாய்
கரம் தொட்டு பெற்றுக்கொண்டேன்
கணநேரம் ..என்னுள்
கடைசிசொட்டு இரத்தம்வரை
தாறுமாறாக தறிகெட்டோடி
காகிதபூக்களும் ..வாசம் வீசின
உன் கரம்பட்டதால் ...
ஏதேதோ பேச எண்ணி
நீ பேசுவாயென
நானும் ...
நான் பேசுவேனென
நீயும் ...
நகர்ந்தன பொழுதுகள் ..
"அம்மா தேடும்"....மெல்ல இதழ் விரித்தாய்
அமுதமாய் செவி ஏற்றுக்கொண்டது ...
அடுத்த வார்த்தைக் கேட்க
காது மடல்கள் சிலிர்த்தெழுந்தன ..
முத்தமிடலாமா...
முட்டள்தனமாய் யோசித்து
மெல்ல கரம்பிடித்தேன்
சட்டென விலகி
'கிளுக்கென ' சிரித்தாய்
மொத்தமாய் சரிந்தேன்...
முகம்சிவந்து ..நீ விலக
எதையும் பெறாமலே
எதுவும் சொல்லாமலே
முற்றுப்பெற்றது ..நம்
முதல் காதலும் ..கடைசி சந்திப்பும் !
ஆனாலும்
என்னுள் ..நான் சிலிர்க்கையில்
வெற்றுக்காகிதத்தில்
எழுதாத எழுத்துக்களாய்
மின்னின ....
"நம்மிடம் ...நாம் "
சொல்லாத வார்த்தைகள் ?
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்