கொலை கொள்ளை காதல் வக்கிரம் - செய்திகள்
செய்திகள் வக்கிரம்.?
இனிதாக எழவேண்டும் பொழுதென்று
இறைவனை நானும் தொழுதிட்டு
இன்றைய செய்திகள் படித்திடவே
இதயமும் ரணமென நகருதடி..!
தலைப்பே உயிர்போக்கும் தாக்குதலாய்
துப்பாக்கி சூட்டினில் துடிக்கிறது..
தலைவர்கள் பதிவினில் கண்டனமோ
தலைவலி போல தொடர்கிறதாம்..!
விபத்தில் சிக்கிய காருக்குள்ளே
விசித்திர ஹவாலா பணக்குவியல்
வழக்கமாய் தொடரும் வடகிழக்கு
வந்ததால் நீர்மட்டும் உயர்ந்ததாம்..!
மனைவி மாமியார் மருமகனென
மூவரின் கொலையினில் ரவுடிகள்
மரித்ததோர் கணவன் உடல்தன்னை
மண்ணில் கொணர மனுகொடுத்தாள்..!
ஆளில்லா விமானம் அனுப்பியவரை
ஆள்தேடி பிடித்திட காவல்துறை
அனுப்பிய அவரையும் சிறைவைத்தது
அதிகாரம் விதித்ததினி தடையென்று..!
மறுபுறம் திருப்பினால் சினிக்கூத்து
மங்கள திருநாள் பொங்கலன்று
மலருமாம் புதிய படங்களென
முக்கிய செய்தியாய் மூன்றுபடங்கள்..!
கடமையை சரிவரச் செய்யாதொரு
காவலர் உருமாறி திருடனானார் ..
குடிக்கும் சுகத்துக்கும் ஆசைப்பட்டு
குதூகல கோலத்தில் பிடியும்பட்டார்..!
பாலியல் தொல்லைகள் பட்டியலாய்
பக்கம் பக்கமாய் வரும்செய்திகளோ
பள்ளியின் வாத்தியார் கூத்துகளை
படித்திட மனிதத்தின் வெட்கக்கேடு..!
ஒருதலை காதலில் இருகொலைகள்
ஓடிவந்த காதல்ஜோடி காவல்தஞ்சம்
ஒருபுறம் கடத்திடும் குழந்தைகளை
ஒருலட்சம் விலையாக்கும் வியாபாரங்கள்..!
வித்தியாசம் இல்லாத படங்களுக்கு
விரிவாக்கம் கொடுத்திட வொருபகுதி
விளையாட்டு செய்திகள் தொகுப்பிற்கு
விவரமாய் வழங்கிரம் தொடர்பகுதி..!
எப்படியும் படித்துவிட்டேன் பக்கங்களை
எழுந்திரவே மனமில்லை எனக்குள்ளே..!
எல்லையிலா வக்கிரமாம் செய்தியாலே..!
என்வாழ்வும் வீழ்ந்திடுமோ யின்றேயென்று..!
அச்சாணி இல்லாத வாழ்க்கையிலே
ஆயுளது நம்கையில் இல்லையென்று
அவமானம் எனக்குள்ளே வந்துவிட
அச்சத்தில் அலுவலகம் கிளம்பிவந்தேன்..!
கொலை கொள்ளை கருமாதியென
கண்டால்தான் நல்லதொரு செய்திகளாய்
கண்மூடி பார்க்கின்ற விடயங்களை
காணாமல் முடியா தாக்கிவிட்டான்..!
மனிதங்கள் எல்லாமே மரணங்களாய்
மதிகெட்டு போகின்ற மண்ணுலகில்
மூளையெலா முள்குத்த முணுமுணுக்க
மனிதநேய மழின்தேதான் போகின்றோம்..!
நல்லதொரு செய்திகளை விதைத்துவிட்டு
நாசூக்காய் சொல்கின்ற வக்கிரங்களை
நறுகென்று சொல்லாதொரு நல்லொழுக்கம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதென்பேன்..!
நம்வாழ்வு நம்கையில் உள்ளதென்பேன்.. !