சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி- 2015
சாதி ஒழி மதம் அழி சாதி - ("பொங்கல் கவிதைப் போட்டி"- 2015)
============================================================
சாதிவளர்க்க, மதம்வளர்க்க, சாதிவளர, மதம்வளர
சாதிக்கும் ஆசையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்!
ஒழுக்கத்தைச் சொல்லவந்த ஒப்பற்ற மதத்தையெல்லாம்
மதம்பிடித்த மனிதனையே உருவாக்க வைத்துவிட்டோம்!
அனைவருமே ஒருசாதி அனைவருக்கும் ஒரு நீதி
சாதிக்கு உரிமைதந்து சாகடித்தார் மனிதத்தை!!
கடவுளயே கண்டுணர மதமெல்லாம் ஒருபாதை..
பாதையிலே பள்ளம்வெட்டி மறைத்துவைத்தார் தெய்வத்தை!!
இனிமேலும் சாதிமதம் சிறைப்பிடிக்க விடமாட்டோம்
பிறப்பினால் நிறம்பிரித்து கறைபடிந்து விடமாட்டோம்!!
பள்ளியிலே சாதிகேட்டால் கிள்ளிவிடு அவன்தலையை
சொல்லிவிடு மதம்கேட்டால் எம்மதமும் சம்மதமென்று!
கலப்புமணம் கற்றறிவு காசுபணம் மூன்றிருந்தால்
சாதிமதம் நம்வாசல் மிதித்திடவே முடியாது
உருவத்தை விட்டுவிட்டு உள்ளத்தை பார்த்துவிட்டால்
பிரிவினை பேச்சுக்கு இடமே இருக்காது!
காக்கைக் குருவிநம் சாதியென்று நினைக்கின்ற
தேசத்தில் பிறந்துவிட்டு பேதங்கள் செய்கின்றோம்
சாதியை தீயிட்டால் சமுதாயம் முன்னேறும்
மதத்தை மறந்துவிட்டால் மறுமலர்ச்சி தோன்றிவிடும்
நமக்குள்ளே உறைகின்ற சக்தியைநாம் கண்டுகொண்டால்
சமத்துவம் பூத்துவிடும் மனிதநேயம் மலர்ந்துவிடும்.
எல்லோரும் ஒன்றானால் தலைமுறைகள் சாதிக்கும்
எதிர்பார்த்த வல்லரசாய் நம்நாடு மாறிவிடும்!
இந்த கவிதையை நானே எழுதியது என்று உறுதி கூறுகிறேன்
பெயர்: ரா. முரளிதரன்
வசிப்பிடம்: 33/34, ராஜிவ் நகர், திண்டல், ஈரோடு
தமிழ்நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் : 8220447222
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
