இதயத் துடிப்பு

தனியாக தவிப்பவனாய்
தானியங்கி இயந்திரமாய்..
தாகத்தில் வேகமானவனாய்
தடைகடந்து போகிறான்..!
தசையெலும்பு நரம்பெலாம்
தனைசூழ நின்றாலும்
அசைவோடு துடிக்கின்றான்
அவனேதா னாயுளென..!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆசையின் உறவுக்கும்
அவனுதவி செய்தால்தான்
அரங்கேற்றம் என்கிறான்..!
திமிராக இருப்பவனும்
திறத்தோடு இருப்பவனும்
காதலெனும் கலப்புறவில்
கலகலப்பு இவனன்றோ..!
சுகத்திலும் சோகத்திலும்
சூழ்நிலை போரிலும்
விரைப்பென நிற்ப்பதிலே
வீரப்ப னிவனன்றோ..!
குருதியின் கொடைதனில்
குளுகுளு கொண்டாட்டம்
இருளெனும் நிழலினில்
இதயமாய் உயிரோட்டம்..!
இருக்கின்ற நாள்வரையில்
இன்பதுன்பம் தான்சுமந்து
இசைபோட்டு பார்க்கிறான்
இறுதிவரை முயற்சியென்று..!
பிறப்புக்கும் இறப்புக்கும்
பேர்வைத்த தொருபிள்ளை
பிழையாகி போய்விட்டால்
பிணமென்றும் நாமன்றோ..!