திரைக்குப் பின்னால்திரைப் பறவை 9
கதை திரைக் கதை வசனம் இயக்கம்....
ஒரு சினிமாவின் ஆன்மா.... இதற்குள் அடங்கி விடும்.....
இயக்கம் என்பது...... என்ன?
ஒரு காட்சியை நினைத்தது போல படம் பிடிப்பது......
வசனம் என்பது என்ன?
நினைத்த திரைக்கதைக்கு மெருகூட்டுவது........
திரைக்கதை என்பது என்ன....?
உருவான கதையை காட்சிகளாக்குவது......
கதை என்பது என்ன....?
யோசிக்கத் தேவையே இல்லை.... இதோ இப்போது உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறேனே..இது கூட ஒரு கதை தான்... நீங்கள் ஒரு கதை..அவர்கள் ஒரு கதை.. உங்கள் சொந்தங்கள் ஒரு கதை.. உங்கள் நட்புகள் ஒரு கதை.. உங்கள் காதலி ஒரு கதை.. உங்கள் கணவன் ஒரு கதை.. உங்கள் விரோதி ஒரு கதை.. உங்கள் பக்கத்து வீடு ஒரு கதை... உங்கள் சைக்கிள் ஒரு கதை.... உங்கள்... தனிமை ஒரு கதை.... உங்கள்...பின்னிரவு ஒரு கதை...உங்கள் பயணம் ஒரு கதை.... உங்களிடம் கையேந்தும் ஒரு சிறுமி ஒரு கதை...தினமும் செய்தித்தாளில்... வன்புணர்வுக்கு ஆளாகும் ஏதோ ஒரு பெண் ஒரு கதை.... உங்களப் போலவே நானும் ஒரு கதை....இப்படி, எல்லாமே இங்கு கதை தான்.. கதைகள் இன்றி வாழ்க்கையே இல்லை... நகர பாட்டிகள் கதை சொல்கிறார்களோ இல்லையோ..... இன்னும் கிராம பாட்டிகள் கதை சொல்கிறார்கள்.... அந்த கதைகள் உன்னதமானவை... நிஜமானவை.... நாம் இயற்கையாகவே கதைகளால் சூழப்பட்ட வாழ்வாதாரங்களைக் கொண்டு படைக்கப் பட்டுள்ளோம் என்பதே நிஜத்திற்கு நெருக்கமான ஒன்று தோழர்களே....
கதைகள் அழிந்தால் வரலாறு அழியும் என்பது உண்மை...
இன்று கதைகள் என்பது மிகவும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை நிரப்பிக் கொண்டு சுழலுவதாக ஒரு எண்ணம் வலிய திணித்து விடப்பட்டிருக்கிறது என்பதே உண்மை......கொரியன் கதைகளைத் திருடும் அளவுக்கு அந்த வட்டம் குருகியது தான் வருத்தம் நிறைந்த ஒன்று....உலக சினிமாவில் இருந்து தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வது தவறல்ல... ஆனால் இங்கு இல்லாத ஒரு கதையை வேறு எங்கு தேடினும் அது இன்னும் பல நூறு மைல்கள் பின்னோக்கிய தூரம் தான் நம் கதை சொல்லும் பண்பாட்டுக்கு ....
கதைகளால் நிறைந்த நாடு நமது... கதைகளால் நிறைந்த வீடு நமது....கதை கேட்டு கதை சொல்லி கதையோடு பயணித்த ஆன்மா நமது....ஒவ்வொரு பாட்டியும் ஒவ்வொரு தாத்தாவும்... கதைகளின் வேராக இருந்தது நம் தலைமுறைக்கு தெரியும்...கதை இல்லாத சமூகத்தின் பாட்டை தனிமைகளே நிரப்பிக் கொள்கின்றன.... இணையத்தின் கதைகள் ஒரு போதும் கூட்டாஞ்சோறு ஆக்க கற்றுத் தருவதில்லை.... இதோ இன்றைய 20களில் இருக்கும் பெரும்பாலான நம் தோழர் தோழிகளுக்கு கதை கேட்கும் பக்குவமோ கதை சொல்லும் நுட்பமோ இல்லாமல் போனதற்கு யார் காரணம் ........?
இங்கு எல்லாமே வியாபார மையம்.. தாராள மையம்...
உலகமயமாதலில் செல்போன் விற்கப்பட்டது தான் இந்தியாவின் மிகப் பெரிய சாதனை... காரைப் பல் சுப்பனும்... கஞ்சிக்கு வழியில்லாத குப்பனும் இன்றும் கிராமத்தில் சாக்கடை அள்ளிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. சட்டைப் பையில் செல்போன் என்பது தான் கதைகளின் திருப்பம்.....
கதை சொல்ல பாட்டிகள் பலர் நமக்கு இல்லாமல் போகலாம்.. ஆனால் கதையின் செவிகள் நம் ஆழ் மனதில் திறந்தபடியே கிடக்கின்றன..... அது ஒரு ஆலமரத்தையோ... ஒரு இருள் சூலியலையொ.....வெண்ணிற வானங்களையோ.....வண்ண வண்ண மழைத் துளிகளையோ......நமக்கு தந்தது கொண்டே இருக்கின்றன...புத்தகங்களும், புனைவுகளும், நாவல்களும், சிறுகதைகளும்.. சினிமாவும் இல்லையென்றால்.. நாம் பைத்தியமாகி செத்து விட்டிருப்போம் என்பதில் ஐயமில்லை....
யோசித்துப் பாருங்கள்.... நீங்கள் எதில் அதிகமாக கற்றுக் கொண்டீர்கள்..... ஒன்று சினிமா.... ஒன்று புத்தகம்........சக மனிதன் என்றால் முன் சொன்ன இரண்டும் அவனிடம் இருந்திருக்கும்.....இவை எல்லாம் கலந்தது தான் அனுபவம்....(எழுத்து கண்டு பிடிக்காத போது .. வாய்வழி செய்திகள்-கதைகள்) ஆக.. ஒரு வட்டத்தின் துவக்கம் எப்போதும் கதையாகவே இருக்கிறது... மனிதன் மனிதனாக வந்ததே ஒரு மாபெரும் கதை.... அவன் இருப்பதோ...மற்றொரு கதை.... அவன் இறப்பதோ அதை விட பெரும் கதை...... ஆனால் பல கதைகள் மறக்கடிப்படுகிறது...பட வேண்டும்..... அது உயிரின் நியதி...மறதி இல்லாது போனால் மனதின் வலிமை என்னாவது....?
இப்படி கதைகளால் சூழப்பட்ட ஒருவன்.. ஒரு புதிய கதையை சொல்ல முயற்சி செய்கிறான்.....அதற்கான கரு கிடைக்கும் நேரம் ஒரு மைக்ரோ நொடிக்கும் குறைவாக இருக்கலாம்.. பத்து நிமிடமாக இருக்கலாம்.. ஒரு நாளாக இருக்கலாம்.. ஒரு வருடம் வரை கூட உறுமீனுக்கு காத்திருக்கும் கொக்கைப் போல காத்து இருக்கலாம்...அதன் பிறகு அவன் தேடிய அந்த புதிய கரு கிடைக்கலாம்.... கரு ஒன்றாக கிடைத்தால் பரவாயில்லையே.. அது, கூட இன்னும் சில கருக்களைக் கூட்டிக் கொண்டே வரும் என்பதில் தான் சிக்கலே...வாழ்கையில் ஒன்றை விட ஒன்று மேல் என்பது தானே பொது விதி.... அது கதைக்கும் பொருந்தும்.. கதை தேடுபவன்.. தீர்மானம் இங்கு தான் அவனை நிலை நிறுத்துகிறது.....தன் ஆழ் மனதில், தான் தேடிக் கொண்டிருந்த கதை இது தான் என்று முன்னால் இருக்கும் பல கருக்களில் இருந்து அந்த நிஜமான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.... அதற்கு நியாயம் செய்ய வேண்டும்.. இந்த கருவை நான் ஏன் சுமக்க வேண்டும் என்ற மாபெரும் கேள்விக்குள் அவன் தன்னை நுழைத்து தன்னையே யாகம் செய்து... ஒரு முடிவுக்கு வர வேண்டும்....
கருவை கதையாக மாற்றுவது ஒரு நிகழ்வு.. அதற்கு கரு சுமக்கும் மனம் எட்டு திசைகளிலும் கண்களைத் திறந்தே கொண்டே ஒரு மீனைப் போல கொக்குகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டே பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்....கதை மாயங்கலானது...மாயம் செய்யும் மாயஜாலத்தை கதை சொல்பவன் கண்டு மிரண்டு விடக் கூடாது.. மிரள்வது போல பாவனை செய்து அக் கதையை ஏமாற்றி அதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.. அதற்கு அந்த கரு அதைத் தாங்கும் வலிமை கொண்டதாக இருத்தல் கச்சிதம்...
அந்த வலிமை இல்லாத போது தான் அதன் மீது கட்டப் படும் கதையும் திரைக்கதையும்... இயக்கமும் சரிந்து படம் பாதாளம் நோக்கி சென்று தயாரிப்பாளரை தூக்கில் தொங்க விட்டு விடுகிறது என்பதை இங்கு நாம் யோசிக்க வேண்டும்...அதே நேரம் சரியான கருவையும் வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தூக்கில் தொங்க விடுவதும் இயக்குனரின் சாமர்த்தியம்....சினிமாக்கள் வெறும் காட்சிகளின் கோர்ப்பு மட்டுமல்ல அது வாழ்வின் தேடல்... கற்பனையாக இருந்தாலும் அதன் ஆன்மா கதையாகப்படுகிறது.. அதில் ஒரு உன்னதம் இருக்கிறது.. ஒரு சில்லிடல் இருக்கிறது.... ஒரு ஆசுவாசம்.. ஒரு கோபம்.. ஒரு நம்பிக்கை... ஒரு நெகிழ்வு.. இருக்கிறது.. எல்லாம் இருந்தும் இல்லாதது போல ஒரு வெறுமை கூட இருக்கிறது..
நாம் பெரும்பாலும்.. கண்களை மட்டுமே திறந்து கொண்டு இருக்கிறோம்.. மிக அதிகமான சமயங்களில் வாயை மட்டுமே திறந்து கொண்டு இருக்கிறோம்.. காதுகளை தெரிந்தோ தெரியாமலோ மூடிக் கொண்டே இருக்கிறோம்.. இனி காதுகள் திறக்கட்டும் .. கதைகள் கேட்போம்.. பத்து கதைகள் கேட்கும் போது ஒரு கதை தானாக வரும்.,. இன்னொன்றையும் கூட்டிக் கொண்டு... சல்லடை போடுவதும் சல்லடை ஆவதும் காகிதத்தின் வேலை அல்ல .. மேலே உருளும் விரல்களின் வேலை....ஒரு கதையாசியர் அல்லது இயக்குனர்....அப்படி கதை பேசி, கதை பேசி.. கதை கேட்டு, கதை கேட்டு.... அதுவா இதுவா...என்று குழம்பிய குட்டையாகி ஒரு வழியாக தெளிந்து ஒரு கருவில் ஒரு புது கதையை வளர்த்து எடுத்து விட்டால்.. அடுத்து கதை விவாதம் தான்...... அது அத்தனை சுலபமல்ல.....
திரைக்கு பின்னால்.....
கவிஜி
*நன்றி தோழி... கிருத்திகா அவர்களுக்கு....