பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

அட எங்கவீட்டு செவளை சிறுக்கி
இறங்கி வந்தால் பரணிலிருந்து
இத்தனை நாள் பரணில் உறங்கி
கறுத்துவிட்டால் கவலையில் கிறங்கி ....!

மங்கலமாய் குளிச்சிமுளிச்சு
குங்கும பொட்டு வச்சு
மஞ்சள் தாலி கழுத்தில் கட்டி
மண்ணை அள்ளி உடலில் பூசி
வேகமாக போகிறாளே ! உடன் கட்டையேற...!!

வேண்டும் தண்ணிய குடிச்சி வயிரநிரப்பி
கூட்டிவச்ச அடுப்பில் ஏறி
வெந்து கிடக்குறா சிவந்த மேனியாக...!
சுட்ட மேனியை திரும்ப சுட்டா
சுகமாய்தானிருக்கும்னு சொல்லும்
சிறுக்கியவ பேரு மண்பானை....!

சறுக்கி விழுந்த புடவையை சரிசெய்து
குலுக்கி மினுக்கி தலைவாரி திலகமிட்டு
கட்டை குச்சியை கையில்வைத்து
முக்கண் முதல்வனை கும்பிட்டு
முக்கல் வைப்பார் பெண்கள் பொங்கலிட...!

சுட்ட பானைக்கு சூடுவைக்க
சுடாத கையை சுட்டுக்கொள்ள
இஷ்ட பொங்கல் வைக்கிறாள்
இனிப்புபொங்கல் முதலாக...!

கட்டிவெல்லம் உடைத்து போட்டு
ஏலம் முந்திரி திராட்ச்சை
பாசிபயிரை வறுத்துபோட்டு
நெய்விட்டு சமைக்கிற பிறர் மனம் மணக்க !


கொதிக்கும் நீரில் அரிசி குதிக்க
குலவை போட்டால் தமிழ்பெண்ணே!
கூடியிருக்கும் கூட்டமெல்லாம்
கூவி முடிக்குது கோரசாக
"பொங்கலோ பொங்கல் "....!!

தமிழர் திருநாள் தை பொங்கல்
உழவர்களின் திருநாள் !
விளைந்த மண்ணுக்கு பூஜைசெய்து
நன்றி செலுத்தும் பெருநாளாம்...!

உழுது களைத்த காளைகளுக்கு
ஊட்டி மகிழும் திருநாள்! மறுநாளாம்!
மனிதன் மானமாய் கருதிடும்
வீரத்தை தானும் வளர்த்துக்கொள்ள
மல்லுக்கு நிற்பான் ஜல்லிக்கட்டில்...!!

அடக்கிய வீரனுக்கு பொற்கிழிகள்
அள்ளிக்கொடுப்பாள் அத்தைமகள்!
இப்படி வாழ்ந்த தமிழர்கள் தான்
எப்படி இருக்கார் பாருங்களே !

நலமும் மனமும் காண்பதற்கே
நாம் வருடம் ஒருமுறை கூடிடுவோம்
குதூகலத்தில் மகிழ்ந்து உறவாடி
கொண்டாடிடுவோம் பொங்கல் திருநாளை !!

எழுதியவர் : கனகரத்தினம் (14-Jan-15, 11:23 am)
பார்வை : 207

மேலே