கருச்சிதைவு

ஆயிரம் ஆண்டுகள் பின்னும் நிலைக்கும்
வீரியக் கவிதை ஒன்றுளது என்னிடம்,

நாட்டின் நிலையைத் புரட்டிப் போட்டிடும்
நவீனக் கவிதை ஒன்றும் உளது,

ஏழைச் சிரிப்பினில் இறைவனை ஏற்றி
பீடை போக்கும் கவிதை ஒன்றும்

ஏற்றத் தாழ்வுகள் இலாதிவ் உலகை
மாற்றிக் காட்டிடும் கவிதை ஒன்றும்

உழைப்பின் பெருமையை உயர்வின் சிறப்பைத்
தழைக்கும் அன்பைப் போதிக்கும் ஒன்றும்

இமைப்போதும் பிரியா இன்பக் காதலை
அமரக் காதலாய்ப் பாடும் கவிதையும்

இயற்கையும் இறையும் மழலையும் மழையும்
செயற்கை அறிவின் செவிக்குச் சொல்லும்

பாட்டுத் திறத்தால் வையம் முழுதும்
நீட்டும் வானமும் நிலவும் மீனும்

ஆளும் கவிதைகள் ஆயிரம் உண்டு
மாலை வந்துநான் எழுதிமுடிப்பேன்,

காலை,

அடுத்த வேளை உணவுக்கேங்கும்
வயிற்றுப் பசியின் வழக்கொன்(று) இருக்கே!

எழுதியவர் : விஜயநரசிம்மன் (18-Jan-15, 11:32 am)
பார்வை : 119

மேலே