எழுதாத சட்டம்
அன்று மப்பும் மந்தாரமுமான இரவு நேரம். டாக்டர் சரளா மகளிர் விடுதியில், வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் எதிர்த்தாற் போலிருந்த வீட்டிலிருந்து சண்டை சச்சரவும் ஒரு பெண்ணின் அலறலும் கேட்டது.
சரளா வெளியே வந்து பார்த்தபோது நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் ஒரு இளம் பெண்ணைப் பிடித்து அடிக்காத குறையாய் “மானத்தை வாங்குறியே, மானத்தை வாங்குறியே” என்று கரித்துக் கொண்டிருந்தார். அந்த இளம்பெண் “எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம்! என்னை விட்டுடு!” என்று தன் கணவனிடம் கை கூப்பி கெஞ்சிக் கொண்டிருந்தாள். கழுத்தில் பிரிபிரியான தாலிச்சரடு அவள் புதிதாகத் திருமணமானவள் என்று காட்டியது.
கொஞ்ச நேரம் கவனித்துப் பார்த்த சரளாவுக்கு கணவன் மனைவிக்குள் ஏதோ அந்தரங்க பிரசினை என்று புரிந்தது.
“ஹலோ, நீ..நீங்க எங்க படிச்சீங்க?” ஏதோ பரிச்சயமானவள் போல அந்த இளம் பெண்ணிடம் கேட்டுக்கொண்டே சரளா அவர்களுக்குள் நுழைந்தாள்.
அந்தப் பெண்ணின் பெயர் மாலதியாம். திருச்சி உலக மீட்பர் பள்ளியில் படித்திருக்கிறாள். “நானும் அங்கதான் படிச்சேன். நான் டாக்டர் சரளா ” நிலைமையை சீராக்கும் பொருட்டு பொய்யும் மெய்யுமாய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். சரளா படித்தது மதுரையில்... இப்போது அது முக்கியமில்லை.
வகுப்புத்தோழி, டாக்டர் என்றதும் குடும்பம் ஆசுவாசப்பட்டது. குறிப்பாக மாலதி ஒரு ஆதரவை உணர்ந்தாள்.
“ஸ்கூல்ல வேற செக்ஷனா டாக்டர் நீங்க? ” பதற்றம் நீங்கி மாலதி சகஜமானதும் சரளா வீட்டுக்குள் அழைக்கப்பட்டாள்.
பிரசினை இதுதான்...
“டாக்டர், என் புள்ள பக்கத்துல போனாலே இவ வேணாம் வேணாம்னு கத்தறா.. இப்படி இருந்தா என் வம்சம் எப்படி விருத்தியாகும்?” இது மாலதியின் மாமியார்.
மாலதி பேசத் தயங்கினாள். அவள் கை அடிவயிற்றைப் பிடித்திருந்தது. சரளாவின் காதோடு சொன்னாள்.
“ அதுக்கில்லேங்க சரளா, பயங்கர நீர்க்கடுப்பு.. ஒன் பாத்ரூம் போனா போறது சிறுநீரா, திராவகமான்னு தெரியாத அளவுக்கு அப்படி ஒரு எரிச்சல், அடி வயித்துல வலி..அப்பத்தான் பாத்ரூம் போயிட்டு வந்திருப்பேன், திரும்பத் திரும்ப போகணும்னு தோணுது. ஒரு மணி நேரத்துல பத்து பதினஞ்சு தரம் பாத்ரூமுக்கும் வீட்டுக்குமா நடக்க வேண்டியிருக்கு.. அத்தை கிட்ட சொன்னா எம்புள்ளைக்கு எந்த வியாதியும் இல்ல, இதையெல்லாம் நீ தாங்கித்தான் ஆகணும். பொட்டச்சி தலையெழுத்து அதுதாங்கிறாங்க.. என்னால தாங்க முடியல, அதான் கத்திட்டேன்”
மாலதி சொன்னதை அப்படியே அவள் கணவனிடம் தெரிவித்தாள் சரளா. “ உங்க மனைவிக்கு இந்த பிரசினை இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா? ”
“ இவ்வளவு விவரமாத் தெரியாது..அம்மாகிட்ட கேட்டேன், அதெல்லாம் ஒண்ணுமில்ல சூட்டு வலின்னுட்டாங்க. ” ஒப்புக் கொண்டான் மாலதியின் கணவன் சுந்தர்.
சுந்தர் ஆட்டோமொபைல் வைத்திருக்கிறான். வீட்டிலும் மோட்டார் மற்றும் உதிரிப்பாகம் எடுத்து வந்து பழுது பார்ப்பானாம். தன் வேலை முடிந்ததும் அப்படியே படுக்கையறை சென்று விடுவானாம்.
சரளாவுக்கு எங்கே பிரசினை என்று புரிந்தது. எப்படி விளக்குவது?
“சுந்தர் சார், உங்க கிட்ட கர்சீப் இருக்கா? கொஞ்சம் கொடுங்களேன்? ” கை நீட்டினாள் சரளா.
“கர்சீப் இருக்கு, அழுக்கா இருக்கே? கொஞ்சம் இருங்க, சுத்தமான புது கர்சீப் உள்ள இருக்கு; எடுத்து வரேன்”- எழுந்த சுந்தரை அமர்த்தினாள்.
“நீங்க உங்க மனைவியை நேசிக்கிறீங்களா? ” கேட்டாள்.
“இது என்ன ப்ரஸ்டீஜ் குக்கர் விளம்பரம் மாதிரி என்று சிரித்த சுந்தர் ஆமாம் என்றான்.
“முன்னே பின்னே தெரியாத எனக்கு சுத்தமான கர்சீப் கொடுக்கணும்னு நினைக்கறீங்க; உங்க மனைவிக்கு சுத்தமான உடம்பைக் கொடுக்கலாமே? ”
சுந்தர் புருவம் உயர்த்தினான்.
“உங்க மனைவிக்கு வந்திருக்கிறது நோய்த் தொற்று. அந்த நோய்த் தொற்று உங்க கிட்ட இருந்துதான் வந்திருக்கு. வேலை நிமித்தமா வெளியே போய் உழைக்கிற ஆண் பிள்ளை வீட்டுக்கு வரும்போது அழுக்கையும் கிருமிகளையும் கொண்டுட்டு வர்ற வாய்ப்பிருக்கு. நீங்க மோட்டார் பாகங்களை சுத்தம் செய்றீங்க. கை நகங்கள் அழுக்காகலாம். சட்டை பாண்ட்டுன்னு உள்ளே வரை அழுக்குப் போகலாம். இந்த அழுக்கோட நோய்க் கிருமிகள் இருக்கலாம். நோய்க் கிருமிகள் உங்களை பாதிக்காம சும்மா உங்க மேல தங்கியிருக்கலாம்....
கணவர் எப்படி வந்தாலும் மனைவி அவரை ஏத்துக்கணும்கிறது நம்ம ஊர்ல எழுதப்படாத சட்டம்.
மனைவி கிட்ட போகும் போது பல்லை விளக்கிட்டு, கைகளையும் அந்தரங்க உறுப்பையும் சோப்பு போட்டு கழுவிட்டுப் போறவங்க எத்தனை பேரு?
அந்தரங்க உறுப்பை தோல் தூக்கி கழுவணும். தோலை சர்ஜரி பண்ணி எடுத்துக்கறதும் நல்லதுதான். மனைவிக்கு நோய்த் தொற்று வந்தால் நீர்க்கடுப்பு வரும், வெள்ளைப் படும். கருக்குழாய் அடைப்பு ஏற்படலாம்.. மலட்டுத்தன்மை வரலாம்..ஏன் கர்ப்ப வாய் புற்று நோய் கூட வரலாம்....! ”
சுந்தர் ரகசியமாகத் தன் நகங்களைப் பார்த்தான். அடை அப்பின மாதிரி எத்தனை அழுக்கு?
சரளா தொடர்ந்தாள்..
“நீர்க் கடுப்புக்கு மாத்திரை எழுதித் தரேன். அது சரியாயிடும்.. ஆனா உங்க குடும்ப சந்தோசம் உங்க கிட்ட தானிருக்கு! ”
மாத்திரை எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.
இது நடந்து ஒரு வருடமிருக்கும்.....
அன்று காலை பதினோரு மணியிருக்கும். சரளா வீட்டிலிருந்தாள்.
சட்டென்று பட்டுப் புடவையும் நகைகளும் சரசரக்க, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவர் அறைக்குள் நுழைந்தார். கையில் தட்டு; தட்டில் பூ,பழம்..அந்த அம்மாளுக்குப் பின்னால் ஒரு தம்பதி சிசுவுடன் நின்றிருந்தனர்.
“டாக்டரம்மா.. உங்க வழிகாட்டுதல்! எனக்குப் பேத்தி பொறந்திருக்கா.. குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுங்க”
சரளாவின் பதிலை எதிர்பாராமல் தட்டை உள்ளே வைத்தாள் அந்த அம்மாள்.
சிரித்தபடி குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு அதன் கையில் ரூபாய் நோட்டைத் திணித்து, பொதுவாகப் பேசி அனுப்பி வைத்தாள் சரளா. தன் கழுத்திலிருந்த பிரிபிரியான தாலிச்சரடை உள்ளே தள்ளினாள்.
சரளாவின் கணவர் வெளியூர் போய்விட்டு அன்றிரவுதான் வருகிறார்............
ராத்திரியை நினைத்தால்தான் ரொம்பப் பயமாக இருக்கிறது! சரளாவின் கை தன்னை அறியாமல் அடி வயிற்றைப் பிடித்தது.
முற்றும்.