திருப்பம் - முரளி

நண்பனிடம் தொலை பேசியில் பேசும் பொழுது இந்த வாரம் ஒரு சிறுகதை எழுத நல்லதொரு கரு  கிட்டவில்லை  என்று அங்கலாய்த்த பொழுது அவர்:

"நீ ரொம்ப சாதாரணமா ஒரே நேர் கோட்டில் வர்ணித்து எழுதுகிறாய், நல்ல திருப்பங்களுடன் எழுதினால்தான் உன் கதை இன்னும் நன்றாக இருக்கும்" என்றார்.

என்னடா இது நமக்கு இங்கே கருவே திண்டாட்டமாக இருக்க அதில் வேறு திருப்பங்களுடன் என்றால் என்ன செய்வது.  சிந்தித்துக் கொண்டே கைப்பேசியை திருப்பி வைத்து திரும்பினால்  FM-ல் கணீரென்று ஐயா சீர்காழி கோவிந்தராஜன் "திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா...."  என்ற பாடல் இனிமையாக இசைத்தது.  

உடனே மனைவி பக்கம் திரும்பி "நாம் திருப்பதி சென்று வரலாமா....? 

"என்ன திடீரென்று பக்தி மார்க்கத்திற்கு திரும்பிட்டீங்க... ?"

"ஒன்றும் இல்லை சும்மாத்தான் போய்விட்டு உடனே திரும்பி விடலாம்" 

"எனக்கென்ன லட்டு சாப்பிடக் கசக்குதா....?" என்றாள் இரட்டை அர்த்தத்தில்.  உடனே முடிவெடுத்தோம். அடுத்தநாள் காலை புறப்படுவது என்று.  எங்கள் தெருவிலிருந்து வலது பக்கம் திரும்பி நேரே சென்றால் பிரதான சாலை வரும். அங்கே இடது பக்கம் திரும்பி சற்று தூரத்தில் வலது பக்கம் திரும்பினால் நான் வழக்கமாகப் பெட்ரோல் போடும் இடம் வரும். வண்டியை திருப்பி பெட்ரோல் போட வாட்டமாக நிறுத்தினேன்...  யார் பெட்ரோல் போட வருகிறார்கள் என்று திரும்பி பார்த்தால், எப்பொழுதும் புன்னகையுடன் வரவேற்கும் நபர்  ஓடி வந்து "சார் லோடு வரல்ல நீங்க தயவு செஞ்சு கொஞ்ச தூரம் போய் திரும்பினீங்கன்னா  எங்களோட இன்னொரு பங்க் வரும் அங்க போய் போட்டுக்குங்க" என்றார். 

எனக்கு வெறும் கையுடன் திரும்புவது என்னவோ போல் இருந்தது.  இருந்தாலும் வேறு வழியில்லை.  வண்டியை அந்த பங்கை நோக்கித்  திருப்பினேன்.  முழு டாங்க் நிரப்பச் சொல்லி மீட்டரையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  லேசாக கழுத்து வலித்தது. டாங்கு நிரம்பியவுடன் அடுத்த ஐம்பது ரூபாய்  வரும் வரை தொடர்ந்தார்..  வண்டி டாங்க் மூடியை மூடிவிட்டு வந்து  என்னிடம் கிரெடிட் கார்டை பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றார்.  அவர் திரும்பி வருவதற்குள் நான் வண்டிக்குக் காற்று அடிக்க வண்டியைத் திருப்பினேன்.   என்னிடம் காற்றடிக்கும் இடத்துக்குத் திரும்பி வந்து கிரெடிட் கார்டைத் திருப்பித் தந்து திரும்பிச் சென்றார்... நான் வண்டிக்கு காற்றடித்து வீட்டுக்கு திரும்பினேன், நாளை அதிகாலை திரும்பவும் வண்டி எடுத்துக் கிளம்பணும்.

அதிகாலை நான்கு மணிக்குக் காலைக் கடன் முடித்து, காப்பி குடித்து, குளித்து ப்பூட்டிய வீட்டைத் திரும்பத் திரும்ப பார்த்து விட்டு காரில் வந்து ஏறினாள் மனைவி.  வண்டி அபார்ட்மென்ட் தாண்டியவுடன் நிறுத்தச் சொல்லி திரும்பிச் சென்று காவலாளியிடம் வீட்டு வேலை செய்பவர் வந்தால் பாலை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விட்டு, வீட்டு வேலைகள செய்யச் சொல்லுமாறு சொல்லித் திரும்பி வந்தாள். (எப்போதும் ஒரு சாவி அவரிடம் இருக்கும்)

ஒரு வழியாக வீட்டை விட்டு வண்டியை திருப்பி, திருப்பதி நோக்கி செலுத்தினேன்.   பூந்தமல்லி புற வழி சாலை வழியாகச் சென்று மோட்டல் ஹைவே எதிராகத் திரும்பி திருமழிசைக்குள் சென்று திருவள்ளூர் வழி பயணித்தோம்.   திருவள்ளூர் தாண்டும் பொழுது வண்டியை நிறுத்தி ஊருக்குள் திருப்பச் சொன்னாள் மனைவி.  வீண் கேள்வி, விவாதம் செய்யாமல் வண்டியை திருவள்ளூர் கோவிலுக்குத் திருப்பினேன்.  திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரிசனம் முடித்து திரும்பவும் தொடர்ந்தது திருப்பதி பயணம்.  வழியில் ஒரு இடத்தில் காப்பி டிபனுக்கு நிறுத்தியதைத் தவிர எந்த திருப்பமும் இல்லாமல் பயணம்  தொடர்ந்தது. 

மேல் திருப்பதி  போகலாம் என்று நினைத்து திரும்பினால் மனைவி என்னை முதலில் திருச்சானூர் சென்று தாயாரை தரிசிக்க வேண்டும் என்றாள்.  இந்த விஷயத்தில் எல்லாம் மனைவி சொல்லே மந்திரம். பேசாமல் வண்டியை திருச்சானூருக்குத் திருப்பினேன்.  தரிசனம் முடிந்து திரும்பவும் மேல் திருப்பதி நோக்கி பயணம்.  மணி சுமார் 10:30 இருக்கும்.  திருப்பதி மலை ஏற ஆரம்பித்தாகி விட்டது.  சிறிது தூரம்  சென்றபின் கொண்டை ஊசி திருப்பங்கள் தொடங்கியது.  ஒவ்வோரு கொண்டை  ஊசித் திருப்பமாக ஜாக்கிரதையாகத் திரும்பி (கிட்டத்தட்ட நாற்பது கொண்டை ஊசித் திருப்பங்கள்) ஒருவழியா மேல் திருப்பதி சேர்ந்தோம். வழி நெடுகே குரங்குகள் எங்களை வேடிக்கை பார்த்தன.

முன்னூறு ரூபாய் டிக்கட் எடுத்து வரிசையில் நிற்கும்போது மணி 12:30.  இனி எப்பொழுது தரிசனம் என்பது அந்த ஏழுமலையானுக்குத் தான் தெரியும்.  கொஞ்ச நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தோம். .  கோவிலுக்கு வந்தால் எப்பொழுதும் கொஞ்சம் அமைதியாக இருக்க முயற்சிப்பது உண்டு.  நாட்டை நல்வழிப் படுத்தும் கருத்துக்கள், மக்களை திருத்தும் வழிகள், குடும்பப் பிரச்சினைகள்., அடுத்த வீட்டு விவகாரம், அபாரட்மென்ட் ஆலோசனைகள், அரசியல், வழியில் சாப்பிட்ட காப்பி - டிபன் தரம், குறுக்கே வந்த லாரிக்காரன், அராஜகமாக முந்திச் சென்ற அரசு பேருந்து, சென்ற முறை வந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் / சௌகர்யம் / வருத்தம், இன்னும் எத்தனை மணி நிற்க வேண்டுமோ என்ற கவலை ; இவை எல்லாம் விடுத்து மனதை அமைதியாகத் திருப்ப முயன்றால்(?) கோவிலுக்கு வந்ததற்கு கொஞ்சம் பலனாவது கிட்டும். 

இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் கர்பக் கிரகத்தில் பெருமாள் அமைதியாக நம் வருகைக்காக கால் கடுக்கக் காத்திருந்தார். பாவம் அவருக்கு  ஓய்வே இல்லை.  ஓய்வில்லாமல் 'இயங்கிக் கொண்டே இருப்பதால் ' தான் இறைவனோ. ..?

நான் கொஞ்சம் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தேன்.  எத்தனை விதமான மனிதர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து; அந்த ஒரு கண தரிசனத்திற்காக....?  வரிசை சில சமயம் மெல்ல நகர்ந்தது, சில சமயம் ஓட்டமும் நடையுமாக,  பல நேரம் நகராமல் ஒரே இடத்தில்.  பல மணி நேரம்  கழித்து கோவிலின் பிராதன இடத்தில் சங்கமித்தோம்.  இது வரிசைகள் பல இடங்களில் இருந்து வந்து திரண்டு ஒருமிக்கும் இடம். 

இங்கு வரிசைகள் இருக்காது.  முண்டி அடித்தோரே முன்னுரிமை பெறுவர்.  பக்திமானைவிட பலமானவன் முன்னே செல்வர்.  தள்ளு முள்ளுவில் முன்னோக்கிச் செலுத்தப் படுவோமே யன்றி அப்படி இப்படி திரும்ப முடியாது. சன்னதி முன் செல்லும் வரை அதிகமாகக் கேட்கும் வார்த்தை "தள்ளாதப்பா" , இதுவே பல மொழிகளில். சன்னதிக்கு முன் கேட்கும் ஒரே வார்த்தை "கோவிந்தா..,! கோவிந்தா....!" எல்லாம் அவன் காலடி சமர்பணம்.   நான் என் மனைவியைத் திரும்பிப் பார்த்தேன்.   அவள் கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணு முணத்துக் கொண்டிருந்தாள்.  நான் சன்னதி நோக்கித் திரும்புவதற்குள் வெளிப் பக்கம் திருப்பிச் செலுத்தப் பட்டேன்.  கண்ணை மூடிக் கொண்டே மனைவியும் வெளியே வந்தாள்.  அந்த ஒரு கண தரிசனம் 'நான் மனைவியைப் பார்க்க அவள் கண் மூடியிருக்க' இனிதே முடிந்தது. 

வெளியே வந்து லட்டு பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்ப கீழே இறங்க முற்பட்டோம்.  மணி மாலை 6:30.  இனி வழியில் நிறுத்தி சிற்றுண்டி உண்டு சென்றால் (இன்று மதிய உணவுக்கு விடுப்பு). இரவு 10:30 வீட்டுக்குச் சென்று  விடலாம். மலையிலிருந்து இறங்கும் போது வேறு பாதை வழியாக வரவேண்டும். அதில் கூடுதல் கொண்டை வளைவு திருப்பங்கள் உண்டு (சுமார் ஐம்பது).     எல்லாம் நல்ல படியாக எந்த எதிர்பாராத திருப்பங்களும் இல்லாமல் வீடு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் நண்பனிடம் நான் 'திருப்பதி சென்று திரும்பிய'  கதையை எழுதிக் கொண்டு காண்பித்தேன்.  படித்த நண்பன் சலிப்புடன் "என்னடா இது.....  நல்ல திருப்ங்களுடன் கதை எழுது என்றால் கோவிலுக்குப போன யாத்திரை எல்லாம் யார் கேட்டார்கள்...?

எனக்கு சட்டென்று கோபம் வந்தது. இவன் சொன்னானே என்று எவ்வளவு கஷ்ட்டப்பட்டு எழுதினேன்

"முதல்ல நல்லா திரும்பப் படி... ஒவ்வோரு வரியிலும் திரும்பத் திரும்ப என்று எவ்வளவு 'திருப்பம்' வந்திருக்கும் பார். இதைத் தவிர சுமார் தொண்ணூறு கொண்டை வளைவுத் திருப்பங்கள்  வேறு...."

நண்பன் கையை ஓங்க நான் திரும்பிப்  பார்க்காமல் ஓடி வந்தேன்.

"என்னங்க நான் சரியாத்தானே பேசறேன்...?"

---------- முரளி.

பி.கு: 55-க்குமேல் 'திரும்ப/திரும்பி/திருப்பம், மேலும் 90 கொண்டை வளைவு திருப்பங்கள் நிறைந்த கதை!

எழுதியவர் : முரளி (20-Jan-15, 5:07 pm)
பார்வை : 319

மேலே