ஏதிங்கு மரணம்... மும்தாஜ்??

( இந்த கவிதைக்கு ஒரு சிறு முன்வரலாறு தேவைப்படுவதால் இந்த குறிப்பு.......ஹாஜகான் ,மும்தாஜ் காதல்.... காதலின் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட ஒன்று. மும்தாஜின் மறைவிற்குபிறகு 10 ஆண்டுகள் தாஜ்மகாலின் எதிரில் கட்டப்பட்ட ஒரு மாளிகையில் அதை பார்த்தவாறே , இறக்கும்வரை சிறை வைக்கப்பட்டார் ஒரு ஆயுள் கைதியைப்போல.... அவருடைய கொடூரமான மகனான ஓளரங்கசீப்பால் ... அந்தபொழுதில் அவரின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்ல விழைகிற ஒரு முயற்சி... இந்த கவிதை.... )


மும்தாஜ்
வசந்தங்களின் பேரரசி
நடமாடிய தாஜ்மாகாலே…..
பாரடி...
உன் பளிங்கு பற்களைபோலவே
பளீரிடும்
பளிங்கு கற்களால்
கட்டப்பட்ட
நடமாடாத ஒரு தாஜ்மகாலை..

ஆலம்கீர்..
இந்த காதலிக்கு
ஞாபகமாய்
என்ன தரப்போகிறீர்கள்...?

காதலின் சிம்மாசனத்தில்
நீயும், நானும்மட்டுமே
தனித்திருந்த
ஒரு மகோன்னத தருணத்தில்
நீ கேட்டது ஞாபகம் வருகிறது.....

தன்னையேதருகிற
காதலனை தாண்டியும்
நீள்கிறது என் ஆசை..
அரைநொடியில்
நீ எழுப்பிய வினாவிற்கான
பதிலை பார்..
இன்னும்
ஆயிரம்யுகங்களுக்கான
காதலின் நினைவுச்சின்னத்தை...

ஏன் யமுனையின் கரையினில்
தாஜ்மகால்....?
நீ இருக்கும்பொழுது
கேட்டிருக்கக்கூடும்..

உன்னோடு நான்
ஸுகித்திருந்த பொழுதுகளை
காட்டிலும்..
உன்னை அவள்
ஸுகப்படுத்திய பொழுதுகளே
அதிகம்
செவிலித்தாய்போல்..
அவளின் அலைகரங்களின்
தாலாட்டில்தானே
எப்போதும் நீ உறங்கியது..
இனிமேலும்தான்..


பத்தாண்டுகள் ஆயிற்றாம்..
பேகம்
நீ என்னைவிட்டு போய்..
யார்சொன்னது.... ?

மெழுகுவர்த்தியின்
வெம்மையான
துளிகளாய்
வழிகிற என் கண்ணீரில்...
உறைந்துகிடக்கிற
உன் நினைவுகளை
யார் அறிவது... ?

நீ விட்டுவிட்டு போன
மூச்சுக்காற்றின்
மிச்சம்
இந்த பூமியில்
இருக்கும்
அந்தக்காலம்வரை...
என் சுவாசமும் இருக்கும்..
தீர்ந்துபோவதற்கு..
ஞாபகங்கள் என்ன
அங்காடிப்பொருளா...
வலம்புரிச்சங்கின்
ஒலியல்லவா....??
நீ
இருக்கும்பொழுது
உன்னைத்தவிரவும்...
மறந்திருப்பதற்கு
நிறைய இருந்தது
என்னைச்சுற்றி....

இல்லாதபொழுதோ..
உன்னைத்தவிர
ஒன்றுமேயில்லை...
அந்த ஞாபகங்களோடும்தான்
கொஞ்சம்வாழ்கிறேனே...!?

என்
கண்கள்
ஒளியற்றுப்போகின்றன...
என்
காதுகள்
கேட்பதை மறக்கக்கூடும்...
என்
வார்த்தைகளும்
மெளனமாகக்கூடும்....
ஆனாலும்..
ஆனாலும்..
நாம்
இருக்கும்பொழுது
இருந்த காதல்..
இறப்பிற்குப்பிறகும்
தொடரமிங்கு
நிச்சயமாகவே...

கண்களுக்கு தெரியாமல்
இறைவன் இருப்பதில்லையா...
இனியென்றும்
காதலர்களுக்கு நாம்தானே
இறைவன்....
ஏதிங்கு மரணம் இனி நமக்கு..???

எழுதியவர் : muruganandan (17-Apr-11, 10:12 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 543

மேலே