மன்னிப்பு கேட்கிறேன் - சந்தோஷ்
இனி மன்னிப்பு கேட்டு
பழகிக்கொள்கிறேன் பாரதியே.!
இனி மன்னிப்பு கேட்டு
மரத்துப்போகிறேன் புரட்சிக்கவியே..!
இனி மன்னிப்பு கேட்டு
சொரணையற்று வாழ்கிறேன் தமிழ் அன்னையே...!
என் பெயருக்கு அடையாளம்
தரும் ஒருச்சொல் தேடினேன்.
படித்து, புரிந்து, முயன்று
ஒட்ட வைத்துக்கொண்டிக்கிறேன்.
அது " எழுத்தாளன்"
இந்த சொல்லில்
ஒரு கர்வமுண்டு
ஒர் ஆணவமுண்டு
ஒரு வீரமுண்டு
என்றெல்லாம் நினைத்திருந்தேன்
என் தமிழ் மாதாவே..!
அப்படியெல்லாம் இல்லையாம்
இப்போது.
ஆகவே ,மன்னிப்பு கேட்க
பழகிக்கொள்கிறேன்
அதிகார வர்க்கத்திடம்
மண்டியிட்டு .. தலைக்குனிந்து
மன்னிப்பு கேட்டு பழகிகொள்கிறேன்.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
அய்யோ பாரதியே....
இதெல்லாம் யாருக்கு பாடினாயோ?
சத்தியமாக சொல்லு
என் பாட்டனே..!
அக்னி கவிஞனே....!
நீ பாடிய பாடல்
இந்த காலத்து எழுத்தாளர்களுக்கு
இல்லைதானே.. ?
பாரதியே... பாவேந்தரே...!
நாங்கள்
தாளில் எழுதுவோம் காத்திரமாக
மிரட்டினால் விடுவோம் மூத்திரமாக...!
பெருமாளும் முருகனும்
அட்டுழிய அதிகாரமையத்திற்கு
அடிபணிய கற்றுக்கொடுத்துவிட்டார்கள்.
இனி இதுதான் விதி...
இனியொரு
புது விதி படைக்க
இல்லை நாதி ...!
'எழுத்தாளன்
எழுதி கிழித்து
இவ்வுலகை மாற்றுவான்
சமூகத்தை திருத்துவான்.
சாட்டையை சுழற்றுவான்.
அஞ்சா நெஞ்சில்
புயலாய் புலியாய் சீறுவான்... '
இனி இவ்வரிகள் நகைச்சுவையாகும் .
வீரமாம் ... கம்பீரமாம்
எழுத்தால் எல்லாம் மாறுமாம் ...!
அடச்சே.................!!
மண்ணாங்கட்டி.... வெங்காயம்...!
---------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்