இப்படிக்கு - தோழி லிவிங் ஸ்மைல் வித்யா

தணிக்கை துறை அதிகாரி வி.பக்கிரிசாமி அவர்களுக்கு,

இன்று தினதந்தி தினசரியில் ‘’திருநங்கை பற்றிய காட்சிகளை அனுமதித்தது ஏன்?’’ என்ற தலைப்பில் வெளியான தங்களது நேர்காணலை கண்டேன்.. அதில் ‘’ஐ’’ படத்தால் திருநங்கைகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு தங்களின் பதிலைக்கண்டேன்… ’’ஐ’’திரைப்படத்தில் ஒரு திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றார். அவரை கதநாயகனும் அவருடைய நண்பனும் பாட்டுப்பாடி கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர் பார்ப்பது போன்று தான் படத்தின் கதாநாயகனும் திரைப்படத்தில் பார்க்கிறார். இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறையல்ல. படத்தின் கதை அமைப்பிலேயே அப்படி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம். இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்தநிலைக்கு போக வேண்டும்.

// அவரை கதநாயகனும் அவருடைய நண்பனும் பாடடுப்பாடி கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர் பார்ப்பது போன்று தான் படத்தின் கதாநாயகனும் திரைப்படத்தில் பார்க்கிறார். //

திரையில் வரும் ஆபாசங்களை முன்னுதாரணமாக கொண்டு சமுதாயத்தில் இவ்வாறு நடப்பது உண்மைதான். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கூட, ‘’பருத்திவீரன்’’ படம் வெளியான போது, பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தான் குடித்துக்கொண்டிருந்த வாட்டர் பாக்கெட்டின் எச்சத்தை பொதுஇடத்தில் சற்றும் எதிர்பாராத தருணத்தில் எனது முகத்தில் எரிந்து இதே ‘’ஊரோரம் புளியமரம்’’ பாடலை பாடி கிண்டல் செய்தான்.. அதை அந்த தெருவே வேடிக்கை பார்த்து சிரித்த்து… எந்த குற்றமும் செய்யாத நான் ஒரு குற்றவாளி போல நடுத்தெரு கூனிக்குறுகி நிர்வாணமாய் நிற்பதைப்போல உணர்ந்தேன்.. அந்த பத்துவயது சிறுவனுக்கு இந்த அநாகரீகத்தை கற்றுக்கொடுத்தது யார்? நீங்கள் கூறும் உண்மைகளுக்கு காரணம் யார்? காலகாலமாக திரைப்படங்கள் விதைத்த விசமும் அதனை கள்ளமௌனத்துடன் உங்கள் தணிக்கை துறை அனுமதித்ததும் தானே…

இவ்வளவு கேவலமாக தன்னை நடத்தும் நாயகனிடம் இந்தியாவின் டாப் மாடல் ஸ்டைலிஸ்ட் ஆனபோதும் சுயமரியாதையே இல்லாமல் ஒரு திருநங்கை காதலோ/காமமோ கொள்வாள் என உங்களுக்கும், ஷங்கர் போன்ற இயக்குநர்களுக்கும் சொல்லித்தந்தது யார்? யார் கட்டமைத்த எதார்த்தம் இது?! திருநங்கைகள் குறித்த உங்கள் எதார்த்தமே தமிழ்சினிமாவும் நீங்களும் கட்டமைத்ததுதேனே…?

ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வது போல இது எதார்த்தம் தானே என்று ஏற்றுக்கொண்டால் கூட இத்தகைய அக்கிரமங்கள் இப்படியே தொடரத்தான் வேண்டுமா? அப்படியானால், எதற்காக புகைப்பதை நிறுத்தச்சொல்லி ஒரு மொக்கை குறும்படத்தை எல்லா படத்திற்கும் முன்பாக திரையிடவேண்டும்? எதார்தத்தில் இந்நந்நாட்டில் யாரும் புகைப்பதே இல்லை, குடிப்பதே இல்லை என்று கூறப்போகிறீர்களா? கூடுதலாக, இக்காட்சிகள் வருகையில் டிஸ்கி ஏன் போடவேண்டும்..?
விலங்குகள் துன்புறுத்தப்படவில்லையென டிஸ்கி வருகிறதே அது ஏன்…? ஒருவேளை இப்படியோரு கேள்வியை நிருபர் வைத்திருந்தால் ’’ நாயோடும், காக்கைகளோடும், ஒப்பிடுமளவிற்கு திருநங்கைகள் அவ்வளவு ஒர்த் இல்லை என்பதுதானே எதார்த்தம்…’’ என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை….

// இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறையல்ல. /// ஒரு காட்சிதான் இப்படி வருகிறதா…?! அப்படியெனில் ஹாட்டாக்கில் வரும் சாசேஸை மட்டும் எடுத்து ஒஜாஸ் சாப்பிடுவது போன்ற காட்சி, மருத்துவமனையில் ‘’9’’ என்ற எண்ணை க்ளோசப்பில் காண்பித்து பின் ஒஜாஸை காண்பித்தது…, ‘’உன் கையும், வாயும் சும்மாவே இருக்காதா?’’ என்ற குரல் கேட்டது.. இவையெல்லாம் 50களில் வெளிவந்த வேறு ஏதோ மராத்தி படத்தில் வந்த காட்சிகளா? அல்லது இக்காட்சிகளின் போது தங்கள் காமாலை கண்களுக்கு மருத்துவம் பார்க்க சென்றிருந்தீர்களா..

ஒருவேளை நீங்கள் பார்த்திருந்து இவையெதும் தப்பாக இல்லையே என்று தோன்றினால்.. அரங்கில் பொதுமக்களுடம் சென்று பாருங்கள்.. இந்தக்காட்சிகளுக்கெல்லாம் அரங்கமதிர சிரிக்கும் ரசிக பட்டாளங்களிடம் ஏன் ஒன்றுமில்லாத காட்சிகளில் இப்படி சிரித்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் விலக்குவார்கள்…

// இவைபடத்தின் கதை அமைப்பிலேயே அப்படி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம். //
இத்தகைய ஆபாச வக்கிர நகைச்சுவை படத்தின் கதையமைப்பிலே தேவைப்பட்டதா அல்லது வணிக வெற்றி எனும் தேவைக்கு தேவைப்பட்டாதா என்பது இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு தெரியும்.

// இவைபடத்தின் கதை அமைப்பிலேயே அப்படி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம். இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்தநிலைக்கு போக வேண்டும். // பெருமதிப்பிற்குரிய தணிக்கை துறை அதிகாரி திரு.வி.பக்கிரிசாமி அவர்களே, நீங்கள் தணிக்கைதுறை அதிகாரி என்பதனாலேயே, நாங்கள் மனு கொடுக்க சாதாரண திருநங்கைகள்தானே என்ற நினைப்பில் இத்தகைய ஆபாசமான அறிவுரையைத் தராதீர்கள். எதனை, எப்படி சாதகமாக எடுத்து செல்ல வேண்டுமென எங்களுக்கு தெரியும்.

// சமுதாயத்தில் புரட்சிகரமான கருத்துக்களும் தேவைப்படுவதால், புதிய பரிமாணத்துடன் உருவாக்கப்படும் திரைப்படங்களையும், படைப்பாளிகளையும் நாம் தடுத்து விடக்கூடாது? // உங்களின் பொன்மொழியை கேட்டு சிரிப்பதா அழுவதா என எனக்கு தெரியவில்லை. ஆனால், படிக்கும் மற்ற ‘’நார்மல்’’ மனிதர்கள் சிரித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
காவல்துறையினரின் கண்காணிப்பில் ஊடங்கள் நண்பர்களை தவிர்த்து தங்களை தரிசிக்க அனுமதிக்கப்பட்ட ஐவரில் நானும், தோழி. ஏஞ்சல் கிளாடியும் இருந்தோம். அப்போது அவ்வறையில் நாங்கள் இருவரும் வைத்த கோரிக்கைகளை நீங்கள் தெளிவாக மறந்திருப்பது தெரிகிறது. அவற்றையும் இங்கே தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

1. படத்தை தடை செய்வது எங்கள் கோரிக்கையல்ல… ஆனால், கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் மேற்சொன்ன ஆபாச காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும். மேலும், ‘’மது, புகை கூடாது’’ என டிஸ்கி போடுவது போல ’’திருநங்கைகளை அவமானபடுத்துதல் இழி செயல்’’ எனவும் ஒரு டிஸ்கி போட வேண்டும்.
2. தணிக்கை துறையில் ஒரு திருநங்கை வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அனைவரும் முன்வைத்தபோது, அது மத்திய அரசின் முடிவு என்றீர்கள்… அதற்கு குறைந்தபட்சம் தங்களின் அதிகாரத்தின் கீழ் வரும் படங்களில் தணிக்கையின் போது ‘’பொட்டை’’ ’’கோசா’’ ‘’அஜக்’’ ‘’ஒம்போது’’ போன்ற சொற்களை நீக்க வேண்டும் என நாங்கள் இருவரும் சொன்னோம். குறிப்பாக, ‘’பேராண்மை’’ என்னும் படத்தில் சாதி இழிவு குறித்து வரும் ஒரு காட்சியில். கருணையேயின்றி கத்திரி வைத்தீர்களே… சாதி பெயரை பீப்.. போட்டால் பார்வையாளர்கள் அந்த உரையாடலோடு அது என்ன சொல்கிறது என்று புரிந்துகொள்வார்கள் எனவே ம்யூட் செய்யதவற்றை மேற்கோள் காட்டி அவ்வாறே இது போன்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் செற்களையும் ம்யூட் செய்ய வேண்டுமென்றேன் நினைவு வருகிறதா?

பி.கு.
1. ‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

2. ’’ஐ’’படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், செருப்படி காட்சிகள் எதற்கும் என் ஆதரவு கிடையாது… தனிப்பட்ட முறையில் இது போன்ற செயல்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது..

3. தங்களின் மேலான ஆதரவு தந்து முந்தைய பதிவைப்போல மேலும் அதிக அளவில் இதனையும் பகிர வேண்டுகிறேன்.
நன்றி…!!!!
- தோழி லிவிங் ஸ்மைல் வித்யா .முகநூலில்.

எழுதியவர் : லிவிங் ஸ்மைல் வித்யா (22-Jan-15, 10:39 am)
பார்வை : 314

மேலே