சமகால மனிதநேயம்
பயங்கரவாத அமைப்புகள்
குழிதோண்டிப் புதைக்கும்
சவம்.
சர்வாதிகாரத்தின் சாட்டைக்கு
அடிபணிந்த ஜனநாயகம்.
அரசியல்வாதிகளின்
நாற்காலிகளுக்கு அடியில்
நிம்மதியாய் உறங்கும்
செல்லப் பிராணி.
முதலாளிமார்களின்
பணப்பெட்டிகளுக்கு
காவலிருக்கும்
விசுவாசமுள்ள நாய்.
கொள்ளைக்காரர்களின்
கூட்டுக் குடும்பச்
சமையலறைக்குள்
அடுப்பூதும் ஊதுகுழல்.
காமுகர்களின்
கண்கள் அரங்கத்திற்கு
காட்சி தொடங்க
கறுப்புத் திரைபோடும்
வெறுப்புச் சேவகன்.
சுயலாபங்களுக்கான
பக்கச்சார்புகளின் மைதானத்தில்
விளையாடப்படும் கால்பந்து.
சந்தர்ப்பவாத சூரியன்களை
சாத்தான்கள் மறைக்க
ஏற்படும் சாத்தியமில்லாக்
கிரகணம் .
முதியோர் இல்லங்களில்
பெற்றோராய் இருந்ததற்கான
அடையாளங்களை உருவாக்கும்
காலத்தின் களங்கம்.
கருணைக் கொலைகளில்
சிரிக்கும் கடவுளின் யதார்த்தம்