பொங்கல் கவிதைப் போட்டி - நடுவர் தீர்ப்பு - 01

வணக்கம் தோழர்களே...
பொங்கல் கவிதைப் போட்டிக்கான முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. போட்டி முடிவுகளுக்கு முதல் நடுவர்களின் அபிப்ராயங்களை, அனுபவங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில், இந்த போட்டியினை நெறியாள்கை செய்த நடுவர்களின் கருத்துகளை "நடுவர் தீர்ப்பு" என்ற தலைப்பின் கீழ் பதிவிடுகின்றோம் இங்கே. ஒவ்வொரு நடுவரினதும் எண்ணங்களை இங்கே தொகுத்து தருகின்றோம். அதன் முதற்கட்டமாக இந்த பொங்கல் கவிதைப் போட்டியின் தாபகரும், நடுவருமாகிய திரு. நிலாசூரியன் அவர்களின் எண்ணப் பகிரல் கீழே...!

==============நடுவர் தீர்ப்பு - திரு.நிலாசூரியன் !

எந்த ஒரு எழுத்தின் கருவும் பரந்த எண்ணங்களையும் எல்லைகளையும் தொட்டு, மானுட மத்தியில் ஒரு விவாதத்தையோ அல்லது ஒரு விசித்திரத்தையோ உருவாக்கி விடுமேயானால், அந்த எழுத்தே வாசிப்பவனுக்கும் எழுதுகின்றவனுக்குமான வளர்ச்சிப் பாதையை விரிவுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த மூன்று வருடங்களாக எனது முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பொங்கல்விழா கவிதை போட்டி, இந்த ஆண்டு தம்பி கலை அவர்களின் தலைமையில், மிக நல்ல முறையில் நடந்து முடிந்து இருப்பது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகுந்த பணிச்சுமைக்கு மத்தியில் நான் சிக்கிகொண்ட காரணத்தினால் தம்பி கலைஇடம் இந்த போட்டியை நடத்தும்படி கேட்டுகொண்டேன். அவரும் எனது நிலைமையை புரிந்துகொண்டு இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார், தம்பி கலை அவர்களுக்கும் எனது நன்றியினை இந்த நேரத்தில் உரிதாக்குகிறேன்.

இதே போல் மூன்றுமுறை நான் போட்டி நடத்தி இருந்தேன், அப்பொழுது எனக்கு இருந்த மன உளைச்சல் மற்றும் சோர்வு இந்தமுறை தம்பி கலைக்கு இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் எனது முழுகவனத்தையும் எனது பணியில் செலுத்தி ரொம்ப நிம்மதியாக இருந்தேன் என்றால், தம்பி கலை அனைத்து சுமையையும் ஏற்று இருந்தார் என்பதுதான் அதற்கு காரணம்.

சில கவிதைகளை அனுப்பி, சிறப்பானவைகளை தேர்வு செய்து தரும்படி தம்பி கலை கூறியவுடன். என்னாட போட்டி நடக்கிறது நாம் ஒரு உதவியுமே செய்யாமல் இருக்கிறோமே என்ற எனது மனக்குறை தீர்ந்துபோனது.

கவிதைகளை வாசித்தேன் சில கவிதைகளைத்தவிர மற்றவைகள் அவ்வளவு சிறப்பாக இருப்பாதாக தோன்றவில்லை, ஆனாலும் அதிலும் சிறப்பானவைகளை தேர்வு செய்யவேண்டியது ஒரு நடுவராக எனது கடமையாகும். இலக்கண இலக்கியங்கள் அவ்வளவாக அறியாத உங்களின் சக படைபாளிகளில் ஒருவனான நான், இந்த தேர்வு முறையில் சிறிது சிரமம் மேற்கொண்டே எனது பணியை செய்தேன், தீர்ப்பு சரியாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் திருப்தியாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக.

பகல் நேரங்களில் பணிச்சுமை என்பதால் ராத்திரியில் கண்விழித்து தேர்வினை செய்தேன். நிறைய படைப்பாளிகள் தலைப்பினை சரியாக புரிந்துகொள்ளாமலே படைப்பை எழுதி இருந்தார்கள். ஒருவேளை புரியாத அளவிற்கு படைப்பின் தலைப்பு அறிவிக்கப்பட்டு இருக்குமோ என்றுகூட நினைக்க தோன்றுகிறது.

சாதி ஒழி, மதம் அழி, சாதி. - சாதியை ஒழித்து மதத்தை அழித்து, மனிதனாக வாழ்ந்து சாதனை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த தலைப்பின் மூலக்கரு. இதை பலர் புரிந்து கொள்ளாமல் எழுதி இருக்கிறார்கள். சிலர் இதை புரிந்துகொண்டே எழுதி இருக்கிறார்கள். சிலர் சாதியைமட்டும் சாடி சாடி எழுதிவிட்டு மதம் வேண்டுமென்று எழுதி இருக்கிறார்கள், இது தலைப்பை புரிந்துகொண்டே முரண்பட்ட கருத்தை எழுதி இருப்பதாகவே தோன்றுகிறது. போட்டிகளில் பொருத்தவரை கொடுக்கின்ற தலைப்பிற்கு பொருத்தமாக எழுத வேண்டியது அடிப்படை அவசியமாகும்.

சிலர் அழகு அழகா சொல்லை இலக்கணத்தில் அமைத்து எழுதி இருந்தார்கள் ஆனால் கருத்தாழம் மிக மிக குறைவாகவே இருந்தன. வெறும் அழகான சொல்லும், இலக்கணமும், கவிதையை கவிதையாக்கிவிடாது, முக்கியமாக ஆழமான பொருள் பொதிந்து இருக்க வேண்டும், கொடுக்கப்பட்டு இருக்கும் தலைப்பிற்கு மைய்யக்கருவாக அந்த பொருள் இருக்க வேண்டும்.

சிலர் ஆரம்பத்தில் இருந்து இடைப்பட்ட பத்திகள் வரையிலும் அருமையாக எழுதி இருந்தார்கள், ஆனால் முடிவு பத்தியில் முடிக்கும் விதம் சிறப்பாக கையாளப்படாமல் சாதாரணமாகவே இருந்தன, மேலிருந்து கீழ்வரை ஒரேமாதிரியாகவே அழுகுபடுத்தி மட்டும் வைத்துவிட்டால் கவிதை நிறைவாகிவிட்டதாக கருதக்கூடாது. அதில் சந்தம், பொருள் இரண்டும் இருக்கா என்றும் பார்க்க வேண்டும். ஒரு படைப்பின் முடிவு பத்தியில் மனதை தொடும் ஆழமான கருத்தைக் கூறி முடிப்பது என்பது கவிதையில் ஒரு முக்கியமான நுணுக்கமுறை என்பது மட்டுமல்ல, அப்படி முகிக்கின்ற கவிதைகள் மனதில் பதிந்துவிடும் அம்சம் கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

சிலப்படைப்புகள் படிக்கும்பொழுதே சில இடங்களில் துண்டு விழுந்தும், சந்தம் திரிந்தும், ஏற்ற இறக்கங்கள் பொருத்தமின்றியும் காணப்பட்டன. நெடில் குறில் தேவையான இடங்களில் இட்டு, எதுகை மோனைகளை சரியாக அமைத்து, வாசித்து வாசித்து பார்த்து, சந்தம் இடிக்கும் இடங்களில் வேறு வேறு பொருத்தமான சொல்லை பொருத்தி ஒருமுறைக்கு பலமுறை வாசித்துப் பார்த்து மனது திருப்தி ஆனபிறகே நீங்கள் பதிவிட வேண்டும், அதற்காகத்தான் 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருந்தோம், ஆனாலும் சிலரின் எழுத்திலேயேகூட அவசரம் காணப்பட்டு இருந்தது.

ஒரு நடுவராக படைப்பில் நான்கண்ட விடயங்களை இங்கே பகிர்ந்துகொண்டேன், உண்மை என்னவோ அதை அப்படியே கூறிவிட்டேன், ஆனால் சத்தியமாக படைப்பாளிகளை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை இங்கே நான் கூறவில்லை. இனி வரும் காலங்களில் படைப்பாளிகள் மேலும் வளர்ச்சியினை அடைய வேண்டும் என்பதற்காகவே இதை நான் கூறுகிறேன். தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் படைப்பாளிகளுக்கு அவசியம் என்பதை இந்த தளத்தின் சகபடைப்பாளனாக மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு தோழனாகவே இதை நான் கூறுகிறேன்.

வெற்றிபெற்ற உங்கள் சகப்படைப்பாளிகளை மனதார வாழ்த்துங்கள். தொடர்ந்து முயற்சியையும் பயிற்சியையும் மேற் கொள்ளுங்கள், இன்னும் பல மேடைகள் உங்களுக்காகவே காத்துக்கிடக்கின்றன.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வணக்கத்துடனும், நன்றிகளுடனும்
நிலாசூரியன்
தாபகர் -பொங்கல் கவிதைப் போட்டி

=============================தொடரும் !

எழுதியவர் : விழாக்குழு (25-Jan-15, 3:18 pm)
பார்வை : 250

மேலே