தெருவின் குழந்தை

நினைவுகளுடனும் கனவுகளுடனும்
நீ உறங்கும் இடம் தெருவாகிப் போனது..

ஈக்கள் மொய்க்கும் உன் ரணங்களெல்லாம்
கட்டபொம்மனாய் நீ மாறியதாலோ
கள்ளம் மறந்த பால்யதாலோ அல்ல..

உன் கோதாத தலைமுடியும்
கையில் விழுந்திருக்கும் ஒற்றை நாணயமும்
உன் மேனி தழுவிய செல்வந்தர் வீட்டு சொக்காயும்
காலணி கண்டிராத அழுக்கு பாதங்களும்
உன்னை தெருவின் குழந்தையாய்
தார்மீக தத்து கொள்கின்றன

கல்வி பிச்சையிடாமல், காசு பிச்சையிட்டு
புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்
சாத்வீக வாயிற்படி நீதான்
உனக்கு உறக்கம் ஏன்? எழுவாய்
உன் தாயை அழைக்கும் அழுகுரலில்தான்
நீ பசியாறும் பாக்கியம் பெறுவாய்

தெருவில்,
பிச்சையிடும் பாக்கியவான்கள்
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்..

எழுதியவர் : அகிலா (25-Jan-15, 8:32 pm)
சேர்த்தது : Ahila
பார்வை : 388

மேலே