மௌனக் குரல்
அழகு யுவதி ஒருத்தி
ஆயிரம் புன்னகை
அள்ளி வீசி,
பாதையைக் கடக்கிறாள்.
பாதசாரி இளைஞன் ஒருவன்
பாதையைக் கடக்கும் வேளையில்
கண்ணருகில் நிற்கிறாள்.
காதலாய்ப் பார்க்கிறான்.
திரைக்குள்ளிருக்கும்
கன்னியவளைக் கண்டுகளிக்க
கள்ளன் அவனுக்குக்
கொள்ளை ஆசை.
அருகே சென்று
அன்பாய்ப் பேசுகிறான்:
"கண்ணே!
திரையை விலக்கு.
கண்டுகளிக்க
காதலன் வந்துள்ளேன்."
அவனது பரதேசிக் கோலத்தை
மேலும் கீழுமாய்
திரைக்குள்ளிருந்து
நோட்டம் விடுகிறாள்.
அலட்சியம் செய்துவிட்டுப்
போய்விடுகிறாள்.
பேசாத அவளது வார்த்தைகள்
அவனை என்னவோ செய்கிறது.
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
காதல் ஜுரத்தில்
இரண்டாம் நாள் சந்திப்பு.
மீண்டும் அதே
நெருஞ்சிமுள் பார்வை.
இலட்சியம் செய்யாமல்
போய்விடுகிறாள்.
நெருப்பில் தவிக்கும்
அவன் மனது.
அவளைப் பார்த்துவிடத் துடிக்கும்
அவன் கண்கள்
கண்ணீர் ததும்புகிறது.
காலம் பதில் சொல்லுமா?
அவள் கண்கள் காதல் பேசுமா?.
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
மூன்றாம் நாள்-
மூச்சிரைக்க முன்வந்து,
"சொல்லடி கண்ணே!
காதல் பேசும் உன்
கண்கள் காண உன்
காதலன் நான்
ஓடோடி வந்துள்ளேன்.
பதிலென்ன?.
மௌனம் தான்
இப்பவும் பதிலென்றால்
என் சடலம் தான்
இனி காதல் பேசும்."
இப்போதும் அவள் பேசவில்லை.
இலட்சியம் செய்யவில்லை.
ஏளனப் பார்வையில்
எச்சரித்துப் போகிறாள்.
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
ஓலம் செய்தது மனது.
"காதலியவளைக் காணாத
கண்கள் இனி எதற்கு?.
அவளிடம் பேசாத
நாவு இனி எதற்கு?.
அவளுடன் இல்லாத
உடலெதற்கு?.
அவளில் கலக்காத
இவ்வுயிர் எதற்கு?.
காதல் யுவதியவளை
கணப் பொழுதும்
மறக்கமுடியவில்லை.
யுகப் பொழுதுகள் வாழ
கனவுகளெல்லாம் கண்டேனே!.
காதலியவள்
கண்டுகொள்ளவில்லை.
ஏன்?
அவளிடம் காதல் இல்லை.
காதலன் என்னிடம் காதல்
நிறையவே உண்டு.
கட்டிய வாக்கை
நிகழ்த்தியே காட்டுவேன்.
சபதம் பூண்டான்.
போடி போ!
காதலன் நான்
போய் வருகிறேன்.
பூச்செண்டுடன் வா
என் கல்லறைக்கு!.
சப்தமில்லாமல் உறங்கிவிட்டான்.
இதயக்கடிகாரம் நின்றேவிட்டது.
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
யுவதிக்கு வேறு
வழி இல்லாமலில்லை.
நான்காம் நாளும்
அதே பாதையில் அவள்-
சாலையைக் கடக்கும் வேளையில்
சபலப்படும் மனது.
"எங்கே அவன்?"
தன்னையும் மீறி
தேடும் கண்கள்.
"கள்வா!
எங்கே போனாய்?.
காணோமே உனை?.
எனைக் காண இன்று நீ
வரமாட்டாயா?
வழிமறிக்கமாட்டாயா?
'திரையை விலக்கடி
காதலன் வந்திருக்கிறேனெ'ன
மன்றாடமாட்டாயா?.
விசாரித்துப் பார்த்தாள்.
"வரவேமாட்டான்" என்ற
செய்திமட்டும் வந்தது.
ஓடோடிப் போகிறாள்
கல்லறைக்கு-
"என்னறையில்
இருக்க வேண்டியவன்
இன்று
கல்லறையில்-".
மனது கொக்கரித்தது.
"கள்வா!
காதல் கள்வா!
இதற்காகத் தானா
என் உயிரைப்
பாகம் பிரித்தாய்?.
இதோ உனக்காக!.
பார்
எனதிந்த முகம்!.
நீ பார்க்க ஆசித்த முகம்!.
என்னிடம் நீ யாசித்த முகம்!.
இதோ உனக்காக!."
கல்லறையிலிருந்து
ஒரு கணீர் மொழி:
"நான் காண
ஆசித்த போது
பெண்ணே!
திரை உன்னிடம்.
கண்ணே!
இப்போது அது
என்னிடம்!."