அவையத்து முந்தியிருப்ப
தேவையற்ற அறுவை சிகிச்சையில் பிள்ளைப் பேறு;
தேனமுத மழலையின் தொடக்கமே "மம்மி"யின் பேரு;
தவழ்ந்து எழுமுன்னரே ஆங்கிலப் பள்ளியில் சேரு !
ஏட்டுச் சுரைக்காய் வியாபாரம் நடக்கும் பாரு !
பிஞ்சு மனதின் கனவுகளை அலட்சியப்படுத்தி
நிறைவேறா உம் ஆசையினை அவருள் திணித்து
மதிப்பெண்கள் மட்டுமென்ற இலக்கைப் பார்த்து
பந்தயக் குதிரைகளாய் களத்தில் இறக்கு !
பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கும் கல்லூரி பாரு !
வளாக நேர்முகத்தில் ஆளெடுப்பு உண்டான்னு கேளு !
தகவல் தொழில்நுட்ப கனவுகள் வளர்த்து
வட்டிக்குக் கடன் வாங்கி பிள்ளையைச் சேரு !
மேல்நாட்டில் பகலென்று இரவுறக்கம் களைந்து
அந்நாட்டுக் கனவேந்தி பாடாய் உழைத்து
கடன் அட்டை கலாச்சாரம் தன்னுள் வளர்த்து
சிட்டாய்ப் பறந்திடுமே உம் பிள்ளை சமர்த்து !
சிலநாட்கள் வந்திருங்கள் என பிள்ளையும் அழைக்க
மேல்நாடு சென்றிடுவீர் மருமகளின் பிரசவம் பார்க்க;
பேரக்குழந்தைகள் "ஸ்கைபில்" வாயாடும் அழகை
சுற்றம் நட்போடு பகிர்திட்டே பொழுதை போக்கு !
வயதாக வயதாக நெருங்கி வரும் தனிமைதான் !
இருவரும் தம்மிடையே பங்கிடுவார் வெறுமைதான் !
தாய்நாடு வரும்போது பெற்றோர்கள் நிலைகண்டு
முதியோர் இல்லத்து முகவரி தேடும் பிள்ளைதான் !