சத்தத்தோடு கொடுத்தேன் ……

செல்ல திட்டுடன் எழுந்து
குளிர்ந்த நீருக்கு இரையாகி
பருத்தி ஆடைக்குள் ஒளிந்துக் கொண்டு
அம்மாவின் கைவண்ணத்தில்
பிறந்தவனுக்கு இட்லி என்று பெயரிட்டு
வயிறு என்ற காலப்பைரவனுக்கு படையலிட்டு
அப்பாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு
புன்முறுவலை அம்மாவிற்கு பரிசாகக் கொடுத்துவிட்டு
மெல்லிய இசையுடன் நிழற்கூடத்திற்குச் சென்றேன்

இரைச்சலுடன் இருக்கைகள் நிரம்பிக்கொண்டு
சாலையில் குடித்துவிட்டு வருபவன் போல்
சிதறியப் பாகங்களை ஒட்டவைத்த பேருந்து வந்தது
பல சிரமங்களுக்கு இடையில் நிற்க இடமும் கிடைத்தது
குளிர்ந்த காற்றுடன் வசந்த கானமழை
பொழிந்துக் கொண்டிருந்தது பேருந்தில்
கைப்பிடிப்பானைப் பிடித்து அவளுக்கு
நான் மட்டும் சொந்தம் என்று
பற்றிக் கொண்டிருந்த அழகு வேளையில்

சட்டென்று நெடுரல் தோன்றியது
அவன் காமப்பசிக்கு இரையாக்க
யாராவது கிடைப்பார்களா என்று
வலைவீசிக் கொண்டிருந்த வலையில்
நான் விழுந்ததாக எண்ணி
தூண்டிலில் புழு ஒன்றைக் கட்டி
மீனைப் போல் என்னை இழுக்க
சத்தமின்றிக் கொச்சையுடன் நெருங்கினான்

மக்கள் நெருக்கடி நிறைந்த
நாட்டில் தான் பிறந்தோம் என்றால்
நெருக்கடி நிறைந்த உலகில் தான்
வாழ் என்கிறதே என் சமுதாயம்
தூண்டிலுக்கு சிக்காத மீனைப் போல்
விலகிச் சென்றாலும்
இச்சையுடன் ஒட்டிக்கொண்டே வரும் பொழுது
எழுச்சிக் கொண்டு எழ
நான் ஒன்றும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணல்ல
தினமும் வாழ்வியலோடு வாழும் தமிழச்சி
போராடி போராடி நான் இறங்கும் இடமும் வந்தது
பிணம் தின்னும் உலகில் சதைத்தேடும் ஆண்களே (ஒரு சிலர் மட்டும்)
சதைக்குள் மனமொன்று உண்டு - அது
என்னவனுக்கு மட்டும் என்ற திமிருடன்
என் தந்தைக்குச் செல்லமாகக் கொடுத்ததை
சத்தத்தோடு கொடுத்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கினேன் ……!

எழுதியவர் : ராஜா (7-Feb-15, 2:33 pm)
பார்வை : 58

மேலே