வானத்தில் ஒருநாள் -ரகு

அகன்ற வானத்தில் ஒருநாள்
சிறகு விரித்திருக்கிறேன் நான்

என்னைக் கடந்து
இறங்கும் மழைத்துளிகள்
மண்ணை முத்தமிட்டதில்
வியந்து வேகமெடுக்கின்றன
என் சிறகுகள்

எதிர்ப்படும்
விமானம் ஒன்றின்
இறக்கைகள் பட்டுவிடாமல்
லாவகமாய்த்
திசை திரும்புகிறது
சிறகு கொண்ட
என் உடல்

பறப்பனவெல்லாம்
மனிதனுக்கெப்படி சிறகு ?
சந்தேகக் கணைகளை
சளைக்காமல் வீசின என்மேல்

இரண்டொரு
பனை மரங்கள்
கடக்கையில்
உயரத்தின்
சிலிர்ப்புகளைத் தொட்டு
சிலாகிக்கிறேன்

விசாலமானப் பார்வைக்குள்
பூமி
எந்தப் பாகுபாடுமின்றி
எல்லா உயிர்களும்

கோவில் சர்ச் மசூதிகள்
வேறுபாடுகளின்றி
சிறுத்துப் போயிருந்தன

ஒரே வெளிச்சத்தில்தான்
உலகம் இயங்கிக்கொண்டிருந்தது

நதிகள் சங்கமிக்கும்
இடங்களிலெல்லாம்
வெற்று மணலாய்
சமாதியாகியிருந்தது
கடல்

தடுப்பணைக்குள்
சிறைபட்டிருந்த ஓரிரு
நதிகளின்னும்
உயுருடன் இருப்பதை
உணர்த்தின
கரையோரத்து
மரங்களிடைப் பறவைகள்

கடப்பதற்கு முன்
கிசுகிசுத்தது காற்று
காடுகளில் சிலவும்
உயிருடன் இருப்பதாய்

எனக்கு முன்
வானில் பறந்த
விவசாயி ஒருவன்
தனித்து உழுதபடித்
புள்ளியாய்த் தெரிந்தான்

தணிந்து பின் மீண்டும்
பறக்கிறேன்
இரைச்சலில்லாத அந்தப் பயணம்
உற்சாகத்தை உணர்வில்
தெளிக்கிறது

வாழும் அவசியத்தை
உணர்த்தியிருந்தது
வானம்

இப்போது என் துயரங்கள்
மெல்லத் தொலைந்தன
நம்பிக்கைகள்
நலம் விசாரித்தன

சற்று மேல்நோக்கிப்
பறக்க முயல்கிறேன்
என்னிலிருந்து
உதிர்ந்ததொரு இறகு

கனவு கலைத்து

எழுந்து
சாளரம் திறக்கிறேன்

முகம் பரவிய வெளிச்சத்தில்
விடிந்திருந்தது என் வாழ்க்கை...!

எழுதியவர் : அ.ரகு (7-Feb-15, 4:46 pm)
பார்வை : 84

மேலே