வரலாற்று யாத்திரைகள் - 06 - ஒரு பக்கக் கதைகள் - கிருத்திகா தாஸ்
அவன்...
தனித்திருந்தான் ... அவனது அறையில் ...
தன் நாற்காலியில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த அவன் , தன் அறைக் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை அசையாத கண்களோடு வெறித்திருந்தான்... ஏதோ யோசித்துக் கொண்டே இருந்த அவன் , சட்டென்று கையிலிருந்த சுருட்டைத் தூர வீசி எறிந்தான்...
'இந்த உயிர் ...... இனி எனக்குத் தேவையில்லை...'
'ஆம்......தேவையில்லை.......'
தன் நாற்காலியில் இருந்து எழுந்த அவன் , அவன் ஊதித் தள்ளிய புகைக்குள்ளிருந்து மெல்ல வெளி வந்தான்....
'இனியொருநாளில் , இந்த பூமியில் என் நிழல் விழப் போவதில்லை....ஆம்....இனி........' கோவம் ஆத்திரம் ஏமாற்றம் அவன் கண்களை மறைக்க ...
ஆத்திரத்தில் மேஜை மேலிருந்த மதுக் குவளையை எடுத்து சுவற்றில் அடித்து நொறுக்கினான்... மேஜையில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களைக் கலைத்துத் தள்ளினான்...
'ஆஆஆஆ' ....
இரண்டு கைகளாலும் இரண்டு காதுகளை அடைத்துக் கொண்டு வெறிகொண்டு கதறினான்... கத்தி அடங்கியவன் , தரையில் கால்களை ஓங்கி மிதித்தான்.....
ரத்தம் முழுக்கப் புகைந்து கொண்டிருந்த ஆத்திரம் கொஞ்சமும் அடங்காதவனாய் , அங்கு மேஜை மேலிருந்த பீங்கான் ஜாடியைத் தூக்கி வீசி அடித்து அவனின் படுக்கைக்கு மேல் மாட்டப்பட்டு இருந்த அவனது புகைப்படத்தை உடைத்து நொறுக்கினான்...
உடைந்து நொறுங்கிய அவனது புகைப்படைத்தின் அருகில் சென்று நின்று குரூரமாகப் பார்த்த அவன் , மிச்சமாக இருந்த கண்ணாடித் துகள்களை தன் இடது காலால் எட்டி உதைத்தான்...
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்த அவன் , கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்க பயந்து கொண்டு வெளிவராமல் நின்று கொண்டிருந்த ஒரு துளிக் கண்ணீரை உள்ளங்கையை வைத்து அழுத்தித் தள்ளிக் கொண்டு , அழுத்தமான அடிகளை வைத்து குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே ஜன்னல் அருகே போனான்...
ஜன்னல் அருகில் போய் அசையாமல் நின்றவன் , திறந்திருந்த ஜன்னலின் வழியாக அவன் மேல் விழுந்த துளி வெளிச்சத்தில் ஆத்திரம் கொண்டு ஜன்னல் கதவை படாரென்று அறைந்தான்.....
அப்பொழுதும் தரையில் இருந்து கண்கள் நகர்த்தாமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் , கன்னங்கள் இறுக , இரண்டு கைகளாலும் ஜன்னலின் திரைச் சீலையைப் பிடித்து வெடுக்கென்று கிழித்து தூக்கி வீசினான்...
பார்வை மட்டும் அப்போதும் தரையை நோக்கியே இருந்தது...
'இல்லை...இல்லை.........இல்லை....................'
வெறித்தனமாகக் கத்தியவன் , அறை சுவரின் பக்கம் சென்று அவனின் நிழலின் முகத்தில் கை வைத்து சுவரைக் கீறினான்... கீரியதில் தன் விரல் நகங்களின் வழி ரத்தம் வழிவதைப் பார்த்து இரண்டு கண்களையும் மெல்ல சுருக்கிய அவன் , மெல்லத் திரும்பித் தன் மேஜை அலமாரியைப் பார்த்தான்...
'ம்ம்...அது தான் ......... அது தான் சரி..........'
'ஆமாம்........... அப்படித்தான் நடக்க வேண்டும்...... அப்படித்தான் நடக்க வேண்டும்............'
அலமாரியை நோக்கி மெல்ல நடந்த அவனின் கால்கள் சட்டென்று ஒரு நொடி நின்றன...
ஏதோ ஒரு தயக்கத்தோடு அசையாமல் நின்று அலமாரியைப் பார்த்த அவன் , மெல்ல தன் வலது கையை எடுத்துக் கழுத்தில் வைத்துக் கொண்டு அப்படியே நிமிர்ந்து தன் அறையின் மேல் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கை ஒரு நொடி உற்றுப் பார்த்தான்.....
அப்படியே அசையாமல் சிலையாக நின்றிருந்தான்...
அசையாமல்.......
சிலையாக நின்றிருந்தான்...
திடிரென்று..............
'இல்லை........இல்லை.........இல்லவே இல்லை......... அது தான் சரி.... அது தான் சரி........... அப்படி நடப்பது தான் சரி...........'
என்று கத்திக் கொண்டே போய் , மேஜை அலமாரியில் இருந்த தன் கைத் துப்பாக்கியை எடுத்தான்...
துப்பாக்கியின் கூர் முனையையும் கைப் பிடியையும் மாற்றி மாற்றி அழுந்தப் பார்த்தவன்.......
பார்த்தவன்.......
பார்த்துக் கொண்டே இருந்தவன்.......
பார்த்துக் கொண்டே .....இருந்த அவன்.........
கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நொடியும் தாமதிக்காமல் துப்பாக்கியின் முனையை தன் நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்தி , கண்களை இறுக்கமாக்கி ...... துப்பாக்கியின் கைப்பிடியை இருக அழுத்தி சுட்டான் ...
ஆனால் ...
ஆனால் ...
துப்பாக்கி வெடிக்கவில்லை ...
'என்ன இது'
துப்பாக்கியை கூர் கண்களுக்கு நேராக நிறுத்தி உற்றுப் பார்த்தவன் ... மீண்டும் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து இறுக அழுத்தி சுட்டான்...
அயகோ...அப்போதும் அந்தத் துப்பாக்கி வெடிக்கவேயில்லை .............
வெறுத்துப் போய் துப்பாக்கியை தூர வீசிவிட்டு அங்கும் இங்கும் நடந்தான்... நடந்தான்... நடந்து கொண்டே இருந்தான்...
நடந்து கொண்டே இருந்தவன் , சட்டென்று நின்று என்னவோ யோசித்தான்...
'ஹ........ ஹ......... ஆம்......'
'ஆம்.........நான் .....'
'நான்....... ஏதோ ஒன்றை வெல்வதற்கென்று உயிரோடிருக்கப் பணிக்கப்பட்டிருக்கிறேன் ...'
ஆமாம்.....'
சொல்லிக் கொண்டே உற்சாகம் மிகுதியில் போய் அவனுடைய அறைக் கதவைத் திறந்தான்....
திறந்தபோது.....அங்கே...
அங்கே...
அவனது உயிருக்கென்றே காத்திருந்த அந்தக் கத்தி , நொடிப்பொழுதில் சரக்கென்று அவன் கழுத்து நரம்புகளை அறுக்க ...... ரத்தம் வழிய வழிய , தன் அறை வாயிலில் உயிரற்ற உடலாகச் சரிந்தான் அவன் .....
அவன் : ராபர்ட் கிளைவ்
அவன் : தோன்றிய நாள் : 25 செப்டம்பர் 1725
அவன் : மறைந்த நாள் : சாதாரணமான வரலாற்றின் அசாதாரணமான அந்த நாள்
பின் குறிப்பு : ராபர்ட் கிளைவ் இந்தியா வந்த சில காலத்தில் சில காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார்.. துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்ற போது அவரது துப்பாக்கி வெடிக்கவே இல்லை... அதனால் அதன் பிறகு அவர் தற்கொலை எண்ணத்தைக் கை விட்டு விட்டார்...
- கிருத்திகா தாஸ்...