ஆதலின் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
கொள்ளை அன்பை கொள்கையாய் கொண்டே
வெல்லுதல் வேண்டிட வானமும் வயப்படும்
கல்லும் கரைந்திடும் கனிவுடைப் பேச்சால்
வல்லமை வெல்லுதல் வையக வழக்கே
இரும்பை உருக்கிடும் நெருப்பே வலியது
நெருப்பை அணைத்திடும் நீரது வலியது
பரிதியின் அனலால் பாரிது வற்றிடும்
வீரியம் மிக்க சூரியன் அவனோ
பேரண்ட மிதனின் பகுதியில் சிறுதுகள்
பரம்பொருள் அவனே பேரண்ட நாயகன்
பரமனை வெல்லும் பக்தனின் அன்புளம்
ஈரமும் பாசமும் பக்தியும் காதலே
கருவறை காக்கும் காதலே தாய்மை
ஒருவரை ஒருத்தி ஈர்த்தலும் காதல்
தந்தையர் ஆற்றும் தகைமையும் காதல்
சிந்தையில் இணையும் விந்தையே நட்பு
மோதலின் விளைவு ஈருளப் பிணக்கு
காதலின் விளைவு ஈருயிர் இணக்கம்
ஈதலின் சாதலோ இருவரின் ஆணவம்
ஆதலின் உலகீர் ஆற்றுவீர் காதலே