நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

இமயகிரி அரணாகி இந்தியத்திரு நாடுகாக்கும்
திரிபுறமும் கடல்சூழ தீபகற்ப மென்றாகும் !

வளைந்தோடி விளையாடி வளமூட்டும் நதிகளெல்லாம்
வரமான காதலினால் கடலினிலே சங்கமிக்கும் !

விந்தையான விருட்சங்களும் வண்ணமிகு மலர்ச்செடியும்
வனங்களுடன் வயல்வெளியின் பசுமைக்கோலம் நெஞ்சள்ளும் !

இயற்கை எழில்கொஞ்சும் இந்தியத்திரு நாட்டினிற்கு
இணையொன்று உண்டோவெனில் இல்லையென்றே மனம்சொல்லும் !

சிலையழகும் சிற்பங்களும் சிலிர்க்கவைக்கும் சித்திரமும்
கலைகொஞ்சும் கோயில்களில் கவினுறவே காட்சிதரும் !

பஞ்சபூதம் காத்துநிற்க வேதங்கள் ஒலித்திருக்கும்
தஞ்சமென வந்தோரை தாயன்புடன் வரவேற்கும் !

சித்தர்களும் ஞானியரும் வாழ்ந்ததிந்த பூமியாம்
தத்துவங்கள் ஆயிரமாய் தவழ்ந்ததிந்த தேசமாம் !

காப்பியமும் இலக்கியமும் உலகஅரங்கில் முன்நிற்கும்
கலாச்சாரம் காப்பதில் பாரதமே வழிகாட்டும் !

இத்தரணியில் வல்லரசாய் இந்தியாவை மாற்றிட
இன்பமுடன் கரமிணைப்போம் வாழ்கவெனப் போற்றுவோம் !

பண்பாட்டில் பெருமைகொண்டோம் பார்போற்ற உயர்த்துவோம்
விண்ணும்மண்ணும் உள்ளவரை தேசநலன் வளர்ப்போம் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-Feb-15, 11:46 pm)
பார்வை : 297

மேலே