புதிய நாள்
வான் மழை இடி
இடித்துப் பொழிய
வீட்டு முன் ஓடை
சல சலத்துப் பாய்கிறது
கருமேகம் ஒன்றை
ஒன்று முட்ட
பொன் மின்னல் பூமியை
தொட்டுச் செல்கிறது
சுழல் காற்று பட
படத்து வீச
அவள் அறை சாளரங்கள்
திறந்து கொள்கிறது
மழைத் துளி சொட்டு
சொட்டாய் விழ
அவள் கயல் கண்கள்
விழித்துக் கொள்கிறது
மின்னல் ஒளி கண்ட
அவள் கண்கள்
கண்ணீர் சொரிய
மழை இருட்டை போல்
அவள் நிலா முகம்
இருண்டு போகிறது
அவள் கண்கள் சொரியும்
கண்ணீர் கண்டு மழை
பதை பதைத்துப் போனதோ !
கருமேகம் உடைத்து
வெண் கதிர் இருட்டை
கிழிக்கிறது
மழை நின்று ஒளி பரவ
அவள் கண்ணீரும் நின்று
அந்த நிலா முகம் பரவசம்
கொள்கிறது