சாலச் சிவன் சங்கு
மருந்து சாப்பிட்ட-
மனிதனைக் கடிக்கும் கொசுக்கள்
மரத்துப் போய்
அவைகளையே கடித்து கொண்டன.
நடந்த யுத்தத்தில்
ஒடிந்து விழுந்த சிறகுகளையும்
உறிஞ்சு குழல்களையும் சேகரித்து
புத்திசாலி ஒருவன்
புதிதாய் கடை போட்டான்
போகிறவர்களும் வருகிறவர்களும்
வந்து குவிந்ததில்
காயல் வற்றிப் போய்
கடலோடு சமாதானம்செய்து கொண்டது .
அதுவரை உப்பு கரிக்காத
கரை தென்னை காய்கள்
குடித்தவர்கள் ஒவ்வொருவரையும்
கொலை செய்ததாய்
குறுநில மன்னனின்
சாசன செப்பேட்டில்
குறிக்கப் பட்டிருந்தது ..
அந்தஎதிர்பார்த்த அந்த நாளும் வந்தது
மலப் பணியாளர்களும் களப் பணியாளர்களும்
களமிறங்கி பணிநிறுத்தம் செய்தார்கள்
நாட்கள் தொடர நகரம் நரகமாகியது .
அரசு அலுவலகங்களும்
அந்நிய நிறுவனங்களும்
காலவரையின்றி கதவு சாத்தின
அசிங்கத்தோடே அவசரமாக கூட்டப்பட்ட
அமைச்சரவைக் கூ ட்டம்
அவசரமாக தீர்மானம் இயற்றியது:
இனிமனுக்களில்
சாதி என்ற ஒன்றுமிருக்காது.
.சலுகையும் இருக்காது.
சரக்கிருந்தாஅலுவலகப் படி -
இல்லை சாதாரணப் பணி ....
அடுத்த பத்தாண்டில்
அம்பலத்தான் வாரிசு பிணம் தள்ளினான்
கைநிறைய ஊதியத்தோடு
விவரமான வெட்டியான் மகனும்
அறிவு சார்ந்த அம்பலத்தான் மகனும்
அதிகாரிகளாய் இருந்தார்கள்...
அப்போ து அவர்களுக்கு
அவர்கள் என்ன சாதி என்பது
மறந்தே போச்சி......
வழக்கம் போல
கடலின் அலைகள்
கரையோடு வாதம் செய்து
வருவதும் போவதுமாயிருந்தது
கரையில்
ஒரு பெண்ணின் மார்பகங்கள்
கழுகுகளால் கிழிக்கப்படுவதை
கண்டும் காணாமல்....