காதலும் கவிஞனும்- தொடர் 1

காதல்! எத்துணை சக்திமிக்க சொல்..இந்தக் காதல் எல்லோரையும் படுத்தும்பாடு
மிகமிக அதிகம்! அது என்னையும் இளவயதில் பாதித்தது இன்று கவிதைகளிலும்
என்னை மிகப் பாடுபடுத்திவிட்டது/

கவிஞன் உணர்வுகளின் உச்சிக்குபோகிறவன். எதிலும் எல்லையை தாண்டி இரசிப்பவன்
என்கவிதை களுக்கு நான் ஆரம்பகாலத்தில் தடைபோடவில்லை அது உணர்ச்சிபூர்வமானது
அதை இங்கு போடலாமா தெரியவில்லை உதாரணத்துக்கு தருகிறேன், நான் பலவிதமான
உணர்வுகளை இங்கே கொண்டுவரப்போகிறேன் அதனால் இதை சகித்துக்கொள்ளவும்.

நிலவா இவள்?


நீர்தேங்கு குளமும் நின்றாடு மலையும்
நிலவேங்கி ஒளிவீசும் அழகும்
வீரெனும் வண்டும் விளையாடு மலரும்
விரியநற் சுவைதரும் மதுவும்
காரிருள் மேகம் கவிந்திடத் தோன்றும்
களிப்புமின் நடமிடும் மயிலும்
ஓரெனக் கொண்டு உவகையைத் தந்து
உயிரென அணைந்தவள் நின்றாள்

பேரென்ன வென்றேன் பொன்நிலா வென்றாள்
பொன்னிலா குறைகொண்ட தென்று
ஈர்வண்ணமதியோ எழில்நிலாக்கோளம்
இடைவலி கொண்டிடத்தாங்கும்
சீர்தனைச்சுட்டி சொல்லு உன்உண்மைப்
பேரென்ன என்று நான் கேட்க
சேர்சுகம்தன்னை சிற்றிடைகொண்டாள்
சிரித்தெனைச் சிறையினிற் போட்டாள்

வாயூறும் நீரும் வழிகின்ற இதழும்
வானவர் தேனமு தென்றே
சேயாறும் உண்ணச் செயலன்ன தென்னைச்
சிறுகையிற் குழந்தையென் றாக்கிப்
பூநாறும் என்னப் புத்துடல் நாறி
போதைதான் கொண்டே மயங்கத்
தானாறும் வரையிற் தந்துமே கொண்டும்
தானாறு கடலெனைச் சேர்ந்தாள்

நாவோரம் சுவையும் நடு ஈரமதுவும்
நெளிந்தின்பக் கதை பேசும் உதடும்
தாவாரத் தூறல் தருகின்ற இன்பத்
தவிப்போடு சிலிர்க்கின்ற சுகமும்
பூவாரம் போன்ற கைமலர்கொண்டே
புரியாத பாடத்தைக் கேட்டு
யாவரும் கொள்ளா ஓராயிரங்கள்
உண்டென இன்பங்கள் தந்தாள்

எழுதியவர் : கிரிகாசன் (10-Feb-15, 4:29 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 51

மேலே