ஓட வேண்டாம்

ஓடுங்கள் ஓட வேண்டும்
வெற்றி நோக்கி ஓடுங்கள்
ஓடுங்கள் ஓட வேண்டும்
என்று பொதுவாய்
கேட்ட ஒரு குரலை தொடர்ந்து
ஒவ்வொருமனிதனும் ஓடுவதை கண்டு
நானும் ஓடினேன்!

தொடர்ந்து ஓடினால் ஒழியே
நீ இந்த போட்டியில் நீடிக்க இயலாது
என்று இன்னொரு குரல்.....
வேர்க்க விறுவிறுக்க
வேகமாய் ஓடினேன்!
உறவுகள் என் ஓட்டத்தை
கை தட்டி
இன்னும் இன்னும்
என்று கத்தியவாறே இருந்தன!

சுற்றி பார்க்கையிலே
முன்னும் பின்னும்
எத்தனையோ கால்கள்
எண்ணகூட நேரமின்றி
ஓடிக்கொண்டு இருந்தன!
அக்கம் பக்கம் என்று
ஏதுமறியாமல்
முன் பார்த்த கண்
பின் பாராமல்
ஓடிகொண்டே இருந்தன!

சில சிலவற்றை முந்தியும்
சில சிலவற்றை இடித்து தள்ளியும்
சில சிலவற்றின் இடையில் கால் நுழைத்தும்
பலரை கீழ் தள்ளி
முந்தி ஓடி கொண்டு இருந்தன!
அவை என்னை பார்த்து
பல் இளித்து இந்த ஓட்டத்தை
பழக்கிகொள் என்றன!

சில கால்கள் தளர்ந்து
சில கால்கள் பின்னலாடி
சில கால்கள் தரை சிராயிந்து
சில கால்கள் வேர்வை சிந்தி
சில கால்கள் இரத்தம் வழிந்து
ஓடி கொண்டே இருந்தன
இளைப்பாற எண்ணிய போதெல்லாம்
எதிரொலித்த வண்ணம் அந்த குரல்
ஓடுங்கள் ஓடுங்கள் என்று..

ஒவ்வொரு எல்லை கோட்டிலும்
யாரோ தெரியாத சிலர்கள்
என்னிடம் சொல்லியவண்ணம் இருந்தனர்
மூச்சு வாங்க நின்றால்
உன்னை முந்தி விடுவர் என்று
நானும் அவசர அவசரமாய்
சுவாசித்து சுதாரித்து
ஓடிகொண்டே இருந்தேன்.....

நிறைய எல்லை கோடுகள்
கடுந்து சென்றேன்
என்னைபோலவே எதுவும் தெரியாத
என் பிள்ளைகளையும்
ஓடுங்கள் ஓடுங்கள்
என்று ஓட சொல்லிய
பிறகு உணர்ந்தேன்....

அய்யகோ! நான் நடந்தே வந்திருக்கலாம்
அழகான அவைகளை நின்று கண்டு வந்திருக்கலாம்
வழிதெரியாமல் நின்ற அவர்களுக்கு
எனக்கு தெரிந்த பாதை சொல்லி தந்திருக்கலாம்
கால் இல்லாதவர்களை தூக்கி வந்திருக்கலாம்
சோர்ந்த கால்களை ஊக்கி வந்திருக்கலாம்!

இப்பொழுது என் கால்களுக்கு நிற்கவும் முடியவில்லை
என் ஓட்டத்தில் மறந்த எதையும் என்னால் பின் சென்று
பார்க்க முடியவில்லை.....
இந்த ஓட்டத்திற்கு இறுதி இல்லை
எல்லாம் போலி எல்லைகள்
பொதுவாய் யாரோ சொன்ன குரலுக்கு
ஓடியது என் தவறுதான்...

அதோ அங்கே என் பிள்ளைகள்
புதியதொரு தடத்தில் முன்னமே
ஓட தயராய்....
மகனே! மகளே! நில்லுங்கள்
களையுங்கள் இந்த ஓட்ட பந்தய உடைகளை
மெதுவாய் செல்லுங்கள்
என் விரல் பிடித்து கொள்ளுங்கள்...
நானும் முன்னொரு களத்தில் ஓடினேன்
பெற்றவர்கள் ஊன்று கோல் தேடியபோது
விரல்களை விடுத்து வேகமாய் ஓடினேன்....
என் மனைவிக்கு கூட எச்சிலை முழுதும் கன்னம்
பதிக்காமல் பார்த்துகொள் வருகிறேன் என்று
பாதியிலேயே ஓடினேன்......
நீங்கள் சிரித்து முடிக்குமுன்னே
கை அசைத்து சீறி ஓடினேன்....
என்னால் இப்போது ஓட முடியாது என்பதற்காய்
இதை சொல்லவில்லை
நான் எங்கோ இருக்கு என்று எதை தேடி ஓடினேனோ
அது என் ஓட்டதடத்தின் பக்கங்களில்
பூவாக பூத்து கிடந்ததை மறந்தே காணாமல் இங்கு வந்து நிற்கின்றேன்
இனி என்னால் அதை ஒரு போதும் காண இயலாது....
நீங்களாவது போகும் போதே இரசித்து விட்டு போங்கள்......
மெதுவாய் செல்லுங்கள்.....ஓட வேண்டாம்......

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (11-Feb-15, 8:51 am)
Tanglish : oda ventaam
பார்வை : 96

மேலே