மீண்டும் அவள் பகுதி 2

(மீண்டும் அவள்)---- பகுதி 2

யார் பேசியது என்ற விவரம் அறியமுடியவில்லை. ஆனால் பேசிய சில வார்த்தைகளில் ‘தமிழ்’ என்ற வார்த்தை மற்றும் நன்றாக நினைவில் நின்றது. அதற்கு காரணம் தமிழ் மொழியை அந்த அளவிற்கு நேசிகின்றேன். சரி இப்போது கிடைத்த ஒரே துப்பு தமிழ் என்ற சொல் மட்டும் தான் அதை வைத்து தான் யார் பேசியது என கண்டறிய வேண்டும் என்ற சிந்தையில் மூழ்கிப்போனேன். திடிரென மீண்டும் ஓர் குரல் ஆனால் அது ஆணின் குரல், தமிழ் நகர் இறங்கிகங்க என்றார் பங்குத் தானி ஓட்டுனர். வாகனம் நின்றவுடனே அவளும் அவளுடன் மேலும் இரண்டு பெண்களும் இறங்கினர். ஒரு வழியாக சற்று விடை கிடைத்தது இந்த மூவரில் ஒருவர் தான் பேசியிருக்க வேண்டும், அது அவளாகவும் இருக்கலாம் அல்லது வேறிரு பெண்களாகவும் இருக்கலாம். சரி மீண்டுமொரு சந்திப்பில் வாய்ப்பு கிட்டுகிறதா என பார்ப்போம் என்று சிந்தித்தபடியே இருக்க நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது. தானியை விட்டு இறங்கி வீடு நோக்கி செல்லலானேன். தினமும் சுறுசுறுப்பாய் பீடு நடைபோட்டு வீட்டிற்கு செல்லும் நானோ இன்று மெல்ல மெல்ல அடியெடுத்து அவளின் சிந்தனை அளவெடுத்து நகர்ந்து செல்லலானேன்.
சுற்றுப்புறம் சுருங்கிப்போனது என் அகப்புறம் விரியலானது, முந்திச்செல்லும் வாகனங்கள் மோதிச் செல்லாத குறையாக சென்றாலும் என் கற்பனை வாகனம் நின்றபாடில்லை, அதில் பயணிக்கும் அவளின் பயணமும் முடிந்தபாடில்லை.

எப்படியோ சேதாரம் இல்லாமல் வீடுபோய் சேர்ந்துவிட்டேன். எனது வாழ் நாளில் முதன்முதலாக உணவு உண்பதை சுமையாகக் கருதினேன், இத்தனை நாட்கள் வரை இரவென்பது ஓய்வு எடுக்க உறக்கம் கொள்ளும் நேரமாகவே இருந்தது, அவ்வாறே நானும் கருதினேன். இன்று இரவு மட்டும் ஏனோ உறக்கமின்றி ஓயாமல் அவள் நினைவாகவே நகர்ந்தது. அன்பு காட்டும் அம்மாவின் குரலும் என் காதில் விழவில்லை, மனதில் என் தாயை போன்றே குறைவில்லாத அன்பை வைத்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சற்று மிரட்டலாகவே பேசிடும் என் தந்தையின் பேச்சும் என் காதில் விழவில்லை, மீண்டும் அவளை சந்திக்க முடிமா அந்த பேரழகை இரசிக்க முடியுமா, இன்று அவளெதிரே அமர்ந்து பயணித்தேன், நாளை அவளருகே அமர்ந்து பயணிக்கக் கூடுமா, ஐயோ என்ன ஆனது எனக்கு ? ஏன் இப்படியானேன் ? ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் எல்லாம் சுகமாகவே இருந்தது. இனியெல்லா இருவுகளும் இப்பிடித்தான் இருக்குமோ ? அடிக்கடி அவளை அழைத்துக்கொண்டு நிலவிற்கு செல்வேனோ ? அல்லது நட்சத்திரங்களை கொண்டு வந்து, அவள் கோலமிட புள்ளிகளாய் சேகரித்து வைப்பேனோ? அடடா அப்பட்டமாய் தெரிகிறது நான் ‘கைக்கிளைக் காதலில்’ விழுந்து விட்டது, எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை, அம்மாவின் பாசம் மிக்க அக்கறையான பேச்சு இல்லை இல்லை கொஞ்சல் என் காதில் விழுந்தது. பொழுது விடிந்து விட்டது எழுந்திரு ஐயா, ராத்திரியே சாப்டாம வெறும் வைத்தோட படுத்துகிட்ட உடம்பு என்னத்துக்கு ஆவுறது ? போ போயி சீக்கிரம் பல்லு வெளக்கிட்டு குளிசிக்குனு வந்து சாப்புடு என்று என்னை என் அம்மா எழுப்பிய பிறகுதான் என் உலகமே விடிந்தது. காலைக்கடன் அனைத்தையும் முடித்துக்கொண்டு அம்மா சமைத்த ஊட்டமான உணவை ஓர் பிடி பிடித்துவிட்டு, உற்சாகமாய் அலுவலகம் நோக்கி பயணப்பட்டேன்.

மீண்டும் அவள் தொடர்வாள் .........,

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (11-Feb-15, 5:43 pm)
பார்வை : 178

மேலே