என் ரஜினி என் கமலு நீ நல்லா இருக்கனும் - ரத்த பாசம்

'என் ரஜினி என் கமலு நீ நல்லா இருக்கனும்' - ரத்த பாசம்:
(அனையாத அடுப்புகள், வித விதமாய் பண்டங்கள், சுவை மிகுந்த இனிப்புகள், வண்ண வண்ண விளக்குகள் என அத்தனை மகிழ்ச்சியும் மலர்ந்த முகத்தோடு புத்தாடை உடுத்தி
பார்க்க பரவசமாய் வீடு நிறைந்த உறவினர்கள்.
ஏதோ விஷேசம் என்று புரிந்தது. அங்கே ஓர் அழகிய மழலையின் தலையை துவட்டியபடியே வயது முதிர்ந்த கணவன் மனைவி பேசி கொண்டிருந்தது மெதுவாய் என் காதில் கேட்டது.)
'என் ரஜினி குட்டி என் கமலு நீ நல்லா இருக்கனும்' என்று கொஞ்சிக் கொண்டே 'என் பேரன் ரொம்ப பெரிய ஆளா வருவான் பாருங்க' என்று கண்ணம்மா பாட்டி தன் கணவர் தங்கப்பனிடம் மெய்சிலிர்த்து சொல்லி கொண்டிருந்தார்.
ஆமா.! ஆமா.! 'இன்னைக்குதான் இவனோட முதல் புறந்தநாள் அவன் பெரியாள வாரத நான் பார்க்கரேனோ இல்லையோ'....என்றார் சிரித்துக்கொண்டே.
'சும்மா இருங்க நல்லநாள் அதுவுமா'.. என்று அவரை பார்த்து முறைத்தார் கண்ணம்மா பாட்டி.
(இந்த உரையாடல் கடந்து மற்றொரு பெண்ணின் குரல் மிகவும் சத்தமாய் கேட்டது யாரென்று எட்டி பார்க்க)
'உங்களுக்கெல்லாம் எதுக்கு குழந்தை' என்று திட்டிக்கொண்டே உள்ளேயிருந்து வெளியே வந்தாள் ராணி.
'புரிஞ்சிகோமா நீ சொன்னதெல்லாம் சாயங்காலம் நடக்கும்' என்று பின்னாடியே வந்தான் குமரன்.
'என்னவோ பண்ணுங்க' என்று முகம் சுளித்தாள் ராணி.
அதை பார்த்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் கோபத்தோடு கடைத்தெருவுக்கு கிளம்பினான் குமரன்.
வண்டி சத்தம் கேட்டவுடன் அவன் குழந்தை கைகளை நீட்டிக்கொண்டு அழ தொடங்கியது.அதை பார்த்த கண்ணம்மா பாட்டி குழந்தையை தூக்கி கொண்டு வந்து வண்டியில் உட்கார வைத்தார்.
என்ன ராசா ஒரு மாதிரியா இருக்க? என்று கோபமாய் இருந்த தன் மகன் குமரனை பார்த்து கேட்டார் கண்ணம்மா பாட்டி.
'எதுவுமில்லை' என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தான்.
'இங்க பாரு ராசா சின்ன கோவம் கூட நம்மகிட்டயிருந்து பெரிசா ஏதாவது பரிச்சிடும் பொறுமை இரு கண்ணு' என்று குமரனுக்கு அறிவுரை கூறினார் கண்ணம்மா பாட்டி.
சரி என்று சொல்லிவிட்டு குழந்தையை வண்டியின் முன் பகுதியில் உட்கார வைத்து கொண்டு கடைத்தெருவுக்கு கிளம்பினான்.
தன்னுடைய பெற்றோரை தன் மனைவி உதாசின படுத்துவதை எண்ணி மிகவும் வருந்தினான்.
தன் நிலை மறந்திருந்த அவனுக்கு தன் மனைவி இட்ட கட்டளைகள் தான் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது.
'இங்க பாருங்க சாயங்காலத்துக்குள்ள
உங்க அருமை அம்மா அப்பாவை ஊருக்கு அனுப்புங்க இல்ல நானும் என் புள்ளயும் விசம் குடிச்சி செத்துறுவோம். உங்க அப்பாவுக்கு கால் முழுக்க புண்ணுங்க, அம்மாவோட வறட்டு இருமல் சகிக்கல' என்று கீழ் தரமாய் பேசியதை எண்ணி தன்நிலை மறந்தான்.
அவன் தன் பெற்றோரை ஊருக்கு அனுப்ப முடிவு செய்து பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு மையம் முன் வருத்தத்துடன் வண்டியை நிறுத்துவிட்டு அதில் குழந்தை உட்கார்ந்து இருப்பதை மறந்தவனாய் மூன்றடி எடுத்து வைக்க 'அய்யோ! என் குழந்தை வண்டியில் இருக்கிறதே' என்று திரும்பி பார்ப்பதற்குள் குழந்தை சரிந்து தார் சாலையில் விழுந்தது.
குழந்தையின் தலையிலும் முகத்திலும் ரத்த காயங்கள் வலியில் துடித்து சத்தமாக அழத் தொடங்கியது.
குமரன் கண்களில் நீர் கசிய செய்வதரியாது நின்றான்.
எதிரில் இருந்த பூக்கடைகாரர் நடந்ததை பார்த்து ஓடி வந்து 'என்னப்பா இப்படி பண்ணிட்டியே சரி வா பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்கு கொண்டு போகலாம்' என்று சொல்லி குழந்தையை தூக்கிக் கொண்டு வண்டியில் உட்கார்ந்தார்.
இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கே தலையில் பலமாக அடி பட்டதாகவும் குழந்தை பிழைப்பதே கடினம் என்றும், பிறகு அப்படியே ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் செலுத்த வேண்டும் என்று கூறவே குமரன் தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினான்.
பக்கத்தில் இருந்த பூக்காரன் குமரனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லுங்க என்றான். உடனே குமரன் தன்னுடைய கைபேசி எடுத்து தன் மனைவிக்கு தகவல் சொன்னான்.
தகவல் கேட்டதும் ராணி மயங்கி விழ என்னவென்று அறியாத அவளுடைய மாமியார் கண்ணம்மா பாட்டியும் அவருடைய கணவரும் ஆட்டோ அழைத்து வந்து அதில் ராணியை உட்கார வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே குமரன் எதிரில் வர 'ராசா இந்த புள்ளைக்கு என்ன ஆச்சோ தெரியல மயங்கிட்டா' என்று சொல்லிவிட்டு குமரனின் வாடிய முகத்தை பார்த்து 'உனக்கென்ன ராசா ஆச்சி எங்கய்யா என் பேரன்' என்று கேட்க,
அவன் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல, அய்யோ! 'இந்த பாவியோட கையாலாதான் வண்டியில உட்கார வெச்சேனே'..அய்யோ! என் சின்ன ராசாவுக்கு என்ன ஆச்சோ தெரியலயே என்று கதறி அழுதார் கண்ணம்மா பாட்டி.
குமரன் கைபேசியில் யாரிடமோ அவசரமாக ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடு என்று கேட்டு கொண்டிருந்ததை பார்த்த கண்ணம்மா பாட்டி உடனே தன் தாலியில் கோர்த்திருந்த ஐம்பது தங்க காசுகளை கழற்றி குமரன் கையில் கொடுத்து 'இத வித்துறுயா ஒரு லட்சத்துக்கு மேல வரும்' என்றார்.
குமரன் வேண்டாம் என்று மறுக்க...'இல்ல ராசா வாங்கிக்கோயா என் ராசா சின்ன குட்டிக்காக வாங்கிக்கோயா அவன் நல்லா இருக்கனும்' என்று கெஞ்சினார் கண்ணம்மா பாட்டி.
அவனும் அதை விற்று மருத்துவனையில் தன் குழந்தை பெயரில் மருத்துவ செலவுக்காக செலுத்தினான்.
மயக்கம் தெளிந்த ராணி 'என் புள்ளய பாக்கனும் கூட்டிட்டுபோங்க'..என்று கதற பக்கத்தில் இருந்த பூக்காரன் 'இப்ப பார்க்க முடியாதுமா அவசர பிரிவுல விட மாட்டாங்கா' என்று கூறி விட்டு..
எதிரில் உட்கார்ந்திருந்த கண்ணம்மா பாட்டியை கைக்காட்டி 'யாருமா இவங்க காலையில நான் உங்க வீட்டுக்கு பூ குடுக்க வந்தேன் உங்க வீட்டு தின்னையில உக்காந்து சாப்டுனு இருந்தாங்க..இப்ப உன் புள்ளைக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் புருஷன் உசுரோட இருக்கவே தாலிய கழட்டி அதுல இருந்த தங்க காசுங்கள உன் புருஷன் கிட்ட குடுத்தாங்க என்ன ஒரு நல்ல மனசுமா அவங்களுக்கு' என்று கூறவே ராணியின் கண்கள் கலங்கின அவள் தவறை உணர்ந்தாள்.
'அவங்க யாருன்னு சொல்லவே இல்ல' என்று மறுபடியும் பூக்காரன் கேட்க தன் மாமியாரை முதல் தடவையாக 'என் அம்மா' என்றாள் ராணி.
இரண்டு நாட்கள் கழித்து குழந்தையை அவசர பிரிவிலிருந்து பொது பிரிவுக்கு கொண்டு வந்தனர்...குழந்தையின் உடல் கொஞ்சம் தேறி இருந்தது. அங்கே வந்திருந்த பங்கஜம் மாமி 'என்ன கண்ணம்மா பெரிசா சொல்லுவ புருஷன் இருக்கச்ச தாலிய தூங்கும் போது கூட பூமீயில படகக்கூடாதுன்னு இப்ப அத கழட்டி அதுல இருந்த தங்கம் முழுச உன் புள்ளகிட்டே குடுத்துட்டியாமே' என்றார்.
'ஆமா பங்கஜம் அவரோட வாழ்ந்ததுக்கு அடையாளமா கடந்த ஐம்பது வருசமா ஒவ்வொரு வருசமும் ஒரு தங்க காசு தாலியில கோர்த்து வச்சிருந்த எந்த காலத்துலயும் கழட்ட கூடாதுன்னுத நெனச்சேன். ஆனா என் சின்ன குட்டி கஷ்டத்துல இருக்கும்போது என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல அவன் நல்லபடியா இருக்கனும்னு தான் அப்படி பன்ன' என்றார் கண்ணம்மா பாட்டி..
'ஆமா கண்ணம்மா நல்லதுதான் என்ன இருந்தாலும் ரத்தபாசம் சும்மா விடுமா' என்றார் பங்கஜம் மாமி.
அதை கேட்டுகொண்டிருந் ராணி 'அம்மா என்ன மன்னிசிடுங்கம்மா' என்று கண்ணம்மா பாட்டியின் கால்களில் தஞ்சம் அடைந்தாள்.
முழுதாக குணமடைந்த தன் பேரக்குழந்தையை நன்றாக குளிப்பாட்டி பொட்டு வைத்து தொட்டிலில் போட்டு தாலாட்டிலே தன் பேரனை கொஞ்ச தொடங்கினார் கண்ணம்மா பாட்டி....'என் ரஜினி என் கமலு நீ நல்லா இருக்கனும்' என்று.