கடிதத்தின் கதவுகள்

காற்றில் ஒரு கடிதம்
பறந்து வந்து
என்
கால்களுக்கு கீழே விழுகிறது.

அந்த கடிதத்தின் கதவுகள்
திறக்கப்படவில்லை என்பது
தீர்மானமாய் தெரிகிறது..

அடுத்தவரின்
கடிதம் படிப்பது
அநாகரீகம்.
ஆனால்
அதில்தான்
எனக்கு
அதிக தாகம்.

கன்னிகழியாத
அந்த கடிதத்தை
கற்பழிக்க
இந்த அயோக்கியனுக்கு
அவ்வளவு ஆசை...

எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது
எந்த முகவரியும்
கடிதத்தில்
எழுதப்படவில்லை...

என்னால்
கணிக்க முடிகிறது
இது
காதல் கடிதம் தான்.

காதலை சொல்ல
துணிவு இல்லாத
எதோ ஒரு
மடையனின் மடல் இது.

கடிதத்தின்
உதடை
உரித்து
உள்ளே நுழைகிறேன்...

அந்த
வெள்ளை கடிதத்தில்
வெறும் நான்கு எழுத்துகள்தான்
இருந்தது....

படித்ததும்
உள்ளம் நொறுங்கி போகிறேன்..
உரியவரிடம்
கடிதத்தை
உடனே சேர்க்க வேண்டும்...

தெளிவில்லாத இந்த
கடித கண்ணாடியில்
எழுதியவர் முகம்
தெரியவில்லை.

இதை
எழுத காரணமானவரை
கண்டுபிடிப்பது
சுலபமில்லை.

வீதியிலே
இந்த கடிதத்தை
வீசியெறிய
விரும்புகிறேன்.

எறிவதற்கு முன்
அதில்
எழுதியிருந்ததை படிக்கிறேன்
கேளுங்கள்.

" என் சாவுக்கு யாரும் காரணமில்லை "

எழுதியவர் : ரஞ்சித் (19-Feb-15, 7:05 am)
பார்வை : 276

மேலே