நான் யார் --குமரேசன் கிருஷ்ணன்--

அதுவொரு கனாக்காலம் , இலையுதிர் காலத்து மரங்களைப் போல் என்னை முழுவதும் உதிர்த்துவிட்டு மொட்டையாய் நின்றிருந்தேன் நான் . அல்லிருளில் ஆள் அரவமன்ற அந்த வனத்தினுள் மெல்ல நுழைந்திருந்தேன். மெல்லிய வெளிச்சம் தூரத்தில் தென்பட அதை நோக்கி நகர்ந்தேன். புதிய மலர்களின் நறுமணங்களைச் சுமந்து வந்த காற்று சுகந்தங்களை எங்கும் அள்ளி வீச , சருகுகளின் ஒலிகள் என்கால்கள் பயணிப்பதை உறுதிசெய்தது .

வெளிச்சம் அருகில் தென்பட அந்த வெள்ளையுடை தரித்த நீள்தாடியுடைய மனிதரின் உடல் வசீகரம் கண்டு சற்று திகைத்திருந்தேன். அவர் கையில் சிறு தடியொன்று தாங்கியிருந்தார். இந்த அடர்ந்த வனாந்தரத்தில் அம்முதியவர் எவ்வாறு வந்தாரென்று சற்று மனம் பேதலிக்க மெல்ல புன்முறுவல் பூத்தார் அவர். அவரிடம் பேச என்மொழி திரட்டி நான் ..நான் யாரென்றேன் ? நீயே கூறென்றார் , ""நான் "" சிறிது தடுமாற்றத்திற்குப் பின் '' நான் ...நான் ... கவிஞன் என்றேன் '', அது ஓரளவு உண்மைதான் , ஆனாலும் இன்னும் நீ முழுமை அடைந்துவிட்டாயா?? எனக் கேள்வி எழுப்பினார் , சற்று குழப்பத்தில் ஆழ்ந்தேன். சரி என்னோடு வா வென்றார். என் கரம் பிடித்தார் , என் நாடி நரம்புகளின் வழி மெல்ல ஏதேதோ உள்ளுணர்வு ஊடுருவ உடல் மெல்ல சிலிர்த்தது. சொர்க்கம் , நரகம் எதைக்காண விரும்புகிறாய் சொல் என்றார். சொர்க்க மென்றால் வசந்தகளின் மொத்தமும் அங்கிருக்கும் , நரகமே மனிதன் இறப்பிற்கு பின் அவன் பாவத்தின் பரிசால் கிடைக்கும் விடயம் அதை பற்றி அறிந்து கொண்டால் தவறுகள் செய்வதிலிருந்து மனிதன் மாறுவான் என்ற உந்துதலில் , சிறு குழப்பத்திற்குப் பின் , கொஞ்சம் தெளிவு பெற்று முதலில் நரகத்திற்கு செல்வோம் என்றேன். மீண்டும் சிரித்தார் .

நரகத்தினுள் நுழைந்து பின் மீண்டோம் , மனிதர்களின் நிலைகண்டு ஏனிப்படி என்றேன் . அது விதிப்பயன் என்றார் , விதியென்றால்...? என்னவென்றேன் , அது பிறவியின் சூட்சுமமென்றார், பிறவியென்றால்...? என்னவென்றேன் , அது ஆன்மாவின் ரகசியமென்றார் , ஆன்மாவெனில்...? மறுபடியும் கேள்வி எழுப்பினேன் , சிரித்தார் , ""ஆன்மாவெனில் நானென்றார், ஆன்மாக்கள் என்னிடமிருந்து பிறக்கின்றன என்னையே வந்தடைகின்றன"".

அப்படியெனில் என்னிடம் ஆன்மா உள்ளதாவென்றேன் , நீயே தேடு , உன்னுள் நீ காண்பாய், சரி ஆன்மாவெனில் என்னவென்று உனக்கு தெரிந்ததை நீயே கூறென்றார். நானா...??? சிறிது திகைத்தேன் .

"" ஆன்மாவானது , பிறப்பற்றது , வளர்தலற்றது , அழிவற்றது ,நோயில்லாதது ,இறப்பில்லாதது ,ஆண், பெண் பேதமற்றது , சாதி என்பதே இல்லாதது , இனபேதமற்றது, நிறமில்லாதது, வாள் அதை அறுக்காது , ஈட்டி அதை துளைக்காது , காற்று உலர்த்தாது , தண்ணீர் நனைக்காது , நெருப்பு சுடாது , சூரியனின் தகதகப்பும் கொளுத்தாதுவென "" எப்போதோ படித்த ஞாபகமென்றேன்.

அவ்வாறெனில் மறுபடியும் நீ யார் ..??? நான் யாரென்று...??? என்னிடம் கேள்வி எழுப்பினார்., நான் ..நான் ... தடுமாறினேன் , நான் கவிஞன் என்பதை தாண்டினால் , எல்லா நேரத்திலும் நல்ல மனிதனா சற்று மௌனித்தேன் , பின் தெளிவு பெற்று நீங்களே ஆன்மாவின் ரூபமெனில் என்னுள்ளும் , என்போன்ற சக மனிதனுள்ளும் நீவீர் இருக்கிறீர்களா என்றேன். ஆம் என்றார் , அவ்வாறெனில் மனிதர்கள் எப்படி நரகம் செல்ல முடியுமென்றேன்.

எந்த உயிரினமும் தன் இனத்தை தானே அழிக்கும் கொடுமை புரியாது , ஆனால் மனிதன் ???, மனித குணம் மறைந்து மிருகங்களின் குணங்கள் மிகும் போது ஆன்மா உன்னுள் இருப்பதயே நீ மறக்கிறாய், அன்று நான் உனக்கு புலப்பட மாட்டேன் , என்று என்னை நீ உணர்கிறாயோ அன்று உன்னை நீ உணர்வாய். என்று உன்னுள் ஆன்மா உள்ளதென்று நம்புகிறாயோ அன்று உன்னை சுற்றியுள்ள நரகத்தை நீ சொர்க்கமாக்குவாய் . பாம்புகளும் , கீரிகளும் பாசம் கொள்ளும் , மான்களும் , புலிகளும் கைகோர்க்கும் ,மலர்கள் பூக்கும் ஓசைகளை மனம் உணரத்தொடங்கும் , பட்சிகளின் பாசைகள் புரியத்துவங்கும் ,மனிதன் தன் ஆறறிவை தாண்டி புதிய அறிவுகளை தேடி பயணிப்பான் , அன்று நீ , நானாவாய் ? அன்று உலகத்தில் வெளிச்சங்கள் மட்டுமே நிலைபெற்றிருக்கும் , குளிர்ந்த நீரில் தெளிந்து நிற்கும் கூழாங்கற்களைப் போல் உண்மைகளை மட்டுமே நீ பிரதிபலிப்பாய் . நான் ஏதோ புரிந்ததாய் விக்கித்து நின்றேன்.

நீ ... நீயாக இரு ? , உன் பிறவியின் இரகசியம் தேடு , ஏன் மனிதபிறவி என்று சுய தேடலை முடுக்கு , அதை நோக்கியே எப்போதும் நகரு , உன்னில் நானிருப்பதை என்றும் மறவாதேயென்றார். மெல்ல சாளரத்தை தாண்டி சூரிய சுடரொளி என் கண்களை தழுவ திடுக்கிட்டு விழித்தேன். வெளிச்சம் உள்ளமெங்கும் மெல்ல ஊடுருவி காதுகள் எதையோ கூர் பெற்று கேட்கத் தொடங்கிற்று, காற்றில் மிதந்து வரும் இனிய கீதமாய் என் சக மனிதனின் சாகாத வரிகள் செவிகளுக்குள் இறங்கியது.
"" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ""
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (23-Feb-15, 7:40 am)
Tanglish : naan yaar
பார்வை : 709

மேலே