இதுவும் காதல் தான்

காதல் பெண்ணே...



உன்னோடு நான் பேச,
என் பாஷை புரியவில்லையா...?
எனக்கு கண்ணீர் வரவில்லை என்பதாலே,
என் காதல் அறியவில்லையா...?

உன் கூந்தல் உதிர்த்த மல்லிகையை
பல இரவில் ஏந்தியிருக்கிறேன்...
நானாக என்றும் உன்னை தொட்டதேயில்லை...
நீயாக தொட நான் ஏதும் மறுப்பதில்லை...

கடல் கடந்த உன் கணவன்
வருடத்தில் ஒன்றரை மாதம்
வந்துபோக,
மீதமுள்ள மாதமெல்லாம்
நான் தானே உன் துணையாய்....

என் மீது தலை சாய்த்து
நீ படர - அப்பப்பா
சுவாசிக்க நான் மறந்தேனடி....
உன் கணவனில்லா இரவுகளில்
நான் தானே மணவாளன்...

குழந்தை ஏதும் பிறக்கவில்லை என
நீ கலங்கி கண்ணீர் விடும்
தருணம் என் மனதில்,
என்னால் மட்டும் முடிந்திருந்தால்
பிள்ளை பெற்று கொடுத்திருப்பேன்...

உன் கட்டிலில்,
உன் கணவனை விட
அதிக இரவு உன்னோடு நான்...
உன் மார்பு கூட்டின் சுகம்
அவனை விட நான் நன்கறிவேன்...

எனை கட்டியனைத்தாய்...
கண்ணீரில் நனைத்தாய்...
அவனில்லா பொழுதெல்லாம்
ஆறுதல் நான் தான் என
நீ ஆயிரம் முறை சொல்லியிருப்பாய்.....

நீ எனை காதலோடு
நினைத்தாயோ நான் அறியேன்...
நான் காதலிக்க கற்றுக்கொண்டதே,
உன்னால் தானடி......


இன்றோ எனை தெருவில் எறிந்து விட்டாய்...
புதிதாய் தலையனை ஏதும்
வாங்கிவிட்டாயோ...

நான் தலையணை என்பதாலே
எனக்கு உணர்வில்லை
என நீ நினைத்தாயோ...

காதல் பெண்ணே....

தலையணையின் கண்ணீர்...

எழுதியவர் : கவி மணி (26-Feb-15, 8:51 am)
சேர்த்தது : Kavi MANI
பார்வை : 119

மேலே