அறவழி ஆற்றுவம்
அறவழி ஆற்றுவம்!
ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.!
இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்து
நன்னிலை நின்று வாழ்க சிறந்து.!
அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டு
உச்சம் காண உன்னில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து.
எச்சம் வாழ வாழ்க முயன்று.
தன்னைத் தாழ்த்தும் தாழ்மை அகற்று!.
உன்னை ஏற்றும் உள்ளறி வேற்று.!
பின்னை பயத்தின் பேதமை விடுத்து
முன்னை முயன்று வாழ்க முடித்து!.
உன்னை நம்பு அதுவே தெம்பு
தன்னை நெம்பு கோலாய் எம்பு.!.
உன்கை உலகை உருட்டும் கம்பி
தன்கை பலமே வாழ்க தம்பி!.
எடுப்பார் பிள்ளை சிறப்பார் இல்லை.
தொடுப்பார் உன்னை பொறுப்பார் இல்லை.
அடுத்தவர் உதவி கிடைப்பதை நம்பி
கெடுவதை உதறி வாழ்க தம்பி.
வண்ணத்துப் பூச்சி திண்ணத்தைப் பாரு!.
தன்னைத் தூக்க தான்செய்யும் போரு.
எண்ணத்தின் வலிமை கிழிபடும் கூடு.
விண்ணில் பறந்து வாழ்க நீடு!.
பொன்னிகர் மாட்சியா எண்ணுயர் ஆட்சியா?
பேய்களுக் கென்ன புரியும் போடா!.
மண்ணுயர் மாந்தர் விண்ணவர் சாட்சியா
மங்கலம் பொங்க வாழ்க வாடா!. .
திண்ணியர் ஆண்ட பூமி இதனை.
புண்ணியர் வாழ்ந்த மண்ணும் இதனை.
கண்ணிய நாடாய் காக்கும் போரினை
நண்ணிய அறவழி ஆற்றுவம் வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.