மதியொளி மயக்கமவள் - இராஜ்குமார்
மதியொளி மயக்கமவள்
~~~~~~~~~~~~~~~~~~~
இறுகிப் பிணைந்தாள்
இதய தமனிகளை
கூந்தலின் சாரலோடு ..
ஊன்றி உரசினாள்
நெற்றியின் நாளத்தை
படியிலோடிய பாதமாய் ...
உரித்து உதிர்த்தாள்
உணர்வின் தேகத்தை
ஊமையெனும் விரலால் ...
முறைத்து ரசித்தாள்
கருநிற நிழலை
கண்ணாடி சிலையென ..
பிழிந்து உதறினாள்
பிரியத்தின் தாகத்தை
துவைத்த தாவணியாய்...
புரட்டிப் புதைத்தாள்
புத்தியின் புலமையை
மதியொளி மயக்கமாய் ..
உறங்கி உளறினாள்
உள்மன உருக்கத்தை
போர்வைக்குள் புதையலாய் ..
ஓங்கி அறைந்தாள்
காதலின் கன்னத்தை
கவியெனும் கரத்தால் ...
உறுஞ்சிப் பருகினாள்
உயிரின் துளிகளை
உதட்டின் ஊடலோடு ..
- இராஜ்குமார்